மணல் திருட்டு கும்பலுக்கு ஆதரவாக, லாரியை விடுவிக்குமாறு கோரிக்கை விடுத்த வட்டாட்சியர் ! ஆவேசத்தில் விவசாயிகள்..!
திருப்பூர் மாவட்டம் பல்லடம் தாலுக்காவிற்குட்பட்ட கரைப்புதூர் ஊராட்சியில் அமைந்துள்ளது பொன் நகர். இங்கு மழை காலங்களில் மழைநீர் சேகரிக்க அடப்புக்காட்டு குட்டை உள்ளது. இந்நிலையில் சிறு விவசாயிகள், மண்பாண்டம் தொழிலில் ஈடுபடுவோர் பயன்படுத்த வண்டல்மண் மற்றும் களிமண் இலவசமாக குறிப்பிட்ட அளவு குளம் குட்டைகளில் எடுத்துச்செல்ல தமிழ்நாடு அரசு அனுமதி அளித்திருந்தது.
இதனிடையே திருப்பூர் மாவட்டத்தில் பெரும்பாலான குளம் குட்டைகளில் வண்டல் மண்ணோ, களிமண்ணோ காணப்படாத நிலையில் கிராவல் மண் சட்டவிரோதமாக வெட்டி எடுத்துச்சென்று விற்பனை செய்வதாக விவசாயிகளும், பொதுமக்களும் குற்றம்சாட்டி பல இடங்களில் மண் அள்ளுவதை தடுத்து நிறுத்தியுள்ளனர். இதனிடையே பொன்நகர் அடப்புக்காட்டு குட்டையில் கடந்த இரு தினங்களாக லாரிகளில் தொடர்ச்சியாக கிராவல் மண்ணை கிட்டாச்சி இயந்திரம் மூலமாக அள்ளி செல்வதை கண்ட பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மண் ஏற்றிச்சென்ற லாரிகளை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். வண்டல் மண்ணோ, களி மண்ணோ இல்லாத குட்டையில் கிராவல் மண் வெட்டி சட்டவிரோதமாக விற்பனை செய்ய எடுத்துச்செல்வதாக குற்றம் சாட்டினர்.
அதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்ட பல்லடம் வட்டாட்சியர் ஜீவா, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனர் ஈசன் முருகசாமி மற்றும் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். அப்போது பேசிய வட்டாட்சியர் கிராவல் மண் அள்ளியது தவறுதான் இந்த ஒரு முறை விட்டு விடுங்கள் என மண் அள்ளியவர்களுக்கு ஆதரவாக பேசி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பல்லடம் காவல் ஆய்வாளர் லெனின் அப்பாதுரை, வருவாய்துறை புகார் கொடுக்கும் பட்சத்தில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்துள்ளார்.
விவசாயிகள், மண்பாண்டம் செய்வோரின் வாழ்க்கைதரம் முன்னேர அரசு அறிவித்திருக்கும் திட்டத்தை விதிமுறை மீறி செயல்படுவோர் மீது வட்டாட்சியர் நடவடிக்கை எடுக்காமல் ஆதரவாக செயல்பட்டது பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மத்தியில் பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.