தமிழகம்

30 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பரவும் தொண்டை அடைப்பான் நோய்

30 வருடங்களுக்கு முன்பு தமிழகத்தை அச்சுறுத்திய உயிர்க்கொல்லி நோயான தொண்டை அடைப்பான் தற்போது மீண்டும் மெல்ல மெல்ல பரவி வருகிறது. அப்போது மேற்கொள்ளப்பட்ட மருத்துவ நடவடிக்கைகள் காரணமாக தொண்டை அடைப்பான் நோய், முற்றிலும் களையப்பட்டது. இந்நிலையில் முறையாக தடுப்பூசி போடாததால் தற்போது சில குழந்தைகள் இந்நோய்த் தாக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறுகிறார் எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை இயக்குநர் ஜெயச்சந்திரன்.
தொண்டை அடைப்பான் நோய் காரின்பாக்டீரியம் டிப்தீரியா எனும் பாக்டீரியாவால் ஏற்படுகிறது. இந்நோயால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு தொண்டையில் சவ்வு போன்று உருவாகி உணவு உட்கொள்ளவும், மூச்சு விடவும் முடியாத நிலையும் ஏற்படும். ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கே இந்த நோய் அதிகமாக பரவுகிறது. தொண்டை அடைப்பான் நோய் பாதிப்பால் இந்த ஆண்டு சென்னை அசோக்நகரை சேர்ந்த 12 வயது சிறுமி உட்பட இதுவரை 7 குழந்தைகள் எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். முறையாக தடுப்பூசி போடுவதன் மூலம் இந்த நோய் வராமல் தடுக்க முடியும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
தொண்டை அடைப்பான் நோய்க்கான தடுப்பூசி தமிழக அரசால் இலவசமாக வழங்கப்படுகிறது. தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு 6 வாரம், 10 வாரம், 14 வாரம் மற்றும் ஒன்றரை வயதில் முறையாக தடுப்பூசி போடுவதன் மூலம் தொண்டை அடைப்பான் நோயை தடுக்க முடியும் என்று எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை இயக்குநர் தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில், தொண்டை அடைப்பான் நோய் பாதிப்பு அதிகரித்து வருவதால், மாணவர்களை தொடர்ந்து பொதுமக்களுக்கும் தடுப்பூசி போடும்படி அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
சத்தியமங்கலம் அருகேவுள்ள கடம்பூர் மலை கிராமத்தை சேர்ந்த பள்ளி மாணவர்கள் 11 பேர் கடந்த மாதம், தொண்டை அடைப்பான் நோய் தாக்கி கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.
டிப்தீரியா என்ற பேக்டீரியா தொண்டையை பாதித்து, சுவாசத்தையும், உணவு விழுங்குவதையும் தடுப்பதால் இந்த நோய் தொண்டை அடைப்பான் என அழைக்கப்படுகிறது. மேலும் இந்த நோயானது, இருமல், காறியுமிழ்தல், மூக்கு சளியை வெளியேற்றுதல் போன்ற செயல்பாடுகளின் போது மற்றவர்களுக்கு பரவுகிறது.
சிறுவர்கள் மற்றும் முதியவர்களை தாக்கும் இவ்வகை நோய் பாதிப்பின் எண்ணிக்கை கணிசமாக உயரவே, தமிழக அரசு பொதுமக்களிடம் இதுகுறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தியது. மேலும் நோய் பரவாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோவை மற்றும் ஈரோட்டிலுள்ள தனியார் மற்றும் அரசு பள்ளி மாணவர்களுக்கு டெட்டணஸ் தடுப்பு ஊசிகளும் போடப்பட்டது.
இந்நிலையில், தொண்டை அடைப்பான் நோய் பாதிப்பு அறிகுறியுடன் மீண்டும் 36 பேர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வேகமாக பரவும் இந்த நோயிலிருந்து பாதுகாக்க, பள்ளி மாணவர்களுக்கு மட்டுமல்லாமல் பொதுமக்களுக்கும் தடுப்பூசி போட தமிழக அரசு முன்வர வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button