அரசியல்தமிழகம்

ராஜீவ் காந்தி குறித்து நான் பேசியது சரிதான்..! : சீமான்

“மக்கள் பிரச்னை எதற்கும் போராடாத காங்கிரஸ்காரர்கள், என்னை எதிர்த்தாவது போராடட்டும். அவர்கள் போராடுவது மகிழ்ச்சிதான்’’ என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்து தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம், விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரசாரத்தில், ‘’காந்தியை கோட்சே சுட்டது சரிதான் எனச் சிலர் பேசியபோது, ‘ராஜீவ் காந்தியைக் கொன்றோம் என்பதுவும் சரிதான்’ என முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் மரணம் குறித்து சீமான் பேசிய கருத்துகள் கடும் சர்ச்சையைக் கிளப்பியது.

காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் கடும் கொந்தளிப்புக்கு ஆளானார்கள். தமிழக மாநில காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி, “ராஜீவ் காந்தியின் படுகொலையை நியாயப்படுத்தும் சீமானை தேசத் துரோக வழக்கில் கைது செய்யவேண்டும். நாம் தமிழர் கட்சியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும்“ என்று அறிக்கை வெளியிட்டார். தேர்தல் நடத்தை விதியை சீமான் மீறியதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் செயல் தலைவரான எம்.பி ஜெயக்குமார் விக்கிரவாண்டி தேர்தல் அதிகாரியிடம் புகார் அளித்துள்ளார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் தங்கபாலு, விழுப்புரம் மாவட்ட எஸ்.பி ஜெயக்குமாரிடம் புகார் அளித்துள்ளார். தொடர்ந்து, சின்னமலையில் சீமானின் உருவபொம்மையை காங்கிரஸ் கட்சியினர் எரித்தனர்.

இதனையடுத்து, சீமானின் வீட்டுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சீமான் கைதுசெய்யப்படுவார் எனவும் தகவல்கள் வெளியாகின்றன. இல்லை… காங்கிரஸ் கட்சிக்காரர்கள் முற்றுகையிடுவார்கள் என்பதற்காகத்தான் போலீஸ் பாதுகாப்பு, கைது எல்லாம் இல்லை என்கிறது நாம் தமிழர் கட்சித் தரப்பு.
இந்த நிலையில் சீமானிடம் பேசினோம்…

நீங்கள் கைதுசெய்யப்பட இருப்பதாகச் செய்திகள் வெளியாகிறதே?
அதெல்லாம் ஒன்றும் இல்லை. நான் நாங்குநேரி தேர்தல் பிரசாரத்துக்குச் சென்றுகொண்டிருக்கிறேன். முற்றுகையிட இருப்பதாக வரும் செய்திகள் குறித்தும் எனக்குத் தெரியவில்லை. ஒருவேளை முற்றுகையிடுவதாக இருந்தால் எனக்கு மகிழ்ச்சிதான். எந்த மக்கள் பிரச்னைக்கும் போராடாத காங்கிரஸ்காரர்கள், என்னை எதிர்த்தாவது போராடட்டும்.

ராஜீவ்காந்தி பற்றி …
நான் பேசியது சரிதான். இதை நான் இப்போது பேசவில்லை. 25 வருடங்களாகப் பேசிவருகிறேன்.
பொது அமைதிக்குப் பங்கம் விளைவிக்கும் வகையில் பேசியதாக, என் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்துள்ளார்கள்.
இது மாதிரி பல வழக்குகள் என்மீது போடப்பட்டுள்ளன. நாங்கள் அதைச் சட்டப்படி எதிர்கொள்வோம். பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையில் நான் எதுவும் பேசவில்லை. என்னால் எந்தக் கலவரமும் வரவில்லை.

தேர்தல் பிரசாரத்தில் ராஜீவ் காந்தியின் கொலை குறித்துப் பேச வேண்டிய தேவை ஏற்பட்டதால் பேசினேன். தேர்தல் நேரம் என்பதால் பேசாமல் இருக்க முடியாது. தமிழர்களுக்கு இழைக்கப்படும் அநீதியை மக்களிடம் எடுத்துச் சொல்லியே ஆகவேண்டும். அது என் கடமை.

