முறைகேடாக சாலையின் நடுவே சுரங்கப்பாதை அனுமதி..! : அரசு நடவடிக்கை எடுக்குமா..?
சென்னையில் பல இடங்களில் டாக்டர் எம்.ஜி.ஆர். பெயரில் பல கல்லூரி இயங்கி வருகிறது. இந்த கல்லூரிகளை அஇஅதிமுக அன் கோ வின் முன்னாள் அமைச்சர் ஏ.சி.சண்முகமும், அவரது குடும்பத்தினரும் நிர்வகித்து வருகிறார்கள். எம்.ஜி.ஆர் கல்வியியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் என்கிற பெயரில் கல்லூரிகளை நடத்தி வரும் ஏ.சி.சண்முகம் கடந்த அதிமுக ஆட்சியில் முதலமைச்சராக இருந்த பழனிசாமிக்கு டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்தார். ஆட்சியாளர்களையும், அரசு அதிகாரிகளையும் தனது கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு கல்லூரிகளுக்கு பல்வேறு சலுகைகளையும், முறைகேடுகளையும் செய்து வருவதாக பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானவர் தான் ஏ.சி.சண்முகம்.
ஏற்கனவே தனது கல்லூரி இடத்தோடு அரசுக்குச் சொந்தமான நீர்நிலைப் புறம்போக்கு இடத்தை வளைத்துப் போட்டு கட்டிடம் கட்டி ஆக்கிரமித்து வைத்திருந்ததால், புகார்கள் கொடுக்கப்பட்டும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து நீதிமன்ற உத்தரவை அடுத்து, ஆக்கிரமித்து கட்டிய கட்டிடம் இடிக்கப்பட்டது. அதே போல் தற்போது மதுரவாயல் மேம்பாலம் அருகே அடையாளம்பட்டு ஊராட்சியில் சுமார் 7.35 ஏக்கர் நிலத்தில் எம்.ஜி.ஆர். கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (நிகர்நிலை பல்கலைக் கழகம்) இயங்கி வருகிறது. இங்கு ஏராளமான மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகிறார்கள். இந்த கல்லூரிக்கு எதிரில் 2.79 ஏக்கர் இவருக்குச் சொந்தமான இடம் உள்ளது. அந்த இடத்தில் தான் கல்லூரி பேருந்துகள் மற்றும் பேருந்து ஓட்டுநர்கள், ஊழியர்கள் தங்குமிடம் உள்ளது. இந்த கல்லூரிக்கும், பேருந்துகள் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் இடத்திற்கும் இடையே அடையாளம்பட்டு கிராமத்திற்குச் செல்லும் ஊராட்சி சாலை செல்கிறது. தற்போது இந்த இரண்டு இடங்களையும் இணைக்கும் விதத்தில் சாலையை துண்டித்து சுரங்கப்பாதை அமைக்க கட்டிட பணிகள் நடந்து வருகிறது.
இது சம்பந்தமாக அப்பகுதி பொது மக்களும், சமூக ஆர்வலர்களும் அரசு அதிகாரிகளிடம் பல்வேறு புகார்கள் கொடுத்தும், எந்தவித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என கூறுகிறார்கள். மேலும் இது சம்பந்தமாக விசாரித்த போது கடந்த அதிமுக ஆட்சியில் 2020 நவம்பர் மாதம் 11&ம் தேதி திருவள்ளூர் மாவட்ட ஆட்சியருக்கும், மாவட்ட ஊரக வளர்ச்சி முகாம் அலுவலர்களுக்கும் கல்லூரியின் சார்பில் சுரங்கப்பாதை அமைப்பதற்காக அனுமதி வழங்க கோரி கடிதம் கொடுத்திருக்கிறார்கள். கல்லூரியின் கடிதம் கிடைக்கப் பெற்ற ஒரு மாத காலத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து, அதாவது 2020 டிசம்பர் 20&ந் தேதி சுரங்கப்பாதை அமைக்க திருவள்ளூர் மாவட்ட ஆட்சியராக இருந்த பொன்னையன் அனுமதி வழங்கியிருக்கிறார்.
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் வழங்கிய அனுமதி கடிதத்தில் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்குவதால் மாணவர்களுக்கு இடையூறாக இருப்பதால் அடையாளம்பட்டு ஊராட்சி சாலைக்கு இடையே சுரங்கப்பாதை அமைக்க சில நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியதாக கூறப்பட்டுள்ளதாம். மழைக் காலங்களில் மழைநீர் தேங்கினால் அந்த தண்ணீரை வெளியேற்ற மழைநீர் வடிகால் கால்வாய் அமைத்து நீரை வெளியேற்ற வேண்டும். அல்லது சாலையின் குறுக்கே பாலம் அமைத்து நீரை வெளியேற்றுமாறு அரசாங்கத்திற்கு கோரிக்கை வைக்க வேண்டும். இவை எதையுமே செய்யாமல் முன்னாள் முதலமைச்சர் பழனிச்சாமி உள்ளிட்ட ஆட்சியாளர்களையும், அதிகாரிகளையும் கையில் வைத்துக் கொண்டு மழை நீரை வெளியேற்ற சுரங்கப் பாதை அமைப்பது எந்த விதத்தில் நியாயம்? என அப்பகுதி மக்கள் புலம்புகிறார்கள்.
அடையாளம்பட்டு ஊராட்சி சாலையை துண்டித்து சுரங்கப்பாதை அமைப்பதால் பொதுமக்களுக்கு எந்தவித பயனும் இல்லை. இதனால் மாணவர்கள் எந்த விதத்தில் பயன் பெறுவார்கள் என்றும் தெரியவில்லை.
தனது கல்லூரி இருக்கும் இடத்தையும், எதிரே இருக்கும் இடத்தையும் இணைத்தால் பாலத்தை சுற்றி வர வேண்டிய பேருந்துகள் சுரங்கப் பாதை வழியாக கல்லூரிக்குள் எளிதாக வந்தடையும். தற்போது பேருந்து இருக்கும் இடத்தில் இன்னொரு பிரம்மாண்டமான கட்டிடத்தை கட்டினால் இரண்டு இடத்திற்கும் எளிதில் சென்று வர இந்த சுரங்கப்பாதை பயன்படும். இதனால் அப்பகுதி மக்களுக்கு எந்தவித பயனும் ஏற்படப் போவதில்லை.
சாலையின் குறுக்கே சுரங்கப் பாதை அமைத்தால் மேலே கனரக வாகனங்கள் செல்லும் வகையில் கட்டுமானம் வலுவாக இருக்க வேண்டும். வலுவான கட்டிடம் கட்டுவதற்கு முன் அந்த இடத்தின் மண் பரிசோதனை செய்யப்பட்டதா? என்றால் அதிகாரிகள் எந்தவித பதிலையும் சொல்ல மறுக்கிறார்கள்.
இது சம்பந்தமாக கடந்த காலங்களில் அதிகாரிகளின் அலட்சியத்தால் ஏற்பட்ட தவறுகளை புகார்களாக தற்போது புதிதாக ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் ஆட்சியாளர்களிடமும், அதிகாரிகளிடமும் கொடுக்க இருக்கிறார்கள். தற்போது அமைந்திருக்கும் புதிய அரசு நடவடிக்க எடுக்கும் என்ற நம்பிக்கையில் அப்பகுதி மக்களும், சமூக ஆர்வலர்களும் காத்திருக்கிறார்கள்.
- சூரியன்