நேர்மையாக இருந்தால் காத்திருப்போர் பட்டியல்.. !.? அரசு பரிசீலனை செய்யுமா ?.!
கள்ளக்குறிச்சி சம்பவத்தின் எதிரொலியாக, போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு ஏடிஜிபி மகேஷ்குமார் அகர்வாலை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்து உத்தரவிட்டது தமிழக அரசு. இந்த சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் மிகுந்த அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இது சம்பந்தமாக நேர்மையான அதிகாரிகளிடம் விசாரித்தபோது.. மகேஷ்குமார் அகர்வால் கடந்த ஒரு வாருடமாக இப்பதவியில் மிகவும் நேர்மையான முறையில் எந்தவித குற்றச்சாட்டுகளுக்கும் உள்ளாகாமல் சிறப்பாக பணியாற்றி வந்துள்ளார். மதுவிலக்கு அமலாக்கப் பிரிவை பொறுத்தவரையில், கள்ளச்சாராயம் காய்ச்சுதல், கொண்டு செல்லுதல், வைத்திருத்தல் மற்றும் விற்பனை செய்வதை ஒழித்தல், போலி மற்றும் ஆயத்தீர்வை செலுத்தப்படாத இந்திய தயாரிப்பு அயல்நாட்டு மதுபானங்கள், அண்டை மாநிலங்களிலிருந்து கடத்தி வரப்படுவதை தடுத்தல் ஆகியவற்றை முதன்மை குறிக்கோளாகக் கொண்டு மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு செயல்பட்டு வருகிறது.
மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு மகேஷ்குமார் அகர்வால் தலைமையில், ஒரு காவல்துறை தலைவர் ( ஐஜி ) மற்றும் மூன்று காவல் கண்காணிப்பாளர்கள் உள்ளனர். காவல் கண்காணிப்பாளர் ( மத்திய நுண்ணறிவு பிரிவு ) அவர்களுக்கு உதவியாக இரண்டு துணை கண்காணிப்பாளர்கள், ஆறு காவல் ஆய்வாளர்கள், எட்டு காவல் உதவி ஆய்வாளர்கள் மற்றும் பிற காவலர்கள் உள்ளனர். சென்னை மற்றும் மதுரையில் மண்டல அமலாக்க காவல் கண்காணிப்பாளர்கள் செயல்பட்டு வருகின்றனர்.
இவர்களது பணி என்னவென்றால், மது கள்ளச்சாராயம் எங்கெல்லாம் புழங்குகிறதோ அதனைப்பற்றிய தகவல்களை உளவு பார்த்து கூறுவதே இவர்களது பணி. இவர்களுக்கு வழக்குகள் பதிவு செய்வதற்கான எந்தவிதமான அதிகாரங்களும் வழங்கப்படவில்லை. அதையும் தாண்டி இவர்கள் யாரையாவது பிடித்தால், காவல் நிலைய சட்டம் ஒழுங்கு போலீசார், மதுவிலக்கு போலீசார் வசம் ஒப்படைப்பார்கள்.
இவர்களுக்கு வரும் தகவல்களை துணை கண்காணிப்பாளர், மத்திய துப்பறியும் பிரிவு மூலமாக காவல் கண்காணிப்பாளருக்கு தெரியப்படுத்துவார்கள். பின்னர் காவல்துறை தலைவர் மூலமாக ஏடிஜிபிக்கு வந்ததும், அந்தந்த மாவட்ட கண்காணிப்பாளர்களுக்கு மெமோ மூலமாக உங்கள் பகுதிகளில் இவ்வாறான தவறுகள் நடப்பதாகக் கூறி ( மது சம்பந்தமாக ) நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவார். அதன் நகல்கள் சம்பந்தப்பட்ட சரக டிஐஜி, ஐஜி, ஏடிஜிபி ( சட்டம் ஒழுங்கு ) இவர்களுக்கு அனுப்பப்படும். இதுதான் ஏடிஜிபி அமலாக்கத்துறையின் பணி.
மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு ஒவ்வொரு மாவட்டத்திலும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மாநகரங்களில் காவல் ஆணையர்கள் கட்டுப்பாட்டில் தான் இயங்கும். அவர்களுக்குத்தான் வழக்குகள் பதிவு செய்ய, குற்றவாளிகளை கைது செய்து நடவடிக்கை எடுக்க என அனைத்து அதிகாரங்களும் உண்டு. இந்த மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு அந்தந்த கண்காணிப்பாளர்கள், காவல் ஆணையர்கள் கட்டுப்பாட்டின் கீழ் இயங்குவதால் அவர்களுக்கு பணி மாறுதல் செய்யும் அதிகாரமும் உண்டு.
என்னதான் ஏடிஜிபி ( Enforcement memo ) மூலமாக எந்த தகவல்கள் வந்தாலும், அதை நிறைவேற்றும் பொறுப்பு அந்தந்த மாவட்ட கண்காணிப்பாளர்கள், மாநகர காவல் ஆணையர்களுக்கு தான் உள்ளது. அதேபோல் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவில், ஒரு அதிகாரியை பணி மாற்றம் செய்யக்கூட ஏடிஜிபி க்கு ( Enforcement ) அதிகாரம் கிடையாது. அவர் ஒரு சாதாரண காவலர் போலத்தான்.
கடந்த காலங்களில் ஏடிஜிபி மகேஷ்குமார் அகர்வால் போதைப்பொருள் தடுப்பு பிரிவில் ( NIB ) போதைப்பொருட்களை ஒழிப்பதில் மிகவும் திறமையாக செயல்பட்டு, பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தியதோடு, போதை பொருட்களை கடத்துபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்துள்ளார். இந்த அரசின் போதை இல்லாத தமிழ்நாடு என்ற இலக்கை அடைய மிகவும் கடுமையாக போராடியுள்ளார்.
மேலும் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது சம்பந்தமாக, கடந்த இரண்டு ஆண்டுகளாக பல்வேறு உலக சாதனைகளை தமிழகத்திற்கு பெற்று தந்துள்ளார். தற்போதுள்ள நவீன விஞ்ஞான காலத்திற்கு ஏற்ப, சமூக வலைதளங்கள் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார். இப்படிப்பட்ட ஒரு நேர்மையான அதிகாரியை கள்ளக்குறிச்சி சம்பவத்திற்கு எந்தவித சம்பந்தமும் இல்லாத இவரை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றியது நேர்மையான அதிகாரிகள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏடிஜிபி மகேஷ்குமார் அகர்வால் காத்திருப்போர் பட்டியலில் இருப்பதால், போதை பொருள் கடத்தல் ஆசாமிகள் கொண்டாட்டத்தில் உள்ளனர் என்கிறார்கள்.
ஏடிஜிபி மகேஷ்குமார் அகர்வாலை காத்திருப்போர் பட்டியலில் வைத்திருப்பதை பரிசீலனை செய்ய வேண்டும் என்கிற கோரிக்கையும் பல்வேறு தரப்பினர் மத்தியில் எழுந்துள்ளது.