5 ஆண்டுகளாக இல்லாத ஊருணியை தூர் வாரிய ஊராட்சி நிர்வாகம்
கோவில்பட்டியில் இல்லாத ஊருணிக்கு கடந்த 5 ஆண்டுகளாக தூர்வாருவதாக கூறி, ஊராட்சி நிர்வாகம் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது.
நடிகர் வடிவேலுவின் கிணற்றை காணோம் காமெடியை போல் தான் கோவில்பட்டியிலும் ஊருணியை காணவில்லை என்பது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தெரியவந்துள்ளது.
கோவில்பட்டி அருகே உள்ள பழைய அப்பனேரியை சேர்ந்த சீத்தாராமன் என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெற்ற தகவலில், ருத்திரப்ப நாயக்கர் ஊருணியை தூர்வார பல ஆயிரம் ரூபாய் செலவிடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை பார்த்த சீத்தாராமன், ருத்திரப்ப நாயக்கர் ஊருணியா? என சந்தேகம் அடைந்து, அந்த ஊருணி எங்கு உள்ளது? என மீண்டும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேட்டுள்ளார். அப்போது, பழைய அப்பனேரி கிராமத்திற்கு தென்புறம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அங்கு சென்று பார்த்தபோது, ஊருணியை காணவில்லை.
இதுதொடர்பாக குருவிகுளம் ஊராட்சி ஒன்றியத்தில் சீத்தாராமன் கேட்டபோது, 13 ஏக்கர் கொண்ட ருத்திரப்ப நாயக்கர் ஊருணியில் 314 நாட்கள் பணியாற்றியதற்காக சுமார் 55,000 ஊதியம் வழங்கப்பட்டு இருப்பதாக ஆணித்தரமாக தெரிவித்துள்ளனர்.
இதனால், குழப்பமடைந்த சீத்தாராமன் ருத்திரப்ப நாயக்கர் ஊருணியின் வரைபடம் கேட்டு, கோவில்பட்டி தாசில்தார் அலுவலத்தில் விண்ணப்பம் செய்தார். அப்போது, அப்படி ஒரு ஊருணியே இல்லை என கோட்டாட்சியர் அலுவலகம் சான்றிதழ் அளித்துள்ளது.
இதன்மூலம், இல்லாத ஊருணிக்கு தூர்வாரியதாக கணக்கு காட்டியதோடு, 100 நாள் வேலைவாய்ப்பில் பணிபுரிபவர்களின் அடையாள அட்டைகளை வைத்து ஊராட்சி நிர்வாகம் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாக சீத்தாராமன் குற்றம்சாட்டியுள்ளார்.