மலையடிவாரத்தில் தொடரும் மணல் திருட்டு ! துணைபோகும் அதிகாரிகள் !
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையிலிருந்து சுமார் 25 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது அமராவதி அணை. ஆண்டியகவுண்டனூர், மானுப்பட்டி ஆகிய இரண்டு கிராமத்தை இணைக்கும் பகுதியான சாயப்பட்டறை என்ற இடத்தில் அரசு நிலத்தில் மணல் திருட்டு நடைபெறுவதாக கடந்த சில நாட்களாக தகவல்கள் வந்த வண்ணம் இருந்தன. அதனைத் தொடர்ந்து அப்பகுதியில் நமது குழுவினர் விசாரணை செய்தபோது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இது சம்பந்தமாக அப்பகுதியினர் கூறுகையில்.. சாயப்பட்டறை பகுதியில் வசித்து வருபவர் விஜயலட்சுமி, இவரது சொந்த ஊரான கோயம்புத்தூரிலிருந்து சாயப்பட்டறை பகுதியான மலை அடிவாரத்தில் இரண்டு ஏக்கர் நிலத்தை வாங்கி அதே இடத்தில் குடியிருந்து வந்த விஜயலட்சுமி தன்னை சாமியார் என கூறிக்கொண்டு, கோவில் கட்டுவதாகவும் , ஆன்மீக பணிகள் செய்து வருவதாகவும் தன்னை வெளிப்படுத்திக் கொண்டார். கடந்த சில ஆண்டுகளில் தனக்குச் சொந்தமான இடத்தின் அருகில் உள்ள அரசுக்கு சொந்தமான புறம்போக்கு இடமான மலை அடிவாரத்தில் உள்ள பல இடங்களில் சட்டத்திற்குப் புறம்பாக மண் எடுத்து விற்பனை செய்து வருகிறார்.
இங்கிருந்து நாள்தோறும் நூற்றுக்கணக்கான டிப்பர் லாரிகள் மூலமாக மண் எடுத்து விற்பனை செய்து வரும் விஜயலட்சுமியின் ஆதரவாளர்கள் கடந்த இரு தினங்களுக்கு முன்பாக உடுமலை வட்டாட்சியர் சுந்தரத்தை நேரில் சந்தித்து சென்றுள்ளனர். சட்டத்திற்குப் புறம்பாக மண் எடுத்து விற்பனை செய்து வரும் விஜயலட்சுமியின் ஆதரவாளர்கள் என்ன காரணத்திற்காக உடுமலை வட்டாட்சியர் சுந்தரத்தை சந்தித்து செல்ல வேண்டும் என சந்தேகம் எழுந்துள்ளது. கடந்த சில மாதங்களாகவே மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள இடங்களில் கனிம வளங்களை கொள்ளையடித்து கேரள மாநிலத்திற்கு கடத்தி வரும் மர்ம கும்பலை கண்டும் காணாமல் இருக்கும் அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பல்வேறு தரப்பினர் போராட்டம் நடத்தி வந்த நிலையில், தற்போது வரை கனிம வளங்கள் மற்றும் செம்மண் கடத்தலை தடுக்காமல் மெளனம் காப்பது என்ன காரணமாக இருக்கும் என கேள்வி எழுந்துள்ளது.
தேசிய நெடுஞ்சாலைப் பணிகளுக்காக மண் எடுக்கப்படுவதாக கூறி நூற்றுக்கணக்கான டிப்பர் லாரிகள் மூலமாக இரவு, பகலாக 9/6 செக்போஸ்ட், சின்னாறு – மூணாறு வழியாக கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்திற்கு கனிம வளங்கள் மற்றும் செம்மண்ணை தொடர்ந்து கடத்தி வருகின்றனர். தனிநபருக்கு சொந்தமான இடமாக இருந்தாலும் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மீறி மண் எடுக்கக்கூடாது என்ற விதிமுறைகள் உள்ளது. அரசின் கட்டுப்பாடுகளை காற்றில் பறக்க விட்டதோடு மட்டுமல்லாமல் அரசுக்கு சொந்தமான நிலத்தில் 30 அடிக்கு மேல் மண் எடுத்து வருவது இப்பகுதியில் அதிகரித்து வருகிறது.
இந்த பிரச்சினை தொடர்பாக திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கிருஸ்துராஜ் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் அமைதி காப்பதற்கு என்ன காரணம் என்றே தெரியவில்லை. அரசியல்வாதிகளின் ஆதரவோடு தான் இதுபோன்ற மண் கடத்தல்கள் நடக்கிறதா ? இல்லை இதற்கு அதிகாரிகள் துணை போகிறார்களா ?என்பதை உயர் அதிகாரிகள் உரிய விசாரணை செய்வதோடு, சம்பந்தப்பட்ட இடத்தை நேரில் ஆய்வு செய்து விரைவாக நடவடிக்கை எடுத்தால் மட்டுமே மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள கனிம வளங்கள் பாதுகாப்பாக இருக்கும் என்கிறார்கள்.
-சாதிக் பாட்ஷா
செய்தியாளர்