திண்டுக்கல் மாவட்டத்தில் தொடரும் சாதிய அடக்குமுறை ! சில்லலப்பட்டி பகுதி மக்களின் கோரிக்கையை கண்டுகொள்ளாத அதிகாரிகள் !
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை தாலுகா, அம்மைநாயக்கனூர் பஞ்சாயத்து, ஒருத்தட்டு கிராமம், சில்லலப்பட்டி பகுதியில் 100 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், அரசியல்வாதிகளும், அரசு அதிகாரிகளும் அரசின் நலத்திட்ட உதவிகள் எதையும் இந்த மக்கள் பயன்பெறாத வகையில் தடுத்து வருகின்றனர். மேலும் பல ஆண்டுகளாக
இப்பகுதியில் குடிநீர் வசதி, சாலை வசதி, தெரு விளக்கு மற்றும் கழிப்பிட வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதையும் செய்து தரவில்லை என அப்பகுதியினர் புகார் தெரிவித்துள்ளனர்.
மேலும் ஆதிதிராவிடர் நலத்துறை தனி வட்டாச்சியரால் கடந்த 35 ஆண்டுகளுக்கு முன்பு 70 சென்ட் இடத்தை சுடுகாட்டிற்காக ஒதுக்கி கொடுக்கப்பட்டுள்ளது. சுடு காட்டிற்கு ஒதுக்கப்பட்ட ஒருத்தட்டு கிராம புல எண்: 15/1B, 15/1C சுமார் 15 அடி பாதை அரசால் அளந்து கொடுக்கப்பட்டு, அந்த பாதையை சுடுகாட்டுக்கு செல்லும் வழியாக அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பயன்படுத்தி வந்துள்ளனர். இந்த சாலையை புதுப்பிக்க 88.86 லட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணி தொடங்கிய நிலையில், பிரேம்குமார் என்பவர் அந்த இடம் தனக்கு சொந்தமானது எனக்கூறி சாலை பணிகளை தடுத்து நிறுத்தியுள்ளார். இதன் காரணமாக சாலை பணிகள் நடைபெறாமல் அப்படியே கிடப்பில் போடப்பட்டது.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக சில்லலப்பட்டியை சேர்ந்த பெருமாள் கூறுகையில்.. சில்லலப்பட்டியில் பல ஆண்டுகளாக பூர்விகமாக குடியிருந்து வரும் எங்களுக்கு அடிப்படையாக கிடைக்க வேண்டிய எந்த வசதிகளும் கிடைப்பதில்லை. 1955 ஆம் ஆண்டு இப்பகுதி மக்களின் குடிநீர் தேவைக்காக, கிணறு ஒன்று தோண்டப்பட்டு அந்த கிணற்றிலிருந்து தண்ணீர் எடுத்து பயன்படுத்தி வந்தோம். பல வருடங்களாக அந்த கிணற்றை சுத்தம் செய்யாததால் அதிலுள்ள தண்ணீர் கெட்டு போய் விட்டதால், அதனை பயன்படுத்த முடியவில்லை. கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு குடிநீர் தேவைக்காக பேரூராட்சி நிர்வாகம் போர்வெல் அமைத்துக் கொடுத்தது. அந்த போர்வெல்லில் இருந்த மோட்டார் பழுதடைந்ததாகக் கூறி பேரூராட்சியில் இருந்து வந்தவர்கள் கழட்டி சென்று விட்டனர். அதன் பிறகு போர்வெல் தண்ணீரும் எங்களுக்கு கிடைக்க வழியில்லை. கழட்டி சென்ற மோட்டார் பேரூராட்சி தலைவர் செல்வராஜின் சொந்த ஊரான நாயகவுண்டன்பட்டியில் பயன் படுத்தி வருகின்றனர்.
எங்களுக்கு குடிநீருக்காக இருந்த ஒரு மோட்டாரையும் எடுத்து சென்றதால், தற்போது எங்கள் ஊரில் உள்ள மக்கள் தண்ணீருக்காக மூன்று கிலோ மீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இல்லையென்றால் ஒரு குடம் தண்ணீர் 12 ரூபாய் என வண்டியில் கொண்டு வருபவரிடம் விலைக்கு வாங்கி குடித்து வருவதாக தெரிவித்துள்ளார்.
இது சம்பந்தமாக நிலக்கோட்டை ( தனி ) சட்டமன்ற உறுப்பினர் தேன்மொழி, பேரூராட்சி தலைவர் செல்வராஜ் ஆகிய இருவரிடமும் பலமுறை எங்கள் குறைகளை எடுத்து கூறியும் எந்தவித பயனும் இல்லை. ஓட்டு கேட்க மட்டுமே எங்கள் பகுதிக்கு வருவார்கள், அதன் பிறகு இந்த பக்கம் யாரும் வரமாட்டார்கள். குடிநீர் பிரச்சனை மட்டுமின்றி கழிப்பிட வசதி, சாலை வசதி என எந்த வசதியும் எங்களுக்கு கிடையாது. நாங்கள் வணங்கும் தெய்வங்களாகிய காளியம்மன், பகவதியம்மன், மாரியம்மன் கோவிலின் பூஞ்சோலை என்ற இடத்திற்கு செல்லும் பாதையை இருபுறங்களிலும் உள்ள நிலத்தின் உரிமையாளர்கள் செல்ல விடாமல் தடுத்து வருகின்றனர்.
இது சம்பந்தமாக நாங்கள் ஏதேனும் பேசினால் எங்கள் சாதி பெயரை சொல்லி உங்களுக்கெல்லாம் சாமி ஒரு கேடா, இந்த பக்கம் எல்லாம் நீங்கள் வரக்கூடாது டா என திட்டி எங்களை துரத்தி விடுகின்றனர். இந்த பிரச்சனை சம்பந்தமாக புகார் மனு கொடுத்தும் எந்த பலனும் இல்லை. மேலும் வாழும் போது இல்லாத நிம்மதி செத்த பிறகாவது எங்களுக்கு கிடைக்கட்டும் என இறந்தவர்களை அடக்கம் செய்ய கொண்டு செல்லும் வழியையும் குழியை தோண்டி தடுத்து விட்டனர். எங்களுக்கு எப்போது தான் தீர்வு கிடைக்கும் என ஏக்கத்துடன் பேசினார் ஊர் நாட்டாமை பெருமாள்.
தமிழ்நாடு எவ்வளவு வளர்ச்சி அடைந்திருந்தாலும், திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நிலக்கோட்டை தாலுகாவில், ஒருத்தட்டு கிராமம், சில்லலப்பட்டி மக்களின் நீண்ட நாள் கோரிக்கைகளுக்கு அரசு அதிகாரிகள் எப்போதுதான் செவிசாய்பார்கள் ? இப்பகுதியில் சாதிய பாகுபாடு எப்போதுதான் விலகும் ? மாவட்ட ஆட்சியர் உடனடியாக விசாரணை மேற்கொண்டு, மக்களின் நீண்ட நாள் கோரிக்கைகளை நிறைவேற்றுவாரா ? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்…
செய்தியாளர் -சாதிக்பாட்ஷா