பிரபல ஸ்வீட் கடைகளில்… சுகாதாரத்துறை அதிகாரிகள் கவனத்திற்கு
பொதுமக்கள் பண்டிகை காலங்களில் உறவினர்களுக்கு இனிப்புகள் வழங்கி வாழ்த்து சொல்லும் வழக்கத்தை காலங்காலமாக கடைபிடித்து வருகின்றனர். ஒரு காலத்தில் வீட்டில் தயாரிக்கப்பட்ட இனிப்பு வகைகளை உறவினர்களுக்கு வழங்கி வந்த நிலையில், பணிச்சுமை காரணமாக தங்களது இல்லங்களில் தயார் செய்ய இயலாத நிலையில், தற்போது கடைகளில் இனிப்புகள் வாங்கி பயண்படுத்துவதோடு, உறவுகளுக்கும் வழங்கி மகிழ்கின்றனர்.
கவர்ச்சிகரமான விளம்பரங்கள் மூலம் வாடிக்கையாளர்களின் ஆசையை தூண்டும் வகையில் பிரபல நிறுவனங்கள் பண்டிகை காலங்களில் விதவிதமான வண்ணங்களில் இனிப்புகளை தயார்செய்து விற்பனை செய்கின்றனர். இந்நிலையில் சென்னை சௌகார் பேட்டை முல்லா சாஹிப் தெருவில் பிரபலமான ஸ்வீட் கடைகள், தங்கள் உற்பத்தி செய்யும் இடத்திலிருந்து விற்பனை கடைகளுக்கு இனிப்புகளை கொண்டு செல்லும்போது சுகாதாரமற்ற நிலையில் திறந்தவெளி வாகனத்தில் எடுத்துச் செல்கின்றனர்.
இனிப்பு வகைகளை வாகனத்தில் ஏற்றும் ஊழியர்கள் கை கவசம் எதுவும் அணியாமல், தங்கள் உடலிருந்து வெளியேறும் வியர்வையுடன் இனிப்பு வகைகளை வாகனத்தில் அடுக்கி வைக்கின்றனர். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
தீபாவளி திருநாளை முன்னிட்டு பொதுமக்கள் வாங்கிச் செல்லும் உணவுப் பொருட்களை பாதுகாப்பற்ற முறையில் எடுத்துச் செல்லும் நிறுவனங்கள் மீது உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.