அரசியல்தமிழகம்

பொதுவுடைமைப் போராளி தா.பாண்டியன்

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே உள்ள வெள்ளை மலைப்பட்டி கிராமத்தில் டேவிட், நவமணி தம்பதிக்கு நான்காவதாக பிறந்தவர் தா.பாண்டியன். 1932-ஆம் ஆண்டு மே மாதம் 18-ஆம் தேதி பிறந்த இவர், சிறு வயது முதலே பொதுவுடமை சிந்தனையுடனும், ஒடுக்கப்பட்ட மக்களின் நலனில் அதிக ஆர்வத்துடனும் இருந்தார். காரைக்குடி அழகப்பா கல்லூரியில் படிக்கும் போது மாணவர் சங்கத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

பின்னர் அதே கல்லூரியில் ஆங்கிலத்துறையில் விரிவுரையாளராக பணியாற்றினார். சிறந்த மொழிபெயர்ப்பாளரான இவர், பொதுக் கூட்டங்களில் இந்திரா காந்தி தொடங்கி ராஜீவ் காந்தி வரையில் பலரது பேச்சுகளை மேடையில் மொழிபெயர்த்திருக்கிறார். ஸ்ரீபெரும்புதூரில் 1991-ம் ஆண்டு மே 21-ல் நடத்தப்பட்ட குண்டுவெடிப்பில் ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட சம்பவத்தின்போது அவருக்குப் பின்னால் இருந்த தா.பாண்டியன், தூக்கி வீசப்பட்டு தீவிர சிகிச்சைக்குப் பிறகு உயிர் பிழைத்தார்.

1989 மற்றும் 1991-ம் ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில் வடசென்னை மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டு மக்களுக்கு சேவையாற்றினார்.

1962-ல் ‘ஜனசக்தி’யில் எழுத ஆரம்பித்த தா.பாண்டியன், தற்போது வரை ராஜீவ் காந்தியின் கடைசி மணித் துளிகள், சோக வரலாற்றின் வீர காவியம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளார்.

89 வயதான தா.பாண்டியன் வயது முதிர்வு காரணமாக ஏற்பட்ட உடல்நலக் குறைவால், சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்நிலையில், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு சார்பில், மாநிலத் தலைவர் இரா. முத்தரசன் விடுத்துள்ள அறிக்கையில், “தோழர் தா.பாண்டியன் காலமானார். தமிழக அரசியலில் அறுபது ஆண்டுகளைக் கடந்து ஒளிவீசிய சிவப்பு நட்சத்திரம் உதிர்ந்து விட்டது. இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக்குழு உறுப்பினர், மதிப்புமிக்க மூத்த தலைவர் தோழர் தா.பாண்டியன் அவர்களைக் காலம் பறித்துக் கொண்டது. 26.02.2021 சென்னை, ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அவர் காலமானார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

பத்து வயதிலேயே தேச விடுதலைப் போராட்டத்தின் ஈர்ப்பால், காவல் நிலையம் மீது கல்லெறிந்து தன் எதிர்ப்பைப் பதிவு செய்தவர். 1948ல் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்ட அடக்குமுறை காலத்தில் கைது செய்யப்பட்டவர். அதனால் காரைக்குடி அழகப்பா கல்லூரியில் பேராசிரியராகப் பணிபுரிந்த அவரது அண்ணன் தா.செல்லப்பா வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அண்ணனிடமே மார்க்ஸீயம் கற்றதோடு, பள்ளி, கல்லூரிகளில் பயின்று முதுகலைப் பட்டமும் பெற்றார்.

1953ல் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினராகச் சேர்க்கப்பட்டார். தான் படித்த அழகப்பா கல்லூரியிலேயே ஆங்கில விரிவுரையாளரானார். அங்கேயே அவருக்குத் திருமணம் நடந்தது. அவரது மனைவி திருமதி ஜாய்ஸ் பாண்டியனும் ஆசிரியர்தான். முதல் இரு பெண் குழந்தைகளும் காரைக்குடியில்தான் பிறந்தன. 1961ல், பேராசான் ஜீவாவின் முன்முயற்சியில் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் தோற்றுவிக்கப்பட்ட போது, அதன் முதலாவது பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். அந்தப் பணியை நிறைவேற்றுவதற்காக விரிவுரையாளர் வேலையிலிருந்து விலகி, சென்னை வந்தார். சட்டக் கல்லூரியில் மாணவரானார். பிறகு அவரது மனைவியும் குழந்தைகளோடு சென்னை வந்து, பள்ளி ஆசிரியை பணிதேடி அமர்ந்து, குடும்பத்தை நடத்தும் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.

1962ல் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சென்னை மாவட்டச் செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டார். 1964ல் கட்சி பிளவுபடுத்தப்பட்டது. இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியில் நிலைத்து நின்ற தா.பாண்டியன், தொடர்ந்து கட்சியின் மாநிலச் செயற்குழு, தேசியக்குழு, தேசிய நிர்வாகக்குழு ஆகியவற்றுக்கு படிப்படியாக தேர்வு செய்யப்பட்டார்.

