தமிழகம்

என்.எல்.சி இல்லாவிட்டால் தமிழகம் இருண்டுவிடாது… வெளியேற்ற வேண்டும்- : அன்புமணி ராமதாஸ்

நெய்வேலியில் உள்ள அனல் மின்நிலையங்களில் பழுப்பு நிலக்கரிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதாகவும், அதனால், 1,000 மெகாவாட் அளவுக்கு மின்னுற்பத்தி பாதிக்கப்பட்டிருப்பதாகவும் என்.எல்.சி நிறுவனத்தின் தலைவர் பிரசன்னகுமார் தெரிவித்திருக்கிறார். என்.எல்.சி தலைவரின் இந்தக் கருத்து உள்நோக்கம் கொண்டது என்றாலும் கூட, என்.எல்.சி நிறுவனத்தை தமிழ்நாட்டை விட்டு வெளியேற்றினால் கூட, அதனால் தமிழ்நாடு இருண்டு விடாது என்பதை தம்மையும் அறியாமல் அவர் ஒப்புக்கொண்டிருக்கிறார் என அன்புமணி ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

கடலூரில் செய்தியாளர்களிடம் பேசிய என்.எல்.சி நிறுவனத் தலைவர் பிரசன்னகுமார், உடனடியாக நிலங்கள் கையகப்படுத்தப்படவில்லை என்றால், தொடர்ந்து மின்சாரம் உற்பத்தி செய்ய முடியாது என்றும் இப்போதே மின்சார உற்பத்தி குறைந்து விட்டதால் தமிழ்நாட்டுக்கு வழங்கப்படும் மின்சாரத்தின் அளவு குறைக்கப்பட்டு விட்டதாகவும் தெரிவித்திருக்கிறார். என்.எல்.சி தலைவர் தெரிவித்த கருத்துகள் அபத்தம் என்றாலும் கூட, அதன் பின்னணியில் கடலூர் மாவட்ட மக்களுக்கு எதிரான சதித்திட்டம் இருக்கிறது.

என்.எல்.சி நிறுவனத்தின் விரிவாக்கத்திற்காக தங்களின் விளைநிலங்களை வழங்க மறுத்து வரும் கடலூர் மாவட்ட உழவர்கள், தங்களின் வாழ்வாதாரங்களை பாதுகாத்துக் கொள்வதற்காக பாட்டாளி மக்கள் கட்சியுடன் இணைந்து போராடி வருகின்றனர். அவர்கள் மீது அடக்குமுறைகளை கட்டவிழ்த்து விட்டு, நிலங்களை கையகப்படுத்தும் முயற்சியில் என்.எல்.சி நிறுவனமும், கடலூர் மாவட்ட நிர்வாகமும் ஈடுபட்டாலும் கூட, அவர்களுக்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. அதனால் தான், கடலூர் மாவட்ட மக்கள் நிலங்களைத் தராவிட்டால், மின்னுற்பத்தி கடுமையாக பாதிக்கும்; அதனால் தமிழ்நாட்டிற்கு மின்சாரம் கிடைக்காது என்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்த என்.எல்.சி முயல்கிறது.

பத்தாண்டுகளுக்கு முன் கூடங்குளம் அணு உலைக்கு எதிராக அங்குள்ள மக்கள் தொடர் போராட்டம் நடத்திய போது, கூடங்குளம் அணு உலை திறக்கப்படாதது தான் தமிழ்நாட்டில் மின்வெட்டு ஏற்படுவதற்கு காரணம் என்று அப்போதிருந்த மத்திய, மாநில அரசுகளால் செய்திகள் பரப்பப்பட்டன. அதன் மூலம் ஒட்டுமொத்த தமிழக மக்களையும் கூடங்குளம் மக்களுக்கு எதிராக திருப்பி விட வேண்டும் என்பது தான் அரசுகளின் திட்டமாக இருந்தது. அதே உத்தியை பயன்படுத்தி கடலூர் மாவட்ட உழவர்களுக்கு எதிராக தமிழக மக்களை திருப்பி விடுவதற்கான சதித் திட்டத்தின் விதையைத் தான் என்.எல்.சி தலைவர் விதைத்திருக்கிறார். அதன்பின்னணியில் இருப்பவர்கள் யார்? என்பதை மக்கள் அறிவார்கள்.

