மடத்துக்குளம் பகுதியில் 24 மணி நேரமும் மது விற்பனை ! கண்டுகொள்ளாத காவல்துறையினர் !

திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள அனைத்து பார்களும், டாஸ்மாக் கடை செயல்படும் நேரங்களில் மட்டும் செயல்பட அனுமதி அளித்துள்ள நிலையில், இரவு 10 மணிக்கு டாஸ்மாக் கடை மூடிய பிறகும், பார்களில் கூடுதல் விலைக்கு மது விற்பனை தாராளமாக நடைபெற்று வருவதாக, தொடர்ந்து நமக்கு தகவல்கள் வந்த வண்ணம் இருந்தன. அதனைத்தொடர்ந்து அப்பகுதியில் உள்ள அனைத்து பார்களுக்கும் அதிகாலையில் நமது குழுவினர் சென்று பார்த்தபோது, அனைத்து பார்க்களிலும் மது பாட்டில்கள் விற்பனை நடைபெற்று வந்துள்ளது.

இதுசம்பந்தமாக அப்பகுதியினர், சமூக ஆர்வலர்கள் கூறுகையில்.. நள்ளிரவு நேரங்களில் மது வாங்கி குடிக்கும் நபர்கள், காலி பாட்டில்களை சாலையில் வீசி செல்வதோடு, சில நேரங்களில் பாட்டில்களை உடைத்து விட்டும் செல்கின்றனர். மேலும், அதிகாலை நேரங்களில் டாஸ்மாக் கடை முன்பாக சாலையோரத்தில் வாகனங்களை நிறுத்தி விட்டு, மது குடிக்க செல்லும் மதுப்பிரியர்கள், மது குடித்து விட்டு அதிக வேகத்தில் இருசக்கர வாகனத்தை இயக்கி வருகின்றனர். இதனால் மடத்துக்குளம் – கொழுமம் சாலை, மடத்துக்குளம் – கணியூர் சாலை, கணியூர் – காரத்தொழுவு செல்லும் சாலை என 16 கிலோ மீட்டர் சுற்றளவில், அரசு அனுமதி அளித்துள்ள நேரம் மற்றும் பார் உரிமையாளர்கள் விற்பனை செய்யும் நேரம் என 24 மணி நேரமும் மடத்துக்குளம் சுற்று வட்டார பகுதிகளில் மது விற்பனை களைகட்டி வருகிறது.

சட்டவிரோத மது விற்பனையால் இப்பகுதியில் அதிகளவில் வாகன விபத்துகள் நடக்கின்றன. சட்டவிரோதமாக விற்பனை செய்யும் மதுப்பாட்டிலுக்கு கூடுதலாக 100 முதல் 150 ரூபாய் விலை நிர்ணயம் செய்து விற்பனை செய்யப்படுவதோடு, 24 மணி நேரமும் தடையின்றி மதுபாட்டில்கள் விற்கப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் அச்சத்துடன் பயணிக்கின்றனர்.

சட்டவிரோத மது விற்பனைக்கு இடமளிக்கும் வகையில் மதுவிலக்கு போலீசாரும் நடவடிக்கை எடுக்காமல் அமைதி காத்து வருகின்றனர். இந்த விசயத்தில் மடத்துக்குளம் காவல்துறை மதுவிற்பனையை அனுசரித்து செல்கிறதா? சட்டவிரோத செயல்களுக்கு போலீசார் துணை நிற்கின்றனரா ? என்பது போன்ற கேள்விகளும் பொதுமக்களிடையே எழுந்து வருகின்றன. இதுபோன்ற செயல்களால் பொதுமக்கள் பலர் அதிருப்தியான சூழ்நிலைக்கு தள்ளப்படுவதை காவல்துறை தடுத்து நிறுத்த வேண்டும்.

மேலும் இது சம்பந்தமாக உடுமலை உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் நமச்சிவாயம் தலையிட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
– நமது நிருபர்