ஜீவசமாதி அறிவிப்பும் -ஏமாந்துபோன மக்களும்
சிவகங்கை அருகே முதியவர் ஒருவர் தாம் ஜீவசமாதி அடையப்போவதாக அறிவித்து, ஆயிரக்கணக்கான மக்களையும் நூற்றுக்கணக்கான போலீசாரையும் ஒரே இரவில் ஒன்றுகூட வைத்து ஏமாற்றி அனுப்பிவைத்த சம்பவம் அரங்கேறி இருக்கிறது.
நட்புக்காக திரைப்படத்தில் மலையை தூக்கப்போவதாக அறிவித்து, மக்கள் அனைவரும் ஆர்வத்துடன் ஒன்றுகூடியவுடன், மலையை தூக்கி வையுங்கள், நான் தூக்குகிறேன் என்பார் நடிகர் செந்தில்.. மக்கள் ஏமாற்றத்துடனும் கோபத்துடனும் திரும்பிச் செல்வர்.
இந்த சம்பவத்தைப் போன்றே சிவகங்கை அருகே ஒரு சம்பவம் அரங்கேறி இருக்கிறது. பாசாங்கரை கிராமத்தைச் சேர்ந்த இருளப்பனுக்கு திருமணமாகி ஒரு மகன், ஒரு மகள் இருக்கின்றனர். தன்னை சிவபக்தர் என்று கூறிக்கொள்ளும் இருளப்பன், ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் பயணித்து சிவாலயங்களை தரிசித்து வந்ததாகவும் கூறுகிறார்.
குடும்பத்தினரிடம் சொல்லாமல் கொள்ளாமல் காணாமல் போவது, பின்னர் திடீரென ஊர் திரும்பி, தன்னிடம் வருபவர்களுக்கு குறி சொல்வது, ஜாதகம் பார்ப்பது உள்ளிட்ட வேலைகளையும் இருளப்பன் பார்த்து வந்ததாக ஊர்மக்கள் கூறுகின்றனர். இந்த நிலையில்தான் கடந்த சில நாட்களுக்கு முன் தாம் ஜீவசமாதி அடையப்போவதாக அறிவித்தார் இருளப்பன். வியாழக்கிழமை நள்ளிரவு 12 மணியிலிருந்து வெள்ளிக்கிழமை காலை 5 மணிக்குள் ஜீவசமாதி அடையப்போவதாக அவர் அறிவித்தார்.
முதலில் இதனை யாரும் நம்பவோ, பெரிதாக எடுத்துக்கொள்ளவோ இல்லை. அதன் பின்னர் கடந்த 10 நாட்களாக தண்ணீர் மட்டுமே அருந்தி ஜீவசமாதி நிலைக்கு அவர் தயாராகி வருவதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. இதனையடுத்து உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து ஏராளமானோர் வந்து நீண்ட வரிசையில் காத்திருந்து இருளப்பனை வணங்குவதும் அருள்வாக்கு பெற்றுச் செல்வதுமாக இருந்தனர். இருளப்பன் தேர்வு செய்த இடத்தில் பூஜைகள் செய்யப்பட்டு 10க்கு 10 அடி பள்ளமும் தோண்டப்பட்டது.
ஜீவசமாதி அடையப்போவதாக அறிவித்த வியாழக்கிழமை இரவு, பாசாங்கரை கிராமம் அதுவரை பார்த்திராத ஒரு கூட்டத்தை பார்த்தது. நூறு, ஐநூறாகி, ஆயிரக்கணக்கில் மக்கள் வந்து குவியத் தொடங்கினர். நிலைமையை உணர்ந்த காவல்துறை அங்கு நூற்றுக்கணக்கான போலீசாரை குவித்து கூட்டத்தை கட்டுப்படுத்தும் பணியில் இறங்கினர். ஷாமியானா பந்தல் அமைக்கப்பட்டு இருளப்பனை காணவந்தவர்களுக்கு உணவு, தண்ணீர் விநியோகம் நடந்தது. சிறிது நேரத்தில் மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தனும் அங்கு வந்து சேர்ந்தார்.
எல்லோருக்கும் நடுநாயகமாக அமர்ந்திருந்த இருளப்பனிடம் பக்தர்கள் வருவதும் அவர் காலில் விழுந்து வணங்கி ஆசி பெற்றுச் செல்வதுமாக இருந்தனர். ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை மருத்துவக் குழு இருளப்பனின் உடல்நிலையை பரிசோதித்த வண்ணம் இருந்தனர். தாம் கூறியதைக் கேட்டு இத்தனை பெரிய கூட்டம், இவ்வளவு போலீசார், மாவட்ட ஆட்சியர் உட்பட அத்தனை பேரும் வருவர் என்பதை எதிர்பார்க்காத இருளப்பன் பிரமித்துப் போனார்.
அந்த பிரமிப்பு அவரை விட்டு போவதற்கு முன்பே, ஜீவசமாதி அடையப்போவதாக அவர் குறித்துக் கொடுத்த நேரம் கடந்து கொண்டு இருந்தது. நேரம் காலை 5 மணியை கடந்து சென்ற நிலையில் இருளப்பனின் உடல்நிலையில் எவ்விதமான மாற்றமும் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது.
அதன் தொடர்ச்சியாக ஐந்தே முக்கால் மணியளவில் தனது ஜீவசமாதி முடிவை இருளப்பன் ஒத்திவைப்பதாக அறிவித்துவிட்டு சாவகாசமாக அங்கேயே படுத்து உறங்கிவிட்டார். விடிய விடிய விழிகள் வலிக்க உறங்காமல் காத்திருந்த அத்தனை பேரும் இதனைக் கண்டு நொந்து ஏமாந்து சென்றனர். ஊர்மக்கள் கேள்வி கேட்பார்களே என பயந்து இருளப்பனின் மகன் கண்ணாயிரம் தலைமறைவாகிவிட்டதாகக் கூறப்படுகிறது. இருளப்பனின் மனைவியோ, இவர் ஜீவசமாதி அடைவாருன்ற நம்பிக்கை எல்லாம் எனக்கு இல்லை என்று கூறுகிறார்.
வாழ்வில் ஆசைகளை, சிற்றின்பங்களைத் துறந்து கடுமையான ஒழுக்கங்களையும் உயர்ந்த தவ நெறிமுறைகளையும் பின்பற்றி வருபவர்களுக்கு மட்டுமே சாத்தியப்படக்கூடிய விஷயம் இந்த ஜீவசமாதி. ஆனால் காசி, திருவண்ணாமலை போன்ற சிவஸ்தலங்களுக்குச் சென்றால் இருளப்பன் மாதிரியான ஆயிரக்கணக்கானவர்களை பார்க்கலாம்.
திருமணம் செய்து பிள்ளைகளைப் பெற்று, பின் சம்பாதிக்க சோம்பேறித்தனம் கொண்டு ஊர் ஊராகச் சுற்றி யாசகம் பெற்று உயிர் வளர்ப்பவர்களில் சிலர் சாமியார் என்ற முகமூடியை போட்டுக்கொள்கின்றனர். அத்தகையவர்களின் பின்னணியை ஆராயாமல், அவர்கள் என்ன சொன்னாலும் அப்படியே நம்புவது, நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதற்குச் சமம்..
- நமது நிருபர்