8 வது ஆசிய நாடுகளுக்கான கராத்தே போட்டியில் ஈரோடு மாணவர்கள் பதக்கம் வென்று சாதனை
மகாராஷ்ட்ரா மாநிலம் புனேவில் 2 நாட்கள் நடைபெற்றுவரும் ஆசிய நாடுகளுக்கான 8 வது கராத்தே போட்டியில் தமிழ்நாட்டை சேர்ந்த மாணவர்கள் பதக்கங்களை வென்று சாதனை படைத்து வருகின்றனர். உலக கோஜூரியூ கராத்தே பெடரேசன் சார்பில் ஆண்டு தோறும் மாவட்ட, மாநில, இந்திய அளவிலான போட்டிகள் நடத்தப்பட்டு ஆசிய அளவிலான போட்டிகளில் தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்கள் உலக அளவில் கோஜூ ரியூ கராத்தே போட்டிகளில் கலந்துகொள்ள தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
இந்நிலையில் அகில இந்திய அளவில் கடந்த ஏப்ரல் 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் கராத்தே போட்டிகள் நடைபெற்று 50 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழகத்தை சேர்ந்த மாணவர்கள் 50 பேர் ஜூன் 8 ஆம் தேதி சனி மற்றும் 9 ஆம் தேதி ஞாயிறு ஆகிய இரு தினங்கள் புனே நகரில் சத்திரபதி சிவாஜி மகாராஜ் விளையாட்டு அரங்கில் நடைபெற்றுவரும் 8 வது ஆசிய நாடுகளுக்கான கராத்தே போட்டிகளில் கலந்துகொண்டனர். உலக கோஜுரியூ கராத்தே பெடரேசன் தலைவர் பெல்ஜியம் நாட்டை சேர்ந்த பிட்டர் ஹார்ம்ஸ் மற்றும் ஆசியன் கோஜூரியு தலைவர் நேப்பாளத்தை சேர்ந்த பல்ராம் மித்ரா மேற்பார்வையில் யூனியன் கோஜுரியூ கராத்தே டோ பெடரேசன் சார்பில் தீரஜ் பவார் தலைமையில் போட்டிகள் நடைபெற்றது.
கட்டா, குமித்தே ஆகிய இரு பிரிவுகளில் நடைபெறும் போட்டிகளில் வயது மற்றும் எடைபிரிவில் நடைபெற்ற போட்டிகளில் இந்தியா, நேப்பாள், இலங்கை, மலேசியா, பாங்களாதேஷ், கஜகஸ்தான், துபாய் ஆகிய நாடுகளை சேர்ந்த 400 க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்துகொண்டனர். இந்நிலையில் முதல் நாள் போட்டியில் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த பயிற்சியாளர் சக்திவேல் தலைமையில் கலந்துகொண்ட விக்ரம் 32 கிலோ எடை பிரிவில் குமித்தே விளையாட்டில் முதல் பரிசு பெற்று தங்கம் மற்றும் 34 கிலோ எடைபிரிவில் தங்கம் வென்றனர். மேலும் ஈரோட்டை சேர்ந்த தயாஸ்ரீ பெண்கள் கட்டா பிரிவில் வெண்கலம், காசி விசாலாட்சி வெள்ளி பதக்கம் வென்று சாதனை படைத்தனர்.
ஆசிய அளவில் தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்கள் இந்தாண்டு செப்டம்பர் மாதம் ஆஸ்திரியாவில் நடைபெறும் உலக அளவிலான கோஜுரியூ போட்டியில் கலந்துகொள்ள தகுதி பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இப்போட்டிகளை மலேசிய நாட்டை சேர்ந்த ஆனந்தன், பங்களாதேசை சேர்ந்த காலித் மன்சூர், சென்னையை சேர்ந்த மாரியப்பன், கோவையை சேர்ந்த பார்த்தீபன் ஆகியோர் நடத்தினர்.