28 வருடங்களாக எங்கள் தலைவரைக் கொன்றுவிட்டார்கள் என காங்கிரஸும், எங்கள் பிரதமரைக் கொன்றுவிட்டார்கள் என பா.ஜ.க-வினரும் எழுவர் விடுதலைக்குத் தொடர்ந்து இடையூறாக இருப்பதால்தான் இப்படிப் பேச வேண்டிய தேவையே உருவாகிறது. ‘காந்தியை கோட்சே சுட்டது சரிதான். ஆனால், கொஞ்சம் தாமதமாகச் சுட்டுவிட்டார்’ எனத் தொடர்ந்து பா.ஜ.க-வினர் பேசியபோதும், காந்தியின் உருவப்படத்தை பெண் சாமியார் ஒருவர் நிற்கவைத்து சுடும்போதும், காந்தி எப்படி தற்கொலை செய்துகொண்டார் என வினாத்தாள் தயார் செய்தபோதும் அமைதியாக இருந்த காங்கிரஸ்காரர்கள், நான் பேசும்போது மட்டும் கொந்தளிப்பது ஏன்? விடுதலைப்புலிகளைப் பற்றி பேசும் காங்கிரஸ்காரர்கள், அமைதிப்படை செய்த அட்டூழியங்களைப் பற்றிப் பேசாதது ஏன்?

விடுதலைப்புலிகளுக்கு இந்தியா தடையாக இருப்பதால்தான் சர்வதேச தளத்தில் இன்னும் ஈழப்படுகொலைக்கு நியாயம் கிடைக்கவில்லை. எனக்கு இன உணர்ச்சி இருக்கிறது. என் கண் முன்னால் என் இனம் செத்திருக்கிறது. அந்த வன்மம் எனக்கு எப்போதும் இருக்கும்.
என்னை “தேசத் துரோக வழக்கில் கைதுசெய்ய வேண்டும்” என காங்கிரஸ் கட்சியினர் புகார் செய்கிறார்கள்.

எது தேசத் துரோகம்? காவிரியில் நதிநீர் வாங்கித் தர முடியாத கட்சிக்கு தேச ஒற்றுமை குறித்துப் பேச என்ன தகுதி இருக்கிறது? பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் கர்நாடகாவிலிருந்து அடித்து விரட்டப்பட்டபோது, தேச ஒற்றுமை பேசுபவர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள்? சில நாள்களுக்கு முன் கர்நாடகாவில், தமிழ்ப் பாடல் ஒலித்த மண்டபம் ஒன்றுக்குள் நுழைந்து கன்னடர்கள் அடித்து நொறுக்கினார்கள்… தேச ஒற்றுமையைப் பேசும் காங்கிரஸ்காரர்கள் அப்போது என்ன செய்து கொண்டிருந்தார்கள்? தேசத் துரோக வழக்கு ஒன்றும் எனக்குப் புதிதல்ல.

இடைத்தேர்தல் என்றாலே பண விளையாட்டுதான். யார் அதிகமாகப் பணத்தைக் கொடுக்கிறார்களோ, அவர்களே அதிக வாக்குகளை அறுவடை செய்கிறார்கள். வழக்கம்போல தேர்தல் ஆணையமும் தூங்குகிறது.

மாற்று அரசியலை, புரட்சிகர அரசியலை முன்வைக்கும் நாம் தமிழர் கட்சி அதைச் செய்யமுடியாது. நல்ல கருத்துகளை விதைக்கிறோம். மாற்று அரசியலை நோக்கி, ஒரு தலைமுறையை உருவாக்குவதற்கான வேலைகளைச் செய்து வருகிறோம். தொடர்ச்சியாகக் களத்தில் நிற்கிறோம். ஒவ்வொரு தேர்தலிலும் அதிகமாக வாக்குகள் வாங்கிக்கொண்டுதான் வருகிறோம். அந்த உற்சாகத்தில்தான் தொடர்ந்து செயல்பட்டு வருகிறோம். கண்டிப்பாக ஒருநாள் மாறும்… நாங்கள் நிச்சயம் வெல்வோம்” என்றார்.

  • நமது நிருபர்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button