அரசியல்தமிழகம்

கலைஞருக்கு சிலைவைப்பேன் : திருநாவுக்கரசர்

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் வெளியிடுள்ள செய்திக் குறிப்பில், இந்தியத் திருநாட்டின் மூத்த தலைவர், அரசியல் ஞானி, 5 முறை முதலமைச்சர், பலமுறை எதிர்கட்சித் தலைவர், 13 முறை சட்டமன்றத் தேர்தலில் தோல்வியே காணாது வெற்றி பெற்ற வெற்றித் திருமகன், அரசியல், கலை, இலக்கியம், சமூகப்பணி இப்படி தோன்றிய துறைதோறும் புகழ்கொடி நாட்டியவர். உலகெங்கும் வாழ்கிற தமிழர்களின் உள்ளங்களில் நிறைந்த தலைவர். பல இந்திய குடியரசுத் தலைவர்களையும், இந்திய பிரதமர்களையும் உருவாக துணை நின்ற தலைவர். தன் நிர்வாகத் திறமையால் தமிழகத்தை வளப்படுத்தியவர். தமிழர்களின், தமிழ்நாட்டின், தமிழ் மொழியின் வளர்ச்சிக்காக தன்னையே அர்ப்பணித்துக் கொண்ட ஒப்பற்ற தலைவர். இப்படி அனைத்து வகை களிலேயும் வெற்றிக் கொடி நாட்டிய தனிப்பெரும் தலைவர். 80 ஆண்டு பொது வாழ்விற்குச் சொந்தக்காரர். 60 ஆண்டுகள் தமிழ்நாட்டின் தலையெழுத்தை நிர்ணயித்த தலைவர் டாக்டர் கலைஞர்.


இத்தகைய நிகரற்ற, ஒப்பற்ற தலைவர் டாக்டர் கலைஞர் அவர்களுக்கு பிரதமர் மோடி தலைமையிலான இந்திய அரசு ‘பாரத ரத்னா” விருது வழங்கி கௌரவிக்க வேண்டுமென என் சார்பிலும், தமிழ்நாடு காங்கிரஸ் சார்பிலும், தமிழ் மக்கள் சார்பிலும், உலகெங்கும் வாழ்கிற தமிழ் மக்கள் சார்பிலும் மத்திய அரசை வற்புறுத்தி கேட்டுக் கொள்கிறேன். மத்தியில் ஆளும் இவ்வரசு இதனைசெய்யத் தவறினால் வருங்காலத்தில் ராகுல்காந்தி அவர்கள் தலைமையில் அமையப் போகிற மத்திய அரசு டாக்டர் கலைஞர் அவர்களுக்கு பாரத ரத்னா விருதை நிச்சயம் வழங்கி கௌரவிக்கும்.
தமிழக அரசும் சென்னை நகரின் ஒரு பிரதான சாலைக்கு டாக்டர் கலைஞரின் பெயரை சூட்ட வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். அருமை அண்ணன் கலைஞர் அவர்களின் துணையோடு அறந்தாங்கி சட்டமன்றத் தொகுதியில் நானும், நான் நிறுத்திய வேட்பாளர்களும் சிலமுறை வெற்றி பெற்றுள்ளோம். சட்டமன்ற உறுப்பினர்கள் தொகுதி மேம்பாட்டு நிதி ரூபாய் 25 லட்சம் முதன் முறையாக என் வேண்டுகோளை ஏற்று அறிவித்தார்.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்திற்கு புதுக்கோட்டை மன்னர் ராஜகோபால தொண்டைமான் அவர்களது பெயரை என் வேண்டுகோளுக்கிணங்க ஏற்று சூட்டினார். மன்னரின் திருவுருவச் சிலையையும் திறந்து வைத்தார். மணமேல்குடி தாலுகாவை உருவாக்கித் தந்தார். இப்படி அறந்தாங்கி தொகுதிக்கும், புதுக்கோட்டை மாவட்டத்திற்கும், தமிழக மக்களுக்கும் சட்டமன்றத்தில் நான் விடுத்த பல வேண்டுகோளை ஏற்று கட்சி வித்தியாசம் பார்க்காமல் அறிவித்தார்.
என் திருமணம் தொடங்கி என் இல்லத்து திருமணங்கள் அனைத்தையும் நடத்தி வைத்தார். ஏறக்குறைய 45 ஆண்டுகள் அண்ணன் கலைஞரோடு கட்சி பாரபட்சமின்றி நெருக்கமாக பழகிடும் வாய்ப்பை பெற்றிருந்தேன். இந்தியத் திருநாட்டின் மூத்த தலைவரும், உலகெங்கும் வாழ்கிற தமிழர்களின் உள்ளங்களில் வாழ்பவரும் என் இதயத்தில் நீக்கமற நிறைந்தவருமான அருமை அண்ணன் டாக்டர் கலைஞர் அவர்களுக்கு என் குடும்பத்தின் சார்பிலும், அறந்தாங்கி தொகுதி மக்களின் சார்பிலும் டாக்டர் கலைஞர் அவர்களது முழு திருவுருவ வெண்கலச் சிலை அறந்தாங்கியில் விரைவில் நிறுவப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button