தொற்றுநோய் அபாயத்தில் பொதுமக்கள்…! கண்டுகொள்ளாத பரமக்குடி நகராட்சி
இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி நகராட்சிக்கு உட்பட்ட மூன்றாவது வார்டில், ஏழாவது குறுக்குத் தெருவில் பொதுமக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் எதுவும் செய்து தராமல் அந்த தெரு முழுவதையும் நகராட்சி நிர்வாகம் புறக்கணிப்பதாக அப்பகுயினர் குற்றம் சுமத்துகின்றனர்.
இது சம்பந்தமாக அப்பகுதியில் விசாரித்த போது… கடந்த பத்தாண்டுகளாக அதிமுக ஆட்சியில், இந்த பகுதியில் எந்தவித வளர்ச்சிப் பணிகளையும் மேற்கொள்ளவில்லை. குறிப்பாக பிரதான சாலையிலிருந்து இந்த தெருவுக்கு வரும் பாதை மூன்று அடிக்கு மேல் பள்ளமாக இருப்பதால், இரு சக்கர வாகனத்தில் வருபவர்கள் விபத்தில் சிக்கி பல்வேறு இன்னல்களை சந்திக்கின்றனர். ஆகையால் இந்த பாதையைச் சீரமைத்துத்தருமாறு பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்தும் அதிமுக ஆட்சியில் இந்த தெரு மட்டும் புறக்கணிக்கப்பட்டது.
இந்தப் பகுதியில் கழிவுநீர் வாய்க்கால் தூர்வாராரப்படாமல் கழிவுநீர் தேங்கி தெருக்களில் வழிந்தோடுகிறது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு, மலேரியா போன்ற நோய்கள் தாக்கி குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர். எப்போதாவது கழிவுநீர் வாய்க்காலை தூர்வாருகின்றனர். ஆனால் நகராட்சி ஊழியர்கள் கழிவுகளை அங்கேயே போட்டுவிட்டு சென்று விடுகின்றனர். இதனை நகராட்சி நிர்வாகத்தினரின் கவனத்திற்கு எடுத்துச் சென்றாலும் எந்தவித பயனும் இல்லை. கொரோனா பெருந்தொற்றிலிருந்து தமிழகம் மீண்டிருந்தாலும் இப்பகுதியில் கொசுக்கள் உற்பத்தியால் குழந்தைகள் முதல் வயாதானவர்கள் வரை ஏதாவது தொற்றுநோய் வந்துவிடுமோ என்கிற அச்சத்திலேயே இப்பகுதியினர் வசித்து வருகின்றனர்.
தற்போது தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு கடந்த ஒன்றரை ஆண்டுகளாக, பாரபட்சம் இல்லாமல் அனைவருக்குமான ஆட்சியாக தமிழக முதல்வர் நல்லாட்சி செய்துவரும் நிலையில், பரமக்குடி நகராட்சியில் திமுகவைச் சேர்ந்த நகராட்சித் தலைவர் இருந்தும் பொதுமக்களின் அத்யாவசிய தேவைகளை நிறைவேற்றாமல் அலட்சியம் செய்வதால் கெட்ட பெயர் நகராட்சிக்கா ? தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கா ? என கேள்வி எழுப்புகின்றனர்.
மேலும் இது சம்பந்தமாக பரமக்குடி நகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்த்து நடவடிக்கை எடுக்குமா ? நகராட்சி நிர்வாகம்..!? காத்திருப்போம்…..