மரபுகளை மீறிய ஆளுநர்… மாநில உரிமை காத்த முதல்வர்..!
தமிழ்நாடு சட்டமன்றத்தின் முதல் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்கியது. ஆண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால் ஆளுநர் உரை இடம் பெறுவது மரபு. தமிழ்நாடு அரசு தயாரித்துக் கொடுத்த ஆளுநர் உரையில் இடம் பெற்றிருந்த சில வார்த்தைகளை ஆளுநர் தவிர்த்திருக்கிறார் என திமுக கூட்டணி கட்சியினர் எதிர்ப்பத் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக திராவிட மாடல், தமிழ்நாடு, அண்ணா, பெரியார், கலைஞர் போன்ற தலைவர்களின் பெயர்கள் போன்ற வார்த்தைகளை ஆளுநர் பேசும் போது தவிர்த்துள்ளார் என திமுக கூட்டணி கட்சியினர் வெளிநடப்பு செய்துள்ளார்கள். அதன்பிறகு ஆளுநர் உரையின் தமிழாக்கத்தை சபாநாயகர் அப்பாவு வாசித்தார். அதனைத் தொடர்ந்து முதலமைச்சர் பேசினார்.
தமிழ்நாடு அரசு தயாரித்துக் கொடுத்த அறிக்கையை ஆளுநர் ரவி முழுமையாக வாசிக்கவில்லை என விமர்சனம் செய்து பேசினார். அவைக்குறிப்பில் அரசு தயாரித்துக் கொடுத்த உரைமட்டும் இடம் பெற வேண்டும் என்று வலியுறுத்தினார். இதுகுறித்து ஒரு தீர்மானம் முதல்வரால் வாசிக்கப்பட்டது. முதல்வர் ஸ்டாலின் பேசிக்கொண்டிருந்த போது ஆளுநர் ரவி சட்டப்பேரவையிலிருந்து வெளியேறிவிட்டார். தமிழ்நாடு சட்டமன்ற வரலாற்றில் இதுபோன்ற நிகழ்வுகள் இதுவரையிலும் நடைபெறவில்லை என அனைவரும் தெரிவித்து வருகின்றனர்.
ஆளுநர் உரையில் இடம்பெற வேண்டிய அம்சங்களை மாநிலத்தின் அமைச்சரவை கூடி ஆராய்ந்து அமைச்சரவை ஒப்புதலுடன் அதன் இறுதி வடிவம் ஆளுநருக்கு அனுப்பப்படும். இது காலங்காலமாக கடைபிடிக்கப்படும் மரபு. மாநிலத்தின் ஆளும் அரசின் கொள்கை சார்ந்த கருத்துக்கள் அந்த உரையில் இடம் பெறும். ஆளுநருக்கு பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் மாநிலத்தை ஆளுகின்ற அரசின் கொள்கைகள், ஆளும் கட்சியின் தலைவர்களின் புகழுரைகள் ஆளுநர் உரையில் இடம்பெறுவது வாடிக்கையான ஒன்றுதான். இது சட்டவிதிமுறை மீறல் இல்லை.
சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்குவதற்கு சில நாட்களுக்கு முன் ஆளுநர் தமிழ்நாடு அரசுக்கு சில கோரிக்கைகளை முன்வைத்துள்ளார். அதில் கூட்டத் தொடர் தொடங்குவதற்கு முன் தமிழ்த்தாய் வாழ்த்து இசைப்பதற்குப் பதிலாக தேசிய கீதத்தை ஒளிபரப்ப வேண்டும் என்று கூறியிருக்கிறார். அதற்கு ஆளும் அரசு தமிழ்நாட்டின் அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவது மரபு. அதனை மீறுவது தவறு என உறுதியாக இருந்ததால் ஆளுநர் பின்வாங்கியிருக்கிறார். அதேபோல் தான் சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியதும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் பழக்கவழக்கங்களையும், கலாச்சாரத்தையும் மதிக்க வேண்டிய கடமை தமிழ்நாட்டுக்கு வரும் அனைத்து ஆளுநர்களுக்கும் இருக்கிறது. இதை தற்போதைய ஆளுநர் கடைபிடிக்க மறுத்து வருகிறார்.
ஆளுநர் தன் மனதுக்குள் நினைக்கும் கருத்துக்களை புகுத்தும் விதமாக தொடர்ந்து பேசிவருகிறார். அரசியலமைப்பு சட்டப்படி ஒரு அரசின் நிர்வாகத் தலைவர் என்கிற வரம்பை மீறி அரசியல் கருத்துக்களை தொடர்ந்து பேசி வருகிறார். தேசிய கீதத்தை முதலில் பாடச் சொன்ன ஆளுநர் தேசிய கீதம் பாடுவதற்கு முன்பே அவையிலிருந்து வெளிநடப்பு செய்துவிட்டார். உண்மையிலேயே தேசபக்தி இருந்திருந்தால் தேசியகீதம் முடிந்தபிறகு ஆளுநர் வெளியே சென்றிருக்கலாமே என்கிற விமர்சனமும் ஆளுநர் மீது வைக்கப்பட்டுள்ளது.