மின்னுற்பத்திக்காக உழவர்களின் நிலங்களை பறிக்க வேண்டும் என்பதே மனிதநேயமற்ற கொள்கை ஆகும். தமிழ்நாட்டிற்கு தேவையான மின்சாரத்தை உற்பத்தி செய்ய ஏராளமான வழிமுறைகள் உள்ளன. எரிவாயு மின்சாரம், உயிரி வாயு மின்சாரம், காற்றாலை மின்சாரம், சூரிய ஒளி மின்சாரம், நீர் மின்சாரம், கடல் அலை மின்சாரம், கழிவுகள் மூலம் தயாரிக்கப்படும் மின்சாரம் என பல வழிகளில் மின்சாரம் தயாரிக்க முடியும். ஆனால், உணவு தயாரிக்க ஒரே வழி தான் உள்ளது. நிலங்களில் விவசாயம் செய்து உணவு தானியங்களை உற்பத்தி செய்தால் தான் மக்கள் பசியின்றி வாழ முடியும். எனவே, நிலங்களை அழித்து மின்சாரம் தயாரிக்கும் கொள்கை மனிதகுலத்திற்கு எதிரானது; அது கைவிடப்பட வேண்டும்.

1950-களில் நெய்வேலி மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளைச் சேர்ந்த 23 கிராம மக்கள் தங்களின் வாழ்வாதாரமாக விளங்கிய நிலங்களை வழங்கியதால் தான் என்.எல்.சி நிறுவனம் அமைக்கப்பட்டது. அப்போது உழவர்கள் தங்களின் நிலங்களை வழங்கியதன் நோக்கம் தமிழ்நாட்டுக்கு மின்சாரம் கிடைக்க வேண்டும் என்பது தான். ஆனால், என்.எல்.சி நிறுவனம் பேராசை காரணமாக 20 ஆண்டுகளுக்கும் மேலாக தேவையை விட பல லட்சம் டன் நிலக்கரியை வெட்டி எடுத்து வெளிச்சந்தையில் விற்பனை செய்து வருகிறது.

என்.எல்.சியின் அனல் மின் நிலையங்கள் மூலம் கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை தமிழகத்திற்கு சுமார் 1,500 மெகாவாட் மின்சாரம் ஒதுக்கப்படும்; ஆனால், அதில் சராசரியாக 900 மெகாவாட் அளவுக்கு தான் கிடைக்கும். ஆனால், கடந்த சில நாட்களாக என்.எல்.சியிடமிருந்து தமிழகத்திற்கு ஒதுக்கப்படும் மின்சாரத்தின் அளவு 685.80 மெகாவாட்டாக குறைக்கப்பட்டு விட்டது. அதிலிருந்து தமிழகத்திற்கு கிட்டத்தட்ட 407 மெகாவாட் அளவுக்கு தான் மின்சாரம் கிடைத்து வருகிறது. என்.எல்.சி வழங்கும் மின்சாரம் 55 விழுக்காட்டிற்கும் மேல் குறைக்கப்பட்டாலும் கூட, அதனால் தமிழகத்தின் எந்த மூலையிலும் மின்வெட்டு ஏற்படவில்லை. தமிழ்நாட்டில் நேற்றைய அதிகபட்ச மின் தேவையான 15,204 மெகாவாட் எந்த சிக்கலும் இல்லாமல் சமாளிக்கப்பட்டிருக்கிறது. என்.எல்.சி வழங்கும் மின்சாரம் முற்றிலுமாக நிறுத்தப்பட்டாலும் கூட, அதனால் தமிழ்நாட்டிற்கு சிறு துளி அளவுக்கும் பாதிப்பு ஏற்பட வாய்ப்பில்லை.

தமிழகத்தின் சராசரி மின்தேவை 15,000 மெகாவாட் மட்டும் தான். அதிகபட்சமாக 18,000 மெகாவாட் வரை தேவைப்படலாம். ஆனால், தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த மின்னுற்பத்தித் திறன் 36,000 மெகாவாட். இது தேவையை விட இரு மடங்கு அதிகம் ஆகும். இதில் என்.எல்.சி வழங்குவது 800 முதல் 1,000 மெகாவாட் வரை என்.எல்.சி வழங்குகிறது. அதற்காக அந்த நிறுவனம் இதுவரை 25,000 குடும்பங்களின் வாழ்வாதாரங்களை பறித்திருக்கிறது. இப்போது மேலும் 17,000 குடும்பங்களின் வாழ்வாதாரங்களை பறிக்க என்.எல்.சி துடிக்கிறது. அதை அனுமதிக்க முடியாது.

உண்மை நிலை இவ்வாறு இருக்கும் போது, சொந்த மண்ணின் உழவர்களுக்கு துரோகம் செய்து விட்டு, என்.எல்.சி நிறுவனத்தை தமிழ்நாடு அரசு சுமந்து கொண்டிருக்க வேண்டியதில்லை;

என்.எல்.சி நிறுவனத்தால் உழவர்களுக்கும், இயற்கைக்கும், சுற்றுச்சூழலுக்கும், மக்களின் நலவாழ்வுக்கும் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பல்வெறு தருணங்களில் விரிவாக பட்டியலிட்டிருக்கிறேன். எனவே, என்.எல்.சிக்காக கடலூர் மாவட்ட உழவர்களை அச்சுறுத்தி நிலங்களை பறிப்பதை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும்; அந்த நிறுவனத்தை தமிழ்நாட்டிலிருந்து வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button