குற்றங்களை தடுக்க எஸ்பிக்களுக்கு டிஐஜி முத்துசாமி அதிரடி உத்தரவு
வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், குழந்தை திருமணங்களை தடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று எஸ்பிக்களுக்கு, டிஐஜி முத்துசாமி உத்தரவிட்டார். வேலூர் சரகத்திற்கான மாதாந்திர குற்ற ஆய்வுக்கூட்டம், வேலூர் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் டிஐஜி முத்துசாமி தலைமையில் நடைபெற்றது . எஸ்பிக்கள் மணிவண்ணன்(வேலூர்) கிரண்ஸ்ருதி (ராணிப்பேட்டை), ஆல்பர்ட் ஜான் (திருப்பத்தூர்), கார்த்திகேயன் (திருவண்ணாமலை) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் கடந்த மாதம் நடந்த குற்றங்கள் தொடர்பாகவும், அதில் எத்தனை வழக்குகளில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். நிலுவையில் உள்ள குற்ற வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும். ரவுடிகள் மீதும், பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள நபர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வரும் காலங்களில் அதிகளவில் குற்றங்கள் நடைபெறாத வகையில் எஸ்சி, எஸ்டி தொடர்பான வழக்குகள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், குழந்தை திருமணங்கள் தொடர்பாக, அந்தந்த காவல்நிலைய எல்லைக்குட்பட்ட இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் நான்கு மாவட்டங்களிலும் பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அதனை எஸ்பிக்கள் கண்காணிக்க வேண்டும்.
தீபாவளி பண்டிகை என்பதால் பட்டாசு, புத்தாடைகள் வாங்க பொதுமக்கள் அதிகளவில் கடைகளுக்கு வருவார்கள். அதேபோல் சொந்த ஊர்களுக்கு செல்லவும் பஸ்நிலையங்களில் கூட்டம் அதிகமாக இருக்கும். எனவே போக்குவரத்து விபத்துக்களை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டிஐஜி முத்துசாமி அறிவுறுத்தினார்.
இரவு ரோந்து பணிகளை தீவிரப்படுத்தி குற்றங்களை குறைத்து குற்றவாளிகள் கண்காணிக்கப்பட வேண்டும். மேலும் காவல்நிலையங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டு, பொதுமக்களுக்கு உள்ள பிரச்னைகளை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டிஐஜி முத்துசாமி, நான்கு மாவட்ட எஸ்பிக்களுக்கு உத்தரவிட்டார். இதில் நான்கு மாவட்டங்களைச் சேர்ந்த ஏடிஎஸ்பிக்கள், டிஎஸ்பிக்கள் கலந்து கொண்டனர்.