தமிழகம்

உள்ளாட்சித் தேர்தல் அடுத்த ஆண்டும் நடத்த முடியாத நிலை : உயர் நீதிமன்றம் அதிருப்தி

தமிழக உள்ளாட்சி தேர்தல் 2019ஆம் ஆண்டிலும் நடத்த முடியாத நிலை இருப்பதாக சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.
காலக்கெடுவுக்குள் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வெளியிடப்படாததால், மாநில தேர்தல் ஆணையர் மாலிக் பெரோஸ்கான், செயலாளர் ராஜசேகருக்கு எதிராக திமுகவின் ஆர்.எஸ். பாரதி சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் எம்.சத்யநாராயணன், எம்.சுந்தர் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, மாநில தேர்தல் ஆணையம் சார்பில் மூத்த வழக்கறிஞர் வைத்தியநாதன் ஆஜராகினார். அப்போது, ஆகஸ்ட் 31 ஆம் தேதிக்குள் வார்டு மறுவரையறை பணிகள் முடிக்கப்படும், அதன்பிறகு தமிழக அரசு ஒப்புதல் அளித்த பிறகே உள்ளாட்சி தேர்தல் நடத்த முடியும் என தெரிவித்தார். அனைத்து வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், மாநில தேர்தல் ஆணையம் அறிக்கைக்கு ஒப்புதல் அளிக்கும் கால அவகாசத்தை அரசு முடிவு செய்ய வேண்டும் என அறிவுறுத்தினர்.
ஆனால் அறிக்கை தாக்கல் செய்த பின்னர்தான் ஒப்புதலுக்கான காலகெடுவை நிர்ணயிக்க முடியும் என அரசு தரப்பு வழக்கறிஞர் ஆரியமா சுந்தரம் தெரிவித்தார். இதனால் அதிருப்தி அடைந்த நீதிபதிகள், ஏற்கனவே போதுமான கால அவகாசம் வழங்கபட்டுள்ளதாகவும், 2016ஆம் ஆண்டு நடத்த வேண்டிய தேர்தல் இரண்டு ஆண்டுகளாகியும் இன்னும் நடத்தப்படவில்லை எனக் கூறினார். இதேநிலை நீடித்தால் 2019ஆம் ஆண்டிற்குள் கூட தேர்தலை நடத்தமுடியாது என்று நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர்.
இதனையடுத்து ஆகஸ்டு 14 அன்று தி.மு.க தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், அரசியல் சாசனப்படி 5 ஆண்டுகள் பதவி காலம் முடியும் முன்பே தேர்தல் நடத்தப்பட வேண்டும். ஆனால், நீதிமன்றம் பலமுறை உத்தரவிட்டும் மாநில தேர்தல் ஆணையம் தேர்தலை நடத்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், தேர்தலை நடத்தாமல் இருப்பதற்காக செயற்கையாகத் தடைகளை ஏற்படுத்தி உள்ளதாகவும் குற்றம்சாட்டினார்.
இதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளை நேரடியாகவே சிறைக்கு அனுப்பலாம் என வலியுறுத்திய தி.மு.க தரப்பு வழக்கறிஞர், தேர்தல் நடத்தாமல் இருப்பதற்காகத் தமிழக அரசும் மாநிலத் தேர்தல் ஆணையமும் பரஸ்பரம் குற்றச்சாட்டுகளைக் கூறி வருவதாகவும் புகார் தெரிவித்தார். வார்டு மறுவரையறை என்பது ஒரு காரணமே அல்ல எனக் குறிப்பிட்ட அவர், உள்ளாட்சித் தேர்தல் ரத்து எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு மீது தீர்ப்பு பிறப்பிக்கப்படுவதற்கு ஒரு நாள் முன்பு அவசர அவசரமாக வார்டு மறுவரையறை செய்வதற்கான ஆணையத்தை அமைத்து அரசு அவசரச் சட்டம் இயற்றியதாகக் குற்றம்சாட்டினார். அரசுத் தரப்பில் எந்தப் பதிலும் தாக்கல் செய்யப்படாததால், இந்த மனு தொடர்பாகத் தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைச் செயலாளர் ஹர்மந்தர் சிங், ஊரக வளர்ச்சித்துறைச் செயலாளர் ஹன்ஸ்ராஜ் வர்மா ஆகியோர் செப்டம்பர் 11-ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை அன்றைய தினத்துக்குத் தள்ளிவைத்தனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button