ஜாதி கட்சியாக மாறும் கம்யூனிஸ்ட் கட்சிகள் !.? கட்சி நிர்வாகிகள் குமுறல் !
திண்டுக்கல் மாவட்டம் , வடமதுரை ஒன்றியம், அய்யலூர் எஸ்.கே.நகர் பகுதியில் வசித்து வரும் முத்துக்குமார் என்பவருக்கும் அவரது வீட்டின் அருகில் வசித்து வரும் சித்ரா ( பெயர் மாற்றப்பட்டுள்ளது.) என்பவருக்கும், சில மாதங்களுக்கு முன் தெருவிலுள்ள குடிநீர் குழாயில் தண்ணீர் பிடிப்பதில் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்சனை நாளுக்கு நாள் அதிகரித்த நிலையில் , சித்ரா CPM கட்சியின் முன்னாள் கவுன்சிலர் , தற்போதைய ஒன்றிய குழு உறுப்பினர் சம்சுதீன் என்பவரிடம் நடந்த பிரச்சனை சம்பந்தமாக தெரிவித்துள்ளார். பிரச்சனை என்னவோ தண்ணீர் பிடிப்பதில் ஏற்பட்டுள்ள தகராறு என்றாலும், அதனை வைத்து ஒன்றும் செய்ய முடியாது என்பதால், தனது 12 வயது மகளிடம் ஆபாசமாக செய்கை காட்டியதாக கூறி காவல்நிலையத்தில் புகார் அளிக்குமாறு ஆலோசனை வழங்கியுள்ளார் சம்சுதீன்.
இந்த விவகாரத்தில் முத்துக்குமார் மீது போக்சோ வழக்கு பதிவு செய்துள்ளது காவல்துறை, முத்துக்குமார் மீது பொய்யான வழக்கு பதிவு செய்ததை அறிந்து அதிலிருந்து தப்பிக்க தலைமறைவாகி உள்ளார். இந்நிலையில் முத்துக்குமாரை பிடிக்க துணை காவல் கண்காணிப்பாளர் தலைமையில் தனிப்படை அமைத்து தேடிவந்துள்ளனர். ஒரு மாதத்திற்கு பிறகு முத்துக்குமாரை கைது செய்து சிறையில் அடைத்ததுள்ளனர். முத்துக்குமார் மீது பொய்யான வழக்கு பதிவு செய்துள்ளதாக CPI கட்சியின் வடமதுரை ஒன்றிய செயலாளர் செல்வராஜ் திண்டுக்கல் மாவட்ட செயலாளர் மணிகண்டன் கவனத்திற்கு கொண்டு செல்ல, அதை கண்டுகொள்ளாமல் இருந்ததாக தெரியவருகிறது. ஒரு கட்டத்தில் மாவட்ட செயலாளர் மணிகண்டன், கம்யூனிஸ்டு கட்சி ஒருசில ஜாதியை சேர்ந்தவர்களுக்கான கட்சி, இதில் மற்ற ஜாதியை சேர்ந்தவர்களுக்கு எதுவும் செய்ய முடியாது என ஜாதியின் பெயரைக் கூறி குறிப்பிட்டதாக தெரியவருகிறது.
இதன் காரணமாக CPI கம்யூனிஸ்டு கட்சியிலிருந்து விலகி சுமார் 50க்கும் மேற்பட்டவர்கள் கடந்த சில தினங்களுக்கு முன்பாக தமிழர் தேசம் கட்சியில் இணைந்துள்ளனர். இந்த பிரச்சனை சம்பந்தமாக வடமதுரை ஒன்றிய செயலாளர் செல்வராஜ், கட்சிப் பொறுப்பிலிருந்து சொந்த கட்சியை சேர்ந்தவர்களுக்கே ஒன்றும் செய்ய முடியாததால் கட்சியிலிருந்து விலகுவதாக கூறியுள்ளார். மொத்தத்தில் குழாய் சண்டைக்கு கட்சியை விட்டு விலகும் சம்பவம் வடமதுரை ஒன்றியத்தில் நடந்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தை பொறுத்தவரையில் CPI கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் மணிகண்டன் மீது பலர் அதிருப்தியில் இருப்பதாகவும், குறிப்பாக பொறுப்பில் உள்ளவர்கள் யாரையும் அவர் மதிப்பதே இல்லை எனவும் பலபேர் புகார் தெரிவித்து வரும் நிலையில், இந்த விவாகரம் தொடர்பாகவும் , கட்சியில் மாவட்ட செயலாளரின் செயல்பாடுகளை, அக்கட்சியை சேர்ந்தவர்களே தலலைமைக்கு தபால் அனுப்புவதாக பேசி வருகின்றனர். மேலும் திண்டுக்கல் மாவட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சி ஒருசில ஜாதியை சேர்ந்த கட்சியாக மாறி வருவதாக அக்கட்சியை சேர்ந்தவர்களே விமர்சிக்க தொடங்கியுள்ளனர்.
– சாதிக் பாட்சா