சர்வ கட்சிகளின் சங்கமமாக உருவெடுத்திருக்கிறது தமிழ்நாடு சட்டமன்றம்!
2016ல் அமைந்த தமிழ்நாடு சட்டமன்றத்தில் அதிமுக, திமுக, காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய நான்கு கட்சிகளின் அதிகாரப்பூர்வ பிரதிநிதிகளே இடம்பெற்றிருந்தனர்.
கொங்கு இளைஞர் பேரவை, மனிதநேய ஜனநாயகக் கட்சி, முக்குலத்தோர் புலிப்படை ஆகிய மூன்று அமைப்புகளின் பிரதிநிதிகளும் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர்கள். அதன்பிறகு ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் டிடிவி தினகரன் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றிபெற்றார். அந்த வகையில் 2016 சட்டமன்றம் எட்டு கட்சிகளின் பிரதிநிதிகளை மட்டுமே கொண்டிருந்தது.
இடதுசாரிகளின் குரல் ஒலிக்காத சட்டமன்றம் என்று ஆதங்கப்பட்டார் அப்போதைய திமுக தலைவர் கருணாநிதி. அதேபோல, பாமக, மதிமுக, தேமுதிக, விசிக, பாஜக என தமிழகத்தின் முக்கியக் கட்சிகளின் பிரதிநிதித்துவமும் இருக்கவில்லை. ஆனால் தற்போது அமைந்திருக்கும் தமிழ்நாடு சட்டமன்றத்தில் பத்துக்கும் மேற்பட்ட கட்சிகள் மற்றும் அமைப்புகளின் நேரடி, மறைமுகப் பிரதிநிதிகள் இடம்பெற்றுள்ளனர்.
திமுக, அதிமுக என்கிற பிரதான கட்சிகளைத் தாண்டி, காங்கிரஸ், பாமக, விசிக, பாஜக, மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மனிதநேய மக்கள் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி, புரட்சி பாரதம் என மொத்தம் 13 கட்சிகளின் பிரதிநிதிகளைக் கொண்ட சட்டமன்றமாக தமிழக சட்டசபை உருவெடுத்துள்ளது. இவர்களில் மதிமுக, மனிதநேய மக்கள் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி ஆகிய மூன்று கட்சிகளின் உறுப்பினர்களும் உதயசூரியன் சின்னத்திலும், புரட்சி பாரதம் கட்சியின் உறுப்பினரான ஜெகன் மூர்த்தி இரட்டை இலை சின்னத்திலும் வெற்றி பெற்றுள்ளனர்.
அந்த வகையில், தற்போதைய தமிழ்நாடு சட்டமன்றம் சர்வ கட்சிகளின் சங்கமமாக உருவெடுத்துள்ளது. சித்தாந்த ரீதியாகப் பார்த்தால், திராவிடம், இந்திய தேசியம், இந்துத்துவம், இடதுசாரி, தமிழ்தேசியம், தலித்தியம் என பல சித்தாந்தங்களுக்கும் இடமளிக்கும் சட்டமன்றமாகவும் இந்த சட்டசபை உருவெடுத்திருக்கிறது என்றால் அது மிகையில்லை.