அரசியல்தமிழகம்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 73-வது பிறந்தநாள்…

தமிழகத்தின் முதலமைச்சர், அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளர், முன்னணி திரைப்பட நடிகை என ஒவ்வொன்றிலும் முத்திரை பதித்தவர்…! லட்சக்கணக்கான அ.தி.மு.க. தொண்டர்கள் அம்மா என்று அழைத்த சொல்லுக்கு சொந்தக்காரர்.. அவர்தான் ஜெயலலிதா…

இளம் பருவத்திலேயே அறிவாற்றல், நினைவாற்றலுடன் விளங்கிய அவர், பள்ளியிறுதித் தேர்வில் மாநில அளவில் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் பெற்றார். பரதநாட்டியம், கர்நாடக இசை ஆகியவற்றை முறைப்படி பயின்ற ஜெயலலிதா, குடும்ப சூழல் காரணமாக படிப்பை பாதியிலேயே நிறுத்த நேரிட்டது. வெண்ணிற ஆடை படத்தில் இருந்து தொடர்ச்சியாக ஏராளமான திரைப்படங்களில் நடித்து வந்தார்.

ஆயிரத்தில் ஒருவன், கன்னித்தாய், தனிப்பிறவி, முகராசி, காவல்காரன் என எம்.ஜி.ஆருடன் அவர் இணைந்து 28 படங்களில் பெரும்பாலானவை வெற்றிப் படங்களாக அமைந்தன.

சிவாஜி கணேசன், எஸ்.எஸ்.ஆர்., ஜெய்சங்கர், முத்துராமன் உள்ளிட்ட நடிகர்களுடனும், என்.டி.ஆர்., நாகேஸ்வரராவ், தர்மேந்திரா போன்ற முன்னணி நடிகர்கள் பலருடன் பிற மொழிகளிலும் நடித்துள்ளார் ஜெயலலிதா.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி மொழிப் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம்வந்த அவர், பரதநாட்டியத்தை முறையாகக் கற்றறிந்தவர். 13 ஆண்டுகளில் 127 படங்களில் நடித்துள்ளார் ஜெயலலிதா.

1980ல் எம்.ஜி.ஆர். முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்த ஜெயலலிதா, சத்துணவுத் திட்ட உயர்மட்டக் குழு உறுப்பினர், கொள்கை பரப்புச் செயலாளர், மாநிலங்களவை உறுப்பினர் ஆகிய பொறுப்புகளை ஏற்று செயலாற்றினார்.

எம்.ஜி.ஆர். மறைவுக்குப்பின் இரண்டாகப் பிளவுபட்டுக் கிடந்த அ.தி.மு.க.வை, தமது முயற்சியால் இணைத்த ஜெயலலிதா, 