கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை… : விலகாத மர்மங்கள்… விரைவில் -சிக்குவாரா எடப்பாடி?
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான கொடநாடு எஸ்டேட் பங்களாவில் கடந்த 2017ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 23ஆம் தேதி கொலை மற்றும் கொள்ளை சம்பவம் நடைபெற்றது. இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்களாக கருதப்பட்டவர்கள் மர்மமான முறையில் அடுத்தடுத்து மரணமடைந்தனர்.
முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட சயான் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் காரில் சென்ற போது விபத்துக்குள்ளானார். அந்த விபத்தில் சயான் மட்டும் உயிர் பிழைக்க, அவரது மனைவி மற்றும் மகள் உயிரிழந்தனர்.
இந்த மர்ம மரணங்களுக்குப் பின்னணியில் அப்போதைய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இருப்பதாக, தெஹல்கா பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் மேத்யூ சாமூவேலிடம் வழக்கின் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் சயான், மனோஜ் ஆகியோர் வாக்குமூலம் அளித்திருந்தார். இது கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதையடுத்து, சயான் மற்றும் மனோஜ் ஆகிய இருவரை கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் தமிழக காவல்துறையினர் டெல்லியில் கைது செய்தனர்.
இருப்பினும், இந்த வழக்கில் பல்வேறு மர்மங்கள் இன்னும் வெளிச்சத்துக்கு வராமல் உள்ளன. கொடநாடு எஸ்டேட்டில் என்ன நடந்தது என்பது பற்றிய முடிச்சுகள் இன்னும் அவிழ்கப்படாமல் உள்ளன.
இந்த நிலையில், அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு சென்னை மண்டல செயலாளர் அஸ்பயர் சுவாமிநாதன், ஜெயலலிதா காலத்தில் இருந்த முக்கியத்துவம் ஐடிபிரிவுக்கு தற்போது இல்லை என்று குற்றம் சாட்டி தனது பதவியை ராஜினாமா செய்தார்.
அதன் தொடர்ச்சியாக, “கொடநாடு எஸ்டேட்டில் கொலை கொள்ளை, விலகாத மர்மங்கள் வெளிச்சத்துக்கு வராத உண்மைகள் விரைவில்” என்றும், “கொடநாடு எஸ்டேட்டில் காவலர் கொலை செய்யப்பட்டு கொள்ளை முயற்சி, கார் டிரைவர் விபத்தில் மரணம் என அவிழ்க்கப்படாத முடிச்சுகள்.. ஆதாரங்களுடன் அனைத்திற்கும் அதிர வைக்கும் விடைகள்” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் அஸ்பயர் சுவாமிநாதன் பதிவிட்டுள்ளார்.
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு மாஜி அமைச்சர்களின் ஊழல் புகார்கள் உள்ளிட்ட அவர்கள் மீது வலுவான வழக்குகள் போடுவதற்கு ஏதுவான வழக்குகள் தோண்டப்பட்டு வருகிறது. அதன் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிகிறது. இந்த நிலையில், அஸ்பயர் சுவாமிநாதனின் இந்த ட்வீட் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கொடநாடு தொடர்பான வெளிச்சத்துக்கு வராத மர்மங்களை அவரே வெளியிடப் போகிறாரா அல்லது அதுபற்றி தனக்கு தெரிந்தவற்றை ஆளும் திமுக அரசிடம் அவர் தெரிவித்து விட்டாரா? அதன்பேரில் விரைவில் நடவடிக்கை எடுக்கப்போவதை சுட்டிக்காட்டும் வகையில் அவர் ட்வீட் பதிவிட்டுள்ளாரா என்பது பேசுபொருளாகி உள்ளது. ஏற்கனவே கொடநாடு மர்ம மரணங்களுக்குப் பின்னணியில் அப்போதைய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இருப்பதாக சயன் தெரிவித்துள்ள நிலையில், இந்த வழக்கில் எடப்பாடி பழனிசாமி சிக்குவாரா என்பது போகப்போகத்தான் தெரியும் என்று சுருக்கமாக முடித்துக் கொண்டனர் விவரம் அறிந்தவர்கள்.