பெண் சாராய வியாபாரியுடன் சேர்ந்து மது கடத்திய காவல் ஆய்வாளர் : கள்ளச்சாராயம் குடிசை தொழிலான கொடுமை
கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பணிபுரியும் காவல் ஆய்வாளர் ஒருவர் பெண் சாராய வியாபாரியுடன் சேர்ந்து காரில் மது கடத்தி வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் சாவடி பகுதியில் மதுவிலக்கு அமல்பிரிவின் சோதனைச் சாவடி அமைந்துள்ளது. இங்கு காவலர்கள் வழக்கமான வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த மகிந்திரா பொலீரோ கார் ஒன்றை மடக்கி சோதனை செய்ய முற்பட்டபோது, காரை ஓட்டி வந்த நபர் தப்பியோடியுள்ளார். காரை சோதனை செய்த போலீசார், 168 புதுச்சேரி மது பாட்டில்கள், 30 லிட்டர் கள்ளச்சாராயம் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். அத்துடன் காரில் வந்த சமுத்திரக்கனி என்ற பெண்ணை கைது செய்தனர். அந்தப் பெண்ணிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
காரிலிருந்து இறங்கி தப்பியோடிய நபர் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திலுள்ள காவல் கட்டுப்பாட்டு அறையில் பணிபுரியும் ஆய்வாளர் சுந்தரேசன் என்பது தெரியவந்தது. விழுப்புரம் மாவட்ட காவல்துறையில் பணியாற்றி வந்த சுந்தரேசன், அண்மையில்தான் கடலூருக்கு மாற்றப்பட்டுள்ளார். விழுப்புரத்தில் அவர் பணியாற்றியபோது பெண் சாராய வியாபாரி சமுத்திரக்கனியுடன் பழக்கம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. சமுத்திரகனியின் கணவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விடவே, சீர்காழி அருகிலுள்ள சட்டநாதபுரத்திற்கு அவர் இடம் மாறியுள்ளார். தனது பழைய நட்பை பயன்படுத்தி காவல் ஆய்வாளர் சுந்தரேசனுடன் சேர்ந்து அவரது சொந்த காரிலேயே புதுச்சேரியிலிருந்து சீர்காழிக்கு மதுபானங்களை கடத்தி வந்துள்ளார் சமுத்திரக்கனி.
சமுத்திரக்கனி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், காவல் ஆய்வாளர் சுந்தரேசனின் கார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தலைமறைவாகவுள்ள சுந்தரேசன் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் தேடி வருகின்றனர்.
இதேபோல் வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே கள்ளச்சாராயம் காய்ச்சி விற்கும் பரபரப்பான காட்சிகள் வெளியாகி உள்ளது.
வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை அடுத்த ரங்கசமுத்திரம், ஏரிப்பட்டறை உள்ளிட்ட மலையடிவாரக் கிராமங்களில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதை சிலர் குலத் தொழிலாக செய்து வருவதாகவும் காவல் துறையினர் மாதந்தோறும் மாமூல் வாங்கிக் கொண்டு கண்டு கொள்வதில்லை என்றும் நீண்ட நாட்களாக புகார் இருந்து வந்துள்ளது.
குளம் போல காட்சி அளிக்கும் சாராய ஊரலை ஒரு தகர பெரலில் ஊற்றி ராட்சத அடுப்பு வைத்து சாதாரணமாக சாராயம் காய்ச்சிக் கொண்டிருந்தது ஒரு கும்பல். இங்குள்ளவர்கள் குடிசை தொழில் போல சாராயம் காய்ச்சுவதை பார்க்க முடிந்தது. பெரிய டியூப்பில் ஆவியாக செல்லும் ஊரல் கரைசல் சிறிய டியூப் வழியாக சாராயமாக பிளாஸ்டிக் குடத்தில் வடிந்து கொண்டிருந்தது.
இங்கு தயாரிக்கப்படும் கள்ளச்சாராயம் கேன்கள் மற்றும் லாரி டியூப்களில் அடைக்கப்பட்டு சுற்றுவட்டார பகுதிகளுக்கும் வெளியூர்களுக்கும் அனுப்பப்பட்டு வருகிறது. அங்குள்ளவர்கள் அதனை சிறிய மற்றும் பெரிய பாலிதீன் பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனை செய்கின்றனர்.
அம்மனன்குப்பம். காளியம்மன்பட்டி, செங்குன்றம், பூங்குளம், வெங்கடாபுரம் ஆகிய இடங்களில் மிகவும் எளிதாகக் கிடைக்கும் கள்ளச்சாரய பொட்டலங்கள், அருகிலுள்ள மலைப் பகுதி மற்றும் முட்புதர்களுக்குள் மூட்டை மூட்டையாக மறைத்துவைத்து விற்பனை செய்து வருவதாக அந்தபகுதி மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
இவ்வகை கள்ளச்சாராய பாக்கெட்டுக்கள், பெரும்பாலும் வறுமையில் வாடும் கூலித் தொழிலாளிகளை குறிவைத்தே விற்பனை செய்யப்படுகின்றன. வாங்கும் சொற்ப கூலியையும் கள்ளச்சாராய வியாபாரிகளுக்கு கொடுத்துவிட்டு கூலித் தொழிலாளர்கள் தங்கள் உடலையும் வீட்டின் பொருளாதாரத்தையும் சீரழித்து வருவதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்தால், போலீசார் மூலம் தகவல் தெரிவிப்பவர்களை எளிதாக அடையாளம் கண்டு கள்ளச்சாராய உற்பத்தி கும்பல் தாக்குவதாகவும் கூறப்படுகிறது. இதனால் காவல்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கவே அஞ்சுவதாக இப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
அதே நேரத்தில் காவல்துறையினருக்கு தெரியாமல் கள்ளச்சாராயம் காய்ச்சுகிறார்கள் என்றே வைத்துக் கொள்வோம் சாராயம் காய்ச்சும் வீடியோவை பார்த்த பின்னராவது வேலூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல்துறையினர் விழித்துக் கொண்டு நடவடிக்கை மேற்கொள்வார்களா ? என்பதே சாமானியனின் கேள்வியாக உள்ளது.
- நமது நிருபர்