டேங்கர் லாரிகளில் டீசல் திருடும் கும்பல்….! கண்டு கொள்ளாத சோழவரம் காவல்துறையினர்.!
திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட மீஞ்சூர்-வண்டலூர் பைபாஸ் சாலையில் பங்க் கடையில் ஶ்ரீ கணபதி வாட்டர் சர்வீஸ் & ஏர் கிரீஸ் என்கிற பெயரில் விளம்பர பலகை அமைத்து டேங்கர் லாரிகளில் டீசல் திருடப்பட்டு வருவதாக தெரியவருகிறது.
இது சம்பந்தமாக விசாரித்த போது மஞ்சம் பாக்கம் தாபா ஓட்டல் உரிமையாளர் விஷ்வா என்பவர் நீண்ட காலமாக இந்த தொழிலில் ஈடுபட்டு வருகிறாராம். ஏற்கனவே இவர் மீது உணவு கடத்தல் தடுப்பு பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு அந்த வழக்கு நிலுவையில் உள்ளது. மீஞ்சூர்- வண்டலூர் பைபாஸில் அருமந்தை சர்வீஸ் சாலையில் பங்க் கடை அமைத்து தொழிற்சாலைகளுக்கு டீசல் ஏற்றிச் செல்லும் டேங்கர் லாரிகளில், லாரி உரிமையாளர், ஓட்டுநர் துணையுடன் டேங்கர் லாரிகளில் வைக்கப்பட்டுள்ள சீலை உடைத்து குறிப்பிட்ட அளவில் டீசலை எடுத்துக் கொண்டு மீண்டும் சீல் வைத்து லாரிகளை அனுப்பி வைப்பதை நீண்ட காலமாக செய்து வருகிறார்களாம். இவ்வாறு டேங்கர் லாரிகளில் எடுக்கப்பட்ட டீசலை வெளிச்சந்தையில் தற்போதைய விலைக்கு விற்பனை செய்து கொள்ளை லாபம் பார்த்து வருகிறார்களாம்.
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன்(IOC), பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் (BPC) ஆகிய நிறுவனங்களில் இருந்து தொழிற்சாலைகள், பெரிய தொழில் நிறுவனங்களுக்கு டேங்கர் லாரிகளில் டீசல் நிரப்பப்பட்டு சீல் வைத்து அனுப்பி வைக்கிறார்கள். இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் டேங்கர் லாரிகளில் எடுக்கப்பட்ட பெட்ரோல்,டீசலை வெளிச்சந்தையில் விற்பனை செய்வதற்கு, எரிபொருள் ஏற்றிச் செல்வதற்கான அனுமதி இல்லாமல் சிறிய டேங்கர் லாரியை இவர்களே தயார் செய்து வைத்துள்ளார்கள்.
இது சம்பந்தமாக மூத்த பத்திரிகையாளர் டேங்கர் லாரியில் ( TN 03 J 5650 ) டீசல் எடுத்து சிறிய டேங்கர் லாரியில் ( TN 02 J 5011 ) நிரப்பும் போது புகைப்படங்கள் எடுத்துள்ளார். அப்போது விஷ்வாவின் அடியாட்கள், பத்திரிக்கையாளரை படம் பிடிக்க விடாமல் தடுத்ததோடு , தரக்குறைவான வார்த்தைகள் அதாவது நீ எங்கே வேண்டுமானாலும் போ, காவல் துறையோ, உணவுக் கடத்தல் பிரிவோ யாரும் எங்களை எதுவும் செய்ய முடியாது என்று பேசி, இவரையும், இவரது வாகனத்தையும் பல கோணங்களில் படம் பிடித்துள்ளனர். பத்திரிகையாளர் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளித்ததும், வழக்கம் போல் தாமதமாக வந்த சோழவரம் காவல்நிலைய ரோந்து வாகனத்தில் வந்த தலைமை காவலர் செல்லப்பா, பத்திரிகையாளரை தொடர்பு கொண்டு அவர்கள் ஓடி விட்டார்கள் என்று கூறியுள்ளார்.
இதை பார்க்கும் போது சட்ட விரோத செயல்களை அரங்கேற்றி வரும் கும்பலை கண்டும் காணாமல் போகிறார்களா ? சோழவரம் காவல்துறையினர் என்கிற சந்தேகம் எழுகிறது. ஆவடி மாநகராட்சி காவல் ஆணையர் இது போன்ற சம்பவங்களில் ஈடுபடும் நபர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகளும், சென்னை மண்டல உணவு கடத்தல் தடுப்பு பிரிவு துணை கண்காணிப்பாளரும் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களும் அப்பகுதியினரும் கோரிக்கை விடுத்துள்ளனர். நடவடிக்கை எடுப்பார்களா ? காத்திருப்போம்….