அரசியல்தமிழகம்

டாஸ்மாக் திறப்பு : வருமானம் வந்தால் போதுமா…?

பொது முடக்கம் அறிவிக்கப் பட்டதிலிருந்து சென்னையில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. சென்னையில் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துவந்த நிலையில் சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன.

மக்கள் அதிகம் கூடும் காய்கறி கடைகளுக்கே பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நிலையில் டாஸ்மாக் கடைகளில் கூட்டம் நிரம்பி வழிந்தது. இந்தக் கூட்டத்தை சமாளிக்க காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். அரசு தனது வருமானத்துக்காக மக்களின் உயிருடன் விளையாடுகிறது என குற்றச்சாட்டுகள் எழுந்தன. ஆனாலும் அரசு இதுபற்றி கவலைப்படாமல் டாஸ்மாக் கடைகளை திறந்து வருமானம் பார்த்து வந்தது.

இந்த நிலையில், சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் டாஸ்மாக் கடைகள் வருகிற 18ஆம் தேதி முதல் திறக்கப்படும் என்று டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்தது. ஆனால், மால்கள் மற்றும் நோய்க் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் இருக்கும் மதுபானக் கடைகள் இயங்காது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும் டாஸ்மாக் கடைகளில், நாளொன்றுக்கு ஒரு கடையில் 500 டோக்கன்கள் மட்டுமே வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, சென்னையில் டாஸ்மாக் கடைகள் திறப்பிற்கு அரசியல் கட்சித் தலைவர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். சென்னையில் தற்போதுதான் கொரோனா பாதிப்பு சமநிலையாக உள்ளது. மீண்டும் அதனை அதிகரிக்கும் முயற்சியாக தமிழக அரசின் இந்த முடிவு இருந்துவிடுமோ என்கிற அச்சமும் மக்களிடையே ஏற்பட்டுள்ளது.

சென்னையில் கொரோனா பாதிப்பு முன்பைவிட குறைவாக பதிவாகிவருகிறது எனக் கூறப்பட்டாலும், சராசரியாக 1000 அல்லது அதற்கு மேல் ஒவ்வொரு நாளும் பாதிக்கப்படுகின்றனர். இப்போதும் மாநிலத்திலேயே அதிக பாதிப்பு சென்னையில்தான் பதிவாகிறது. இந்தநிலையில் சென்னையில் மீண்டும் டாஸ்மாக் கடைகளை திறப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பலதரப்பில் எதிர்ப்புகள் வந்தவண்னம் உள்ளன.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “சென்னை தவிர பிற மாவட்டங்களில் கொரோனா வைரஸ் பரவியதில் டாஸ்மாக்குக்கு பெரும்பங்குண்டு எனத் தெரிந்தும், சென்னையிலும் திறப்பது பெரும் தவறு. யார் பாதிக்கப்பட்டாலும், வருமானம் வந்தால் சரி என நினைப்பது மனிதாபிமானமற்ற செயல்! ஊரடங்கு காலத்தில் டாஸ்மாக் வேண்டாம். வைரஸை மேலும் பெருக்கிட கூடாது” என பதிவிட்டுள்ளார்.

சென்னையில் டாஸ்மாக் கடைகள் திறப்புக்கு கண்டனம் தெரிவித்துள்ள திமுக எம்.பி. கனிமொழி, “பிறமாவட்ட கொரோனா பரவல் எண்ணிக்கைகளோடு சென்னையை போட்டி போட வைக்கத்தான் தமிழக அரசு சென்னையில் அவசரமாக டாஸ்மாக் கடைகளை திறக்கிறதா” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
முன்னதாக, சென்னையில் டாஸ்மாக் கடைகளைத் திறப்பது மீண்டும் அங்கே கொரோனா நோய்த்தொற்று அதிகரிக்கவே வழிசெய்யும். இந்தத் தவறான முடிவை அரசு மறுபரிசீலனை செய்யவேண்டும் என்று எம்.பி.ரவிக்குமார் வலியுறுத்தியுள்ளார். அதேபோல், சென்னையில் டாஸ்மாக் மதுக்கடைகளை திறந்திருப்பது, மக்கள் நலனில் அக்கறையில்லாத மிக மோசமான முடிவாகும் என்று டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

  • சூரிகா

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button