திருப்பூர் மாவட்டம் பல்லடம் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமா பந்தி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பல்லடத்தை அடுத்த குள்ளம்பாளையம் கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான கரித்தொட்டி ஆலை இயங்கி வருகிறது. இதனிடையே கரித்தொடி ஆலையில் இருந்து வெளியேறும் கழிவுநீர், நிலத்தடி நீரில் கலந்து நிறம் மாறி மாசு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்ட விவசாயிகள் இது குறித்து மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திடமும், வட்டாட்சியரிடமும் புகார் மனு அளித்துள்ளனர்.
புகாரின் பேரில் மேற்கொண்ட விசாரணையில், ஆலையின் அங்கீகாரம் மற்றும் அனுமதி குறித்த ஆவணங்களை சரிபார்த்தபோது ஊராட்சி நிர்வாகம் சார்பில் எந்த அனுமதியும் பெறவில்லை என தெரியவந்துள்ளது. இதனையடுத்து விசாரணை முடியும் வரை ஆலையை இயக்கப்போவதில்லை என ஆலை நிர்வாகம் தரப்பில் எழுத்து பூர்வமாக உறுதி அளிக்கப்பட்டது. இந்நிலையில் ஆலை நிர்வாகம் தொடர்ந்து விதிமுறைகளை மீறி ஆலையை இயக்கியதால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்து பல்லடம் வட்டாட்சியரிடம் புகார் மனு அளித்தனர். புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்காததை அடுத்து பல்லடம் வட்டாட்சியர் அலுவலத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதனைத்தொடர்ந்து கரித்தொட்டி ஆலை மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கக்கோரி அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் வட்டாட்சியரை கண்டித்து தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் விவசாயிகளுடன் நடந்த பேச்சுவார்த்தையில் மாசுக்கட்டுபாட்டுவாரியம், வருவாய்துறை, மற்றும் காவல்துறை இணைந்து நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகள் மாசுக்கட்டுபாட்டு வாரிய அதிகாரிகள் உயிருடன் இருக்கும் போது செத்துப்போனதாக சான்று அளிப்பதாகவும், மாசுக்கட்டுபாட்டு துறையில் புகார் கொடுப்பதும் ரயிலில் விழுந்து தப்பிப்பதற்கு சமம் என ஆவேசமாக கூறினர். பின்னர் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். விவசாயிகள் போராட்டத்தால் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மனு கொடுக்கும் நிகழ்ச்சி பாதிக்கப்படது.