மாநில அரசின் அமைச்சரவை ஒப்புதலுடன் அனுப்பப்பட்ட உரை ஆளுநருக்கு அனுப்பியதும் அவர் ஒப்புதலுடன் தான் அச்சடிக்கப்படும். அதேபோல் தான் கடந்த வாரம் அமைச்சரவை கூடி ஆளுநர் உரைக்கு ஒப்புதல் பெற்று ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆளுநர் ஒப்புதல் வழங்கிய உரையை அப்படியே படிப்பதுதான் மரபு. ஆனால் ஒரு மாநிலத்தில் மக்களின் ஆதரவோடு தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல் கட்சி ஆளுகின்ற போது அந்த கட்சியின் கொள்கைகளையும், கொள்கைகளை வகுத்த தலைவர்களின் பெயர்கள் இடம்பெறுவது வழக்கம். அதனைப் படிக்க கூடாது என்பதற்காக சமூக நீதி, சுயமரியாதை, அம்பேத்கர் தொடங்கி அத்தனை தலைவர்களின் பெயர்களையும் புறக்கணித்து பேசி மரபை மீறி செயல்பட்டுள்ளார். ஆளுநர் மரபுகளை மீறிச் செயல்பட்டதால் தமிழக சட்டமன்றத்தில் இதுவரை யாரும் காணாத காட்சிகள் நடந்தேறியுள்ளது. அதாவது ஆளுநர் உரை நிகழ்த்துவதற்கு முன்பும், உரை நிகழ்த்தும் போதும், உரை நிகழ்த்திய பின்பும் ஆளுநர் சட்டப்பேரவையை விட்டு வெளியேறும் வரை ஆளுநரின் செயல்பாடுகளுக்கு எவர் ஒருவரும் குந்தகம் விளைவிக்கக் கூடாது எனப் பேரவை விதி எண் 17 கூறுகிறது. ஆகையால் தான் முதலமைச்சர் பேசும்போது விதி எண் 17 ஐ தளர்த்தி அமைச்சரவை கூடி ஒப்புதல் வழங்கிய உரையைப் படித்து ஆளுநரும் ஒப்புதல் அளித்தபிறகு இங்கு வந்து அதில் இல்லாத சில விஷயங்களைச் சேர்த்து, அதில் உள்ள பல விஷயங்களைத் தவிர்த்துவிட்டு பேசியிருக்கிறார். அதனால் அச்சடிக்கப்பட்ட உரையை அவைக்குறிப்பில் இடம் பெறச் செய்ய வேண்டும் என்கிற தீர்மானத்தைக் கொண்டு வந்து நிறைவேற்றியிருக்கிறார்.
முதலமைச்சர் பேசிக்கொண்டிருந்த போதே ஆளுநர் வெளிநடப்பு செய்துள்ளார். தமிழ்நாடு சட்டமன்ற வரலாற்றில் ஆளுநர் வெளிநடப்பு செய்தது இதுவே முதல்முறை. ஆளுநர் உரையில் சில வரிகளைச் சேர்த்து வாசிக்க உரிமை இல்லாதபோது வேண்டுமென்றே தனது கருத்துக்களைத் திரித்து வாசித்து மரபை மீறி ஆளுநர் நடந்து கொண்டதால் உறுப்பினர்களும் மரபை மீறி நடந்து கொண்டுள்ளனர்.
ஆளுநர் மரபு மீறி செயல்பட்டதால் அவர் இருக்கும் போதே அவரது செயலுக்கு எதிராக முதலமைச்சர் ஸ்டாலின் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றி மாநில உரிமையை காப்பாற்றியுள்ளார். முதல்வரின் செயலுக்கு அரசியல் கட்சியினர் கட்சி வித்தியாசம் பார்க்காமல் மாநில உரிமையை பாதுகாக்க அனைவரும் ஓர் அணியில் ஆளுநருக்கு எதிராகத் திரண்டு அவரைத் திரும்பப் பெறும் வரை போராட வேண்டும்.
மாநில உரிமை, தமிழ்நாட்டின் நலன்கள் பாதிக்கப்படும் போது அனைவரும் ஒன்று திரண்டு போராட வேண்டும். இதுவரை ஆளுநரிடம் சாந்தமாக நடந்து கொண்ட முதலமைச்சர், ஆளுநர் எதிரில் அமர்ந்திருக்கும் போதே எதிர்ப்பை பதிவு செய்து மாநில உரிமையை நிலை நாட்டியுள்ளார். இதே நிலையை முதல்வரும் தொடர வேண்டும் என அனைவரும் விரும்புகின்றனர்.
– சூரிகா