அவதிப்படும் பொதுமக்கள்: கண்டு கொள்ளாத அதிகாரிகள்
திருப்பூர் மாவட்டம் குடிமங்கலம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பெதம்பம்பட்டி நான்கு சாலைகள் சந்திக்கும் இடத்தில் தினசரி சுமார் 20 ஆயிரம் பேருக்கும் மேல் வந்து செல்கிறார்கள். இந்த இடம் எப்போதும் பரபரப்பாக காணப்படும். ஆனால் இங்கு ஒரு பேருந்து வந்து நின்று ஆட்களை ஏற்றி இறக்கினால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
பேருந்து நிற்பதற்கு தனியாக பேருந்து நிறுத்தம் கிடையாது. ஏற்கனவே இருந்த பேருந்து நிறுத்தமும் இங்கிருந்து அகற்றப்பட்டு விட்டது.
இங்கிருந்து கேரளா, கோவை, திருச்சி போன்ற பெருநகரங்களுக்குச் செல்லும் பேருந்துகள் இந்த சந்திப்பின் வழியாக கடந்து செல்கின்றன. அதனால் பொதுமக்களின் கூட்டம் அதிகமாக இருக்கும் இந்த இடத்தில் அடிப்படைத் தேவைகளை அரசு செய்து கொடுக்கவில்லை. பொதுமக்களின் இன்றியமையாத தேவையான கழிப்பறை வசதி, குடிநீர் வசதி, கோடை காலங்களில் இளைப்பாற நிழற்குடை வசதிகள் எதுவுமே இந்த இடத்தில் இல்லாததால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகிறார்கள்.
இந்த நான்கு முனை சந்திப்பிற்கு மிக அருகிலேயே பஞ்சாயத்து யூனியன் அலுவலகம் உள்ளது. யூனியன் ஆபிஸிற்கு தினசரி ஏராளமான பொதுமக்களும், முதியோர்களும் வந்து செல்கிறார்கள். சாலை ஓரங்களில் கடுமையான வெயிலையும் பொருட்படுத்தாமல் கைக்குழந்தையுடன் பெண்களும், முதியோர்களும் காத்திருந்து தங்கள் ஊர்களுக்கு பேருந்துகளில் ஏறி இறங்குகிறார்கள். யூனியன் ஆபிஸ் அலுவலர்கள் சாலை ஓரங்களில் கடைகள் வைத்திருப்பவர்களிடம் பணத்தைப் பெற்றுக் கொண்டு பேருந்து நிறுத்தம் அமைத்தால் அவர்கள் வியாபாரம் பாதிக்கும் என்பதால் பொதுமக்களுக்கு எந்தவித வசதியும் செய்து கொடுக்க முன்வர மறுக்கிறார்கள். சாலை ஓரங்களில் நடப்பட்டிருக்கும் மின்கம்பங்களும் எப்போது சாயுமோ என்ற அச்சத்தில் பொதுமக்கள் சாலையை கடந்து செல்கிறார்கள். இது சம்பந்தமாக சம்பந்தப்பட்ட மின்வாரிய அலுவலகத்தில் புகார் கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்தப்பகுதியில் ஏராளமான குப்பை கழிவுகளை கொட்டி துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். இதுசம்பந்தமாக சமூக ஆர்வலர்கள் மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக இருக்கிறார்கள். இதனால் பொதுமக்களின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யும் குளமும் மாசடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்தப் பகுதியில் இருக்கும் பிரச்சனைகளை அரசு அதிகாரிகள் உடனடியாக தீர்த்து வைப்பார்களா? என்ற எதிர்பார்ப்பில் பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் காத்திருக்கிறார்கள்.