தீயணைப்புத் துறையினரின் அலட்சியத்தால் பலியான மாணவன் !

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த பருவாய் அருகே உள்ள காந்திநகர் பகுதியில் வசித்து வரும் சக்திவேல், நாச்சம்மாள் தம்பதியருக்கு மூன்று பெண் குழந்தைகள், மணிகண்டன் என்கிற ஆண் குழந்தை. கடைக்குட்டியான மணிகண்டன் காரணம்பேட்டை அரசுப்பள்ளியில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி தற்போது தேர்வு முடிவிற்காக காத்திருக்கிறார். இந்நிலையில் காலை சகோதரி மாசிலாமணி மற்றும் அவரது தோழிகளுடன் அருகில் உள்ள அனைத்தோட்ட குட்டைக்கு குளிப்பதற்காக சென்றுள்ளனர். இதனிடையே உடன் சென்ற மணிகண்டன் குட்டை ஓரமாக விளையாடிக்கொண்டிருந்த நாய்குட்டியை காப்பாற்ற சென்றபோது தவறி குட்டையில் விழுந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார்.

இதனை கண்ட மணிமேகலை அங்கிருந்த தென்னை மட்டையை தண்ணீரில் போட்டு காப்பாற்ற முயன்றார். ஆனால் மணிகண்டன் நீரில் மூழ்கி தத்தளிக்கவே ஊருக்குள் சென்று தம்பியை காப்பாற்ற அழைத்துள்ளார். இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த 10 த்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் நீரில் குதித்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்த சிறுவனை மீட்டு முதலுதவி அளித்துள்ளனர். இதனிடையே சிறுவன் நீரில் தவறி விழுந்தது குறித்து பல்லடம் தீயணைப்பி துறைக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் சிறுவனை நீரில் இருந்து மீட்டு உயிரை காப்பாற்ற போராடிக்கொண்டிருந்த போது எந்த ஒரு உதவியும் செய்யாமல் சிறுவன் குறித்த தகவல்களை பெற்று திரும்பியுள்ளனர். இதனிடையே உயிருக்கு போராடிக்கொண்டிருந்த மணிகண்டனை சிகிச்சைக்காக 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சூலூர் அரசு மருத்துவமனைக்கு இரு சக்கர வாகணம் மூலமாக அழைத்து சென்றுள்ளனர். அதனைத் தொடர்ந்து மருத்துவமனையில் மணிகண்டனை பரிசோதித்த மருத்துவர்கள் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் சிறுவன் பலியானது குறித்து வழக்கு பதிவு செய்த காமநாயக்கன்பாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், அப்பகுதியை சேர்ந்த எலக்ட்ரீசன் உதயகுமார் கூறும் போது.. மணிகண்டன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த போது முதலுதவி அளித்ததாகவும் தீயணைப்பு துறையினர் மாணவனின் உடலை கூட தொடாமல் சென்றுவிட்டதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில் மானுக்கு காட்டும் கருணையை மாணவனுக்கு காட்டியிருந்தால் அவர்கள் வந்த வாகனத்தில் ஏற்றிச்சென்று உயிரை காப்பாற்றி இருக்கலாம் என தனது ஆதங்கத்தை தெரிவித்தார்.

மேலும் ஊருக்கு ஒதுக்குபுறமாக அமைந்திருக்கும் குட்டையில் இருந்து மாணவனை பைக்கில் வைத்து காப்பாற்ற தூக்கி செல்லும் புகைப்படம் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாளை பிறந்தநாளை கொண்டாட இருந்த நிலையில் பயர் சர்வீஸ் அலட்சியத்தால் பள்ளி மாணவன் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.