திருவாரூரில் நடைபெற்ற இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாட்டுக்குப் பின்னர், கட்சியின் மாநிலச் செயலாளராக 2005ம் ஆண்டில் தேர்வு செய்யப்பட்டு, 2015 வரை அப்பொறுப்பில் இருந்தார். தொடர்ந்து தேசியக்கழு உறுப்பினராக இறுதி மூச்சுவரை பணியாற்றினார்.

தமிழகத்தின் மிகச் சிறந்த பேச்சாளர்களில் ஒருவர். எதிர்க்கருத்து கொண்டோரையும் பேச்சினால் இழுக்கும் சொல்வளமும், நாவன்மையும் கொண்டவர். தமிழ், ஆங்கில இலக்கியங்களில் ஆழ்ந்த புலமை பெற்றவர். இலக்கியம், பொருளாதாரம், தத்துவம், வரலாறு, அரசியல் ஆகிய துறைகளில் பரந்த வாசிப்புக் கொண்டவர். இடையறாது படிப்பதும், படித்ததை சுவைகுன்றாமல் எளிதில் புரியும் வகையில் எடுத்துரைப்பதும் அவருக்கு இயல்பாக கைவந்தது.

பேசுவது போன்றே, ஈர்க்கும் எழுத்துவன்மை கொண்டவர். முப்பதுக்கும் மேற்பட்ட நூல்களையும், ஜனசக்தியில் ஆயிரத்துக்கு மேற்பட்ட கட்டுரைகளையும் எழுதியவர். ஜனசக்தியில் ‘சவுக்கடி’, ‘கடைசிப் பக்கம்’ ஆகிய தலைப்புகளில் அவர் எழுதிய கட்டுரைகள் தீப்பறக்கும் தன்மை கொண்டவை. அதே நேரத்தில் அதனால் தாக்குதலுக்கு உள்ளபவர்கள் கூட தேடிப்படிக்கும் அளவு மிகுந்த ஆர்வத்தைத் தூண்டியவை. ஜனசக்தியின் ஆசிரியராக இறுதி மூச்சுவரை அவர் பணியாற்றியுள்ளார்.

கட்சியின் மாநிலச் செயலாளராகப் பணியாற்றிய போது, கட்சியின் மாநிலக்குழு அலுவலகமான ‘பாலன் இல்லத்’துக்கு சென்னை, தி.நகரில் எட்டு அடுக்குகள் கொண்ட கம்பீரமான கட்டிடத்தை பல பிரச்சனைகளுக்கு இடையே கட்டி எழுப்பியது அவரது மறக்க முடியாத வாழ்நாள் சாதனைகளில் ஒன்றாகும்.

தமிழகத்தில் பகுத்தறிவு, மூடநம்பிக்கைகள் ஒழிப்பு, அறிவியலை முன்னலைப்படுத்துவது, சமூக நீதி ஆகியவற்றுக்காக நேர்கோடாக ஓங்கி ஒலித்த குரல் அவருடையது. மதவெறி, வகுப்புவாதத்துக்கு எதிராக “எனக்கு உயிர் இருக்கும் வரை என் நாவினால் அடித்து விரட்டுவேன்” என அண்மையில் மதுரையில் நடந்த அரசியல் எழுச்சி மாநாட்டில் பேசினார்.

அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கூர்மையான எதிர்ப்பாளரான அவர், போருக்கு எதிரான, உலக மக்களிடையே ஒப்புறவுக்கான இயக்கங்களை நடத்தி தலைமை தாங்கியவர்.

இந்திய அரசியலை பாசிச சக்திகள் சூழ்ந்து, சாதி, மத பிளவுகளை விரிவுப்படுத்தி, மக்களைப் பிரித்து, இந்திய தற்சார்புப் பொருளாதாரத்தை சீரழித்து, தனியார் பெருமுதலாளிகளிடம் நாட்டின் எதிர்காலத்தை ஒப்படைத்து வரும் இன்றைய சூழலில், பழுத்த அனுபவமிக்க அரசியல் கூர்மை பெற்ற மூத்த தலைவரான தோழர் தா.பாண்டியனின் மறைவு முற்போக்கு, ஜனநாயக சக்திகளுக்கு பேரிழப்பாகும். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தனது மதிப்புமிக்க, இணையற்ற தலைவரை இழந்து விட்டது.

தோழர் தா.பாண்டியன் அவர்களது திருப்பெயர் என்றென்றும் நிலைக்கட்டும்! தோழர் தா.பாண்டியன் அவர்களுக்கு கண்ணீர் அஞ்சலி! செவ்வணக்கம்!” இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவரது சொந்த ஊரான மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே வெள்ளைமலைப்பட்டி டேவிட் பண்ணைக்கு கொண்டுவரப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.அவரது உடலுக்கு பொதுமக்கள் மௌன அஞ்சலி செலுத்திய பின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. தா.பாண்டியன் உடல் கிறிஸ்துவ முறைப்படி அடக்கம் செய்யப்பட்டது.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் “புடம் போட்ட தங்கம் போல் வாழ்ந்த பொதுவுடைமைப் போராளி தோழர் தா.பாண்டியன் அவர்கள் மறைந்தாரே!” என்று குறிப்பிட்டு இரங்கல் குறிப்பை வெளியிட்டுள்ளார்.

அதில், பொதுவுடைமைப் போராளியும் – இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னணித் தலைவர்களில் ஒருவருமான தா.பாண்டியன் அவர்கள் மறைவெய்தினார் என்ற வேதனை மிகுந்த பேரிடிச் செய்தி கேட்டு -பெருந்துயரத்திற்கு உள்ளானேன்.

மதுரையில் உள்ள வெள்ளை மலைப்பட்டி கிராமத்தில் பிறந்து – காரைக்குடி அழகப்பா கல்லூரியில் பட்டப் படிப்பை மேற்கொண்டு – சென்னை சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்றவர். கல்லூரி ஆசிரியராக, வழக்கறிஞராக, பத்திரிகையாளராக, எழுத்தாளராக, அரசியல் மற்றும் சமூகப் பணியில் முன்னணித் தலைவராக – நாடாளுமன்ற உறுப்பினராக – பன்முகத்தன்மை கொண்ட மிகச்சிறந்த பண்பாளர். அரசியல் நாகரிகத்தின் அரிச்சுவடியை இளைய தலைமுறைக்கு கற்றுக் கொடுக்கும் ஒரு ஆசிரியராகவே தனது வாழ்க்கையைப் பொது வாழ்விற்கு அர்ப்பணித்துக் கொண்டவர். அன்புடன் பழகுபவர். அழகுறப் பேசுபவர்.

பொதுவாழ்வின் நேர்மைக்கு இலக்கணமாகத் திகழும் பா.ஜீவானந்தம் அவர்கள் துவங்கிய தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் முதல் செயலாளரான இவர் – பொதுவுடைமை இயக்கத்தில் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டவர். அடக்கப்பட்ட – ஒடுக்கப்பட்ட – பிற்படுத்தப்பட்ட மக்களின் போர்க்குரலாக ஒலித்தவர். இந்திய ஜனநாயகத்தின் ஏற்றமிகு தீபங்களில் ஒன்றாக ஒளிவீசியவர். நினைத்த கருத்தை எவ்வித தயக்கமும் இன்றி எத்தகைய தலைவர்களிடமும் எடுத்து வைக்கும் அற்புதமான ஆற்றல் படைத்த அவர் மேடைகளிலோ – விவாதங்களிலோ பேசத் துவங்கி விட்டால் கேட்டுக் கொண்டே இருக்கலாம்.

அந்த அளவிற்கு அறிவுபூர்வமாக – ஆக்கபூர்வமான கருத்துக்களை இலக்கிய நயத்துடன் மக்கள் மன்றத்தில் எடுத்து வைப்பதில் வல்லவர். நாடாளுமன்ற விவாதங்களில் பொருள் பொதிந்த வாதங்களை முன்வைத்து அகில இந்தியத் தலைவர்களிடமும் நன் மதிப்பைப் பெற்றவர். அரசியல் சாதுர்யமிக்கவர் – எப்படிப்பட்ட பிரச்சினைகளுக்கும் தீர்வு காணும் தெளிவும் தைரியமும் படைத்த அவர் – தொழிலாளர்களின் தோழனாக – பொதுவுடைமைத் தொண்டர்களின் நண்பனாக – தமிழகத்தின் உறுதி மிக்க தலைவராகத் திகழ்ந்தவர். முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் தனிப்பட்ட பேரன்பைப் பெற்ற திரு. தா.பாண்டியன் அவர்கள் என் மீதும் நீங்காப் பாசம் வைத்திருந்தவர். “பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினருக்கு இருக்கும் தடைகள்” உள்ளிட்ட பல்வேறு புத்தகங்களை எழுதியவர்.

ஏழை – எளிய மக்கள் – விவசாயிகள் – பொதுவுடைமைத் தோழர்கள் – திராவிட முன்னேற்றக் கழகம் போன்று பொதுவுடைமைக் கொள்கையில் நம்பிக்கையுள்ள இயக்கங்களில் உள்ள அனைவருக்கும் அவரது மறைவு பேரிழப்பு. புடம் போட்ட தங்கம் போல் வாழ்ந்த பொதுவுடைமைப் போராளி நம்மை விட்டுப் பிரிந்து விட்டார். அய்யகோ! அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் – உறவினர்களுக்கும் – பொதுவுடைமை இயக்கத் தோழர்களுக்கும் எனது ஆழ்ந்த ஆறுதலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

சௌந்திரராஜன்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button