யார் அடுத்த டான்? : தொடரும் பழிக்கு பழி கொலைகள்… : தீர்வு என்ன?
திருவள்ளூர் அருகே வெடிகுண்டு வீசியும் அரிவாளால் வெட்டியும் கொலை செய்யப்பட்டவர்கள் இருவரும் காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும், முன்னாள் ரவுடி ஸ்ரீதரின் இடத்தைப் பிடிக்க ரவுடிகளுக்கிடையே நடந்துவரும் மோதலின் ஒரு பகுதியாக இந்தக் கொலைகள் அரங்கேறி இருப்பதும் தெரியவந்துள்ளது.
காஞ்சிபுரத்தில் கோலோச்சிவந்த ரவுடி ஸ்ரீதர், 2017-ல் கம்போடியாவில் தற்கொலை செய்துகொண்டான். ஸ்ரீதர் மறைவுக்குப் பிறகு காஞ்சிபுரத்தின் அடுத்த டான் யார் என்பதில் அவனது ஆதரவாளர்களுக்கிடையே போட்டி ஏற்பட்டது.
இந்த விஷயத்தில் ஸ்ரீதரின் கார் ஓட்டுநர் தினேஷ் மற்றும் ஸ்ரீதரின் மைத்துனர் தணிகாவுக்கும் இடையே பல ஆண்டுகளாகப் பகை இருந்து கொண்டிருக்கிறது. இதனால் இருதரப்பிலும் அடுத்தடுத்து கொலைகள் அரங்கேறிக் கொண்டே வருகின்றன. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் இருதரப்பிலும் தொடர்ந்து நடைபெற்ற கொலைகள் ஒட்டுமொத்த காஞ்சிபுரத்தையே பீதிக்கு உள்ளாக்கின.
இதனையடுத்து தனிப்படை அமைத்து களத்தில் இறங்கிய போலீசார், தினேஷையும் அவனது கூட்டாளியான தியாகு என்பவனையும் கைது செய்து குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்தனர்.
தணிகா தலைமறைவாக உள்ளதாகக் கூறப்படும் நிலையில், இருதரப்பிலும் கொலைகள் அரங்கேறுவது மட்டும் நின்றபாடில்லை. அந்த வகையில் அண்மையில் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் ஓடும் பேருந்தில் வைத்து, தினேஷின் நெருங்கிய கூட்டாளியான சதீஷ்குமார் என்பவன் கொலை செய்யப்பட்டான்.
இந்த நிலையில் திருவள்ளூர் அடுத்த பன்னூரில் இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் 6 பேர் கொண்ட கும்பலால் வெடிகுண்டு வீசியும் அரிவாளால் வெட்டியும் படுகொலை செய்யப்பட்டனர்.
முதற்கட்ட விசாரணையில், கொலையானவர்கள் தணிகாவின் கூட்டாளிகளான ஜீவா மற்றும் கோபி என்பது தெரியவந்துள்ளது. சதீஷ்குமாரின் கொலைக்குப் பழிக்குப் பழியாகவே இந்தக் கொலைகள் அரங்கேறியிருக்கக்கூடும் என்று சந்தேகிக்கும் போலீசார், தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
இந்த கொலை வழக்கில் தொடர்புடைய காஞ்சீபுரத்தை சேர்ந்த ராஜா, விக்னேஷ், அருண்குமார் ஆகிய 3 பேரை போலீசார் மடக்கி பிடித்தனர். அப்போது தப்பிக்க முயன்றதில் 3 பேரும் தவறி கீழே விழுந்தனர். இதில் அவர்களது காலில் முறிவு ஏற்பட்டது. அவர்களுக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு காலில் கட்டு போடப்பட்டது.
காஞ்சிபுரத்தில் தொடர்ந்து அரங்கேறி வரும் இந்த பழிக்குப் பழி கொலை சம்பவங்கள் எப்போது முடிவுக்கு வரும் என மக்கள் அச்சத்துடனும் ஏக்கத்துடனும் காத்திருக்கின்றனர்.
- நமது நிருபர்