வறுமையின் காரணமாக படிக்க இயலாத மாணவனின் கல்விக்கு உதவிய காவல் கண்காணிப்பாளர் மற்றும் பள்ளி தாளாளர்
இராமநாதபுரம் மாவட்டம் பனையடியேந்தல் கிராமத்தைச் சேர்ந்த தினேஷ்குமார் என்பவர் கடந்த கல்வி ஆண்டில் உத்திரகோசங்கை அரசு மேல்நிலைப்பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு படித்து பொது தேர்வில் 1081 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார். இவருக்கு சென்னை அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில் சுய நிதி பிரிவில் பொறியியல் படிப்பதற்கு எளிதாக இடம் கிடைத்தும் அவருடைய குடும்பத்தின் வறுமை காரணமாக அவரால் கல்லூரியில் சேருவதற்கான தொகையினை செலுத்த இயலவில்லை என்ற செய்தி கடந்த சில தினங்களுக்கு முன்பு தினசரி பத்திரிக்கையில் வெளிவந்திருந்தது.
இதனை அறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனா இ.கா.ப அந்த மாணவரின் படிப்பிற்கு பண உதவி செய்வதற்கு விருப்பம் உள்ள சமூக ஆர்வலர்கள் உதவி செய்ய கேட்டு கொண்டிருந்தார்.
இதனை அறிந்த கீழக்கரை இஸ்லாமியா மெட்ரிக்குலேசன் பள்ளியின் தாளாளர் திரு.முகமது இபுராகிம் என்பவர் தினேஷ்குமாருக்கு கல்வி உதவித் தொகையாக ரூ.40000/- அளிக்க முன்வந்தார். இத்தொகையினை 14.08.2018-ம் தேதியன்று காலை இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பளார் அலுவலகத்தில் காவல் கண்காணிப்பளார் அவர்கள் முன்னிலையில் மாணவரின் பெற்றோர்கள் உதவி தொகைக்கான காசோலையை பள்ளியின் தாளாளர் அவர்களிடமிருந்து பெற்றுக்கொண்டார். மாணவரின் படிப்பிற்கு உதவிய இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் பள்ளி தாளாளர் ஆகியோரின் செயல்பாடு பாராட்டிற்குரியது.