பரமக்குடியில் பணி நியமனத்திற்கு 45 லட்சம் வசூல் ! மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை !
இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அலுவலக உதவியாளர், ஓட்டுநர், பதிவறை எழுத்தர், காவலர் உள்ளிட்ட பதவிகளுக்கு 45 லட்சம் பணம் வசூலித்துக் கொண்டு, பதவி நியமனம் செய்ய வட்டார வளர்ச்சி அதிகாரி மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்ய கடிதம் அனுப்ப உள்ளதாக, பணம் கொடுத்தவர்கள் பேசிய ஆடியோ உள்ளிட்ட ஆதாரங்கள் வெளியாகியுள்ளது.
பரமக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கடந்த 19 ஆம் தேதி ஒன்றியக்குழு கூட்டம் நடைபெற்றுள்ளது. அந்த கூட்டத்தில் 23 மூன்று தீர்மானங்களுக்கு ஒன்றிய கவுன்சிலர்களிடம் கையெழுத்து வாங்கி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதில் 19 வது தீர்மானமாக மேற்கண்ட பதவிகளுக்கு நேர்காணல் கடிதம் அனுப்பிய செலவினத் தொகையை அங்கீகரிக்கும் தீர்மானமும் இருந்துள்ளது.
பின்னர் கடந்த 24 ஆம் தேதி மேற்கண்ட பதவிகளுக்கு விண்ணப்பித்த 250க்கும் மேற்பட்ட விண்ணப்பதாரர்களிடம் நேர்காணல் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு என்கிற பெயரில் பெயரளவிற்கு நடத்தியுள்ளனர். இதற்கு முன்னரே ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் சிந்தாமணி, துணைத் தலைவர் சரயு ராஜேந்திரன், வட்டார வளர்ச்சி அலுவலர் கருப்பையா ஆகிய மூவரும, அலுவலக உதவியாளர் மற்றும் ஓட்டுநர் பணிகளுக்கு தலா 12 லட்சம், காவலர் மற்றும் பதிவறை எழுத்தர் பணிகளுக்கு தலா 9 லட்சம் என மேற்கண்ட நான்கு பணிகளுக்கும் குறிப்பிட்ட நான்கு நபர்களை தேர்வு செய்துள்ளனர்.
பணம் கொடுத்து தேர்வானவர்கள் மற்றும் அவர்களது உறவினர்கள் தங்களுக்கு எப்படி பணி கிடைத்தது என சிலரிடம் பேசிய ஆடியோக்கள் கிடைத்ததின் பேரில் விசாரித்தபோது… பரமக்குடி ஊராட்சி ஒன்றியத் தலைவர், துணைத் தலைவர் ஆகிய இருவரின் சமுதாயத்தைச் சேர்ந்தவர்தான் வட்டார வளர்ச்சி அதிகாரி கருப்பையா. ஆகையால் தலைவர், துணைத் தலைவருடன் கூட்டுச் சேர்ந்து கொண்டு பதவிகளை விற்பனை செய்துள்ளனர். மேலும் ஆளும் கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் முருகேசன், மாவட்டச் செயலாளர் முத்துராமலிங்கம் உள்ளிட்டோருக்கும் கொடுத்து சரிக்கட்ட வேண்டும் எனவும் வட்டார வளர்ச்சி அதிகாரி கூறினாராம். இது சம்பந்தமாக மாவட்ட ஆட்சியர் விசாரணை மேற்கொண்டு, முறைகேடாக பணம் பெற்றுக் கொண்டு தேர்வு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதோடு, முறையாக நேர்காணல் நடத்தி தகுதி வாய்ந்தவர்களை நியமனம் செய்ய வேண்டும் என விண்ணப்பித்தவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் இந்த பணிநியமனத்தை நிறுத்தாவிட்டால் மதுரை உயர்நீதிமன்றத்தை நாடவும் தயாராக உள்ளனர்.
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டாலும் பரமக்குடியில் திமுக, அதிமுகவினர் கூட்டணி அமைத்து வசூல் செய்கின்றனர் என இருதரப்பு தொண்டர்களும் புலம்புகின்றனர்.