திருப்பூரில் மத்திய அரசில் வேலை வாங்கித்தருவதாக லட்சக்கணக்கில் பணத்தை மோசடி செய்த ஓய்வு பெற்ற எல்லை பாதுகாப்பு படை ராணுவ வீரரிடம் தேனியை சேர்ந்த சலவை தொழிலாளி பணத்தை இழந்து தவிப்பது பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியை அடுத்த அழகாபுரி இந்திரா நகரை சேர்ந்தவர் பால்பாண்டி.. சலவை தொழில் செய்துவரும் பால்பாண்டிக்கு மோகன் தாஸ், தனராஜ் என இரு மகன்கள். முதல் மகன் மோகன் தாஸ் மெக்கானிக்கல் துறையில் டிப்ளமோ படித்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு திருப்பூர் செவ்வந்தம்பாளையம் பகுதியில் ஓய்வு பெற்ற ராணுவ வீரர் குவேந்திரன் நடத்தி வந்த ஸ்ரீ சிவன் ஆர்மி கோச்சிங் சென்டரில் பயிற்சி அளித்து மத்திய அரசில் வேலை வாங்கித்தருவதாக வந்த கவர்ச்சி விளம்பரத்தை கண்டு மோகன் தாஸ் தொடர்பு கொண்டுள்ளார். பயிற்சி கட்டணமாக ரூ.35 ஆயிரம் செலுத்தினால் மூன்றே மாதத்தில் அரசு வேலை உறுதி என குவேந்திதன் உறுதி அளித்துள்ளார். இதனை அடுத்து மோகன்தாஸின் தந்தை பால்பாண்டி ரூ.35 ஆயிரத்தை செலுத்தியுள்ளார்.
பின்னர் மூன்று மாதம் கடந்த நிலையில் வேலை கிடைக்காததால் குவேந்திரனை அணுகிய பால்பாண்டியை மூளை சலவை செய்து பல தவணைகளாக ரூ.14 லட்சத்தை குவேந்திரன் பறித்துள்ளார். பின்னர் டெல்லிக்கு மோகன் தாஸை அழைத்துச் சென்று மருத்துவ பரிசோதனை மேற்கொண்டுள்ளனர். பின்னர் இந்திய உணவு கழகத்தில் பணி நியமன ஆணையை போலியாக தயாரித்து, டெல்லி அலுவலகத்தில் இருந்து அனுப்புவது போல் அனுப்பபட்டுள்ளது. அதனைத்தொடர்ந்து இரண்டு மாதம் பஞ்சாப் மாநிலத்தில் பயிற்சி அளிக்கப்பட்டு மத்திய அரசின் அடையாள அட்டையும் வழங்கப்பட்டுள்ளது.
பின்னர் தேனி திரும்பிய மோகன்தாஸ் பணியில் சேருவதற்காக குபேந்திரனை தொடர்புகொண்டு கேட்டபோது முன்னுக்குபின் முரணாக பதில் அளித்ததால் அதிர்ச்சி அடைந்த பால்பாண்டி ஒரு கட்டத்தில் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டுள்ளார். ஆனால் பணத்தை கொடுக்காமல் காசோலைகளாக குவேந்திரன் வழங்கியுள்ளார். அதை வங்கியில் செலுத்தியபோது பணம் இல்லாமல் திரும்பியது. இதனை அடுத்து தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த பால்பாண்டி திருப்பூருக்கு நேரில் வந்து குவேந்திரனை தொடர்புகொள்ள முயன்றபோது முடியவில்லை. அதனைத்தொடர்ந்து சென்னைக்கு சென்று காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.
மேலும் கடன் கொடுத்தவர்கள் பால்பாண்டிக்கு நெருக்கடி தரவே கேரளாவிற்கு சிறிது காலம் சென்று தங்கியுள்ளார். இதனிடையே திருப்பூரை சேர்ந்த ஒருவரிடம் மத்திய அரசில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.42 லட்சம் மோசடி செய்ததாக மத்திய பொருளாதார குற்றப்பிரிவில் புகார் மனு அளிக்கப்பட்டு குவேந்திரன் கைது செய்யப்பட்டார். இதனிடையே தேனியை சேர்ந்த சலவை தொழிலாளி பால்பாண்டி தற்போது வரை தான் ஏமாந்த ரூ. 14 லட்சத்தை மீட்க முடியாமல் தவிப்பது பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதில் ஹைலைட்டான விசயம் என்னவென்றால், வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவது போல் பால்பாண்டியை அணுகிய திருப்பூரை சேர்ந்த பத்திரிக்கை நிருபர் ஒருவர் குபேந்திரனிடம் பஞ்சாயத்து செய்து பணத்தை வசூல் செய்து தருவதாக கூறி பால் மீது சத்தியம் செய்து ரூ.10 ஆயிரம் வாங்கி கொண்டு சென்றதோடு சரி, இதுவரை தொடர்பு எல்லைக்கு அப்பால் தான் உள்ளதாகவும் கூறப்படுகிறது..