பெண்கள் பாதுகாப்பிற்கு அக்கறை காட்டாத அரசு
கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சியில் இளம் பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியும், ஆபாசமாக வீடியோ எடுத்தும் அவர்களை மிரட்டி பணம், நகை பறித்த வழக்கில் திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார், மணிவண்ணன் ஆகிய 5 பேர்கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடைசியாக கைது செய்யப்பட்ட மணிவண்ணன் அளித்த வாக்குமூலத்தில் பல முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. அவர் அளித்த வாக்குமூலத்தில் இவர்கள் கூட்டாக இணைந்து பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்தும், அவற்றை படம் பிடித்து அவர்களை மிரட்டி வந்ததும், பாலியல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் அவர்களை துன்புறுத்தியது தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த வழக்கு தொடர்பான விசாரணையை சிபிசிஐடி காவல்துறையினர் மேற்கொண்டு வந்தனர். ஆனால் இந்த விவகாரத்தில் அதிமுக-வினர் பலருக்கும் தொடர்பு இருப்பதாக கூறி திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு எழுப்பி வந்தன.
இந்நிலையில் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், பொள்ளாச்சியைப் போல பெரம்பலூரிலும் பல பெண்கள் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டதாக வெளிவந்துள்ள தகவல் அதிர்ச்சியளிப்பதாக தெரிவித்துள்ளார். பொள்ளாச்சி பாலியல் கொடூர வழக்கை அதிமுக அரசு பொறுப்பற்ற முறையில் கையாண்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார். பெண்கள் பாதுகாப்பு குறித்து அரசு எவ்வித அக்கறையோ ஆர்வமோ காட்டாமல் இருப்பது கண்டனத்துக்குரியது என்றும் ஸ்டாலின் கூறியுள்ளார்.
பொள்ளாச்சி விவகாரத்தில் அதிமுக அரசின் தோல்வி தற்போது பெரம்பலூரிலும் எதிரொலித்திருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். பொள்ளாச்சி வழக்கை சி.பி.ஐ.யிடம் விரைந்து ஒப்படைக்கவும், பெரம்பலூர் வழக்கு விசாரணையை தீவிரப்படுத்தவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். அதை தொடர்ந்து பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு சிபிஐ-க்கு மாற்றப்படுவதாக தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது.
பொள்ளாச்சி பாலியல் கொடூர சம்பவம் குறித்து 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிபிஐ விசாரணை தொடங்கியுள்ளது. அதன்படி, இந்த விவகாரத்தில் சிபிஐ இரண்டு வழக்குகளை பதிவு செய்துள்ளது. அதில், பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையில், பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம், பெண்களுக்கு எதிரான குற்றத்தில் ஈடுபடுதல், தொழில்நுட்பத்தை தவறான வழியில் கையாளுதல் உள்ளிட்ட 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதில் சபரிராஜன், திருநாவுக்கரசு, சதீஷ், வசந்த குமார் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பான முதல் தகவல் அறிக்கையில், பெண்ணிடமிருந்து நகை பறித்த சம்பவமும் சேர்க்கப்பட்டுள்ளது. இதே விவகாரத்தில் மேலும் ஒரு வழக்கை சிபிஐ பதிவு செய்யப்பட்டுள்ளது. பொள்ளாச்சி குற்றவாளிகளால் பாதிக்கப்பட்ட சகோதரர் அளித்த புகாரின் அடிப்படையில் செந்தில், பாபு, மணி மற்றும் வசந்தகுமார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்கள் மீது 5 பிரிவுகளின் கீழ் மற்றொரு வழக்கை பதிவு செய்துள்ளது சிபிஐ அமைப்பு.
முன்னதாக சிபிசிஐடி அதிகாரிகள் பொள்ளாச்சி விவகாரத்தை விசாரித்த போது, அவர்கள் சேகரித்த ஆவணங்களை சென்னையில் உள்ள சிபிஐ அதிகாரிகளிடம் வழங்கியுள்ளனர். விசாரணையில் முதற்கட்டமாக தொழில்நுட்பம் தொடர்பான ஆதாரங்களை திரட்டும் பணியில் சிபிஐ அதிகாரிகள் ஈடுபடவுள்ளனர். மேலும், வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள குற்றவாளிகளிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக விரைவில் அவர்கள் நீதிமன்றத்தை நாடுவார்கள் என்றும் முதற்கட்ட தகவல்கள் வெளிவந்துள்ளன.
கைது செய்யப்பட்டவர்கள் மீது ஏற்கனவே பாலியல் துன்புறுத்தல், தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல், பெண்களுக்கு எதிரான வன்முறையில் ஈடுபடுதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருந்தது. இந்நிலையில், மணிவண்ணன் அளித்த தகவலின் பேரில் கைது செய்யப்பட்டவர்கள் மீது பாலியல் வன்கொடுமை வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கின் கீழ் கைது செய்யப்படும் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை வழங்கப்படுவது சட்டவிதியாக உள்ளது. அதனால் பொள்ளாச்சி விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ளவர்களுக்கு நிச்சயம் ஆயுள் தண்டனை கிடைக்கும் என்கிறார்கள் சட்டவல்லுநர்கள். எனினும், குற்றவாளிகள் தரப்பிலிருந்து வழக்கு விசாரணைக்கு சென்றால் இதனுடைய சட்டவிதிகள் மாறுபடலாம் என்பதும் அவர்களின் கருத்தாக உள்ளது.
இந்த விவகாரத்தில் அதிமுக பிரமுகரான பார் நாகராஜ் உள்பட சிலர் கைது செய்யப்பட்டனர். இதனைத் தொடர்ந்து ஜாமீனில் வெளியே வந்த பார் நாகராஜ் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார்.
இந்நிலையில், கோவை மாவட்டம் ஆனைமலையைச் சேர்ந்த விஜய் என்பவர் கோகிலா மற்றும் அவரது கணவர் சம்பத் மீது கொடுத்த மோசடிப் புகாரை திரும்பப்பெறக் கூறி விஜய்யின் மனைவி ஜூலியன்ராயர் என்பவரை செல்போனில் பார் நாகராஜ் மிரட்டல் விடுப்பது போன்ற ஆடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலானது.
இதனைத் தொடர்ந்து இந்த ஆடியோ விவகாரம் குறித்து கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்த பிறகு, செய்தியாளர்களிடம் பேசிய நாகராஜ், அந்த ஆடியோவில் பேசுவது நான் கிடையாது.
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு சிபிஐ வசம் சென்ற நிலையில், வேண்டுமென்றே என்னை சிக்கவைக்கவைப்பதற்காக இப்படி ஒரு நாடகத்தை அரங்கேற்றியுள்ளனர். இது தொடர்பாக மிரட்டல்களும் வருகின்றன. ஆனால், நான் இதற்கெல்லாம் அஞ்சும் நபர் கிடையாது என்று தெரிவித்துள்ளார்.