தமிழகம்

முன்னாள் மேயர் கொலை வழக்கு: திமுக பெண் பிரமுகரின் மகன் கைது?

திருநெல்வேலி மாவட்டத்தின் முதல் பெண் மேயரான உமா மகேஸ்வரி கடந்த 23ம் தேதி அவரது வீட்டில் படுகொலை செய்யப்பட்டார். உமா மகேஸ்வரி, அவரது கணவர் முருகசங்கரன், வீட்டு பணிப்பெண் மாரியம்மாள் ஆகிய மூவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்திலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
உமா மகேஸ்வரியின் வீடு அமைந்துள்ள பகுதி குடியிருப்புகள் குறைவான பகுதியாக உள்ளது. சுமார் 500 மீட்டர் தூரத்தில் தான் அடுத்தடுத்த வீடு அமைந்துள்ளது. மேலும் முன்னாள் மேயர் வீடு, அருகாமையில் சிசிடிவி கேமராக்கள் இல்லாததால் இந்த கொலையில் அடுத்தடுத்த நடவடிக்கைகளை மேற்கொள்வது காவல் துறையினருக்கு பெரும் சவாலாக இருந்தது.

தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் 3 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை தேடி வந்தனர்.
சொத்துப்பிரச்னையா அல்லது அரசியல் ரீதியான கொலையா என பல்வேறு கோணங்களில் விசாரணையை முடுக்கிவிட்டும், சிசிடிவி கேமிராக்கள், செல்போன் அழைப்புகள் உள்ளிட்ட பலவற்றை அலசியும் சிறு துப்பு கூட கிடைக்காததால் போலீசார் திணறி வந்தனர் தேர்தலில் சீட் வாங்குவதில் கொலை நடந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் மதுரையை சேர்ந்த திமுக பிரமுகர் சீனியம்மாள், உமா மகேஷ்வரியின் சகோதரர் மகன் பிரபு உட்பட 100 க்கும் மேற்பட்டோர் விசாரணை வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.

இந்த விசாரணையில் கொலை நடந்த அன்று உமா மகேஷ்வரியின் வீட்டின் அருகே உள்ள உணவகத்தில் சந்தேகத்திற்கிடமான வகையில் ஸ்கார்ப்பியோ கார் ஒன்று நீண்ட நேரம் நின்றிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், அந்த காரின் உரிமையாளருக்கு சொந்தமான செல்போன் நம்பர் அங்கிருந்த டவரில் அதிக நேரம் இருந்தது தெரியவந்தது. விசாரணையில் கார் மற்றும் செல்போன் எண்ணின் உரிமையாளர் திமுக பெண் பிரமுகர் சீனியம்மாளின் மகன் கார்த்திகேயன் என்பது தெரியவந்தது.


இதையடுத்து, கார்த்திகேயனை பிடித்து போலீசார் விசாரித்ததில், உமா மகேஷ்வரி, அவரது கணவர் மற்றும் பணிப்பெண்ணை கூலிப்படையை ஏவி கொன்றதை ஒப்புக் கொண்டதாக கூறப்படுகிறது. சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட சீனியம்மாள் தரப்பினர் இரண்டு முறை வாய்ப்புக் கேட்டு 50 லட்சம் ரூபாய் வரை உமா மகேஷ்வரியிடம் பணம் கொடுத்ததாகவும். சீட் கிடைக்காததால் ஆத்திரத்தில் அவரைக் கொன்றுவிட்டதும் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதையடுத்து கார்த்திகேயனை கைது செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கொலையில் தொடர்புடைய மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தலைமறைவாக உள்ள கூலிப்படையை சேர்ந்த சிலரை தேடி வருகின்றனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button