பல்லடம் அருகே 3 பேர் படுகொலையை கண்டித்து ஆர்ப்பாட்டம் ! ஆய்வாளரின் ஆவேச பேச்சால் சர்ச்சை !
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த அவிநாசிபாளையம் அருஜே உள்ள சேமலைகவுண்டன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் விவசாயி தெய்வசிகாமணி (76), அவரது மனைவி அலமாத்தாள் (65) மற்றும் மகன் செந்தில்குமார் (45) ஆகிய மூவரும் கடந்த நவம்பர் மாதம் 29 ஆம் தேதி குடியிருந்து வரும் தோட்டத்து வீட்டில் கொடூரமாக வெட்டிக்கொல்லப்பட்டனர்.
இச்சம்பவம் நாட்டையே பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கும் வேளையில் கொலை நடந்து 4 நாட்கள் கடந்த நிலையில் சுமார் 14 தனிப்படைகள் அமைத்து கொலையாளிகளை தேடி வரும் நிலையில், கொலையாளிகளை பிடிப்பதில் முன்னேற்றம் ஏற்படவில்லை.
இதனிடையே கொலையாளிகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்பாட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இந்நிலையில் அவினாசிபாளையம் சுங்கம் அருகே நடைபெற்ற ஆர்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்துகொண்டனர். ஆர்பாட்டம் துவங்கி சில நிமிடங்களில் அவினாசிபாளையம் ஆய்வாளர் கோவார்த்நாம்பிகா கூட்டத்திற்கு அனுமதி இல்லை என கூறியுள்ளார். இதனால் அங்கிருந்தவர்களுக்கும் ஆய்வாளருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. முறையாக அனுமதி கடிதம் கொடுத்துத்தான் ஆர்பாட்டம் நடத்துவதாக கூறினர்.
இருப்பினும் வாக்குவாதம் முற்றவே ஒரு கட்டத்தில் மேடையில் இருந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்களை நோக்கி ஆய்வாளர் ரவுடித்தனமான பிகேவியரில் ஈடுபடவேண்டாம் என மைக்கில் எச்சரித்தார். பெண் ஆய்வாளரின் ஆவேசப்பேச்சால் அதிர்ச்சி அடைந்த ஆர்பாட்டத்தில் கலந்துகொண்ட விவசாயிகள் தரையில் அமர்ந்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து பல்லடம் டி எஸ் பி தலையிட்டு கூட்டத்திற்கு அனுமதி வழங்கியதாக அறிவித்ததை அடுத்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் கொலையாளிகளை உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டது. பின்னர் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்தித்த விவசாய சங்கத்தினரிடம் பேசிய செந்தில்குமாரின் மனைவி கொலையாளிகளை உடனடியாக பிடிக்க வேண்டும் எனவும், நிவாரணமாக தங்களது விவசாய நிலத்தின் மீதுள்ள கடன்களை தள்ளுபடி செய்து நடவடிக்கை எடுக்க உதவ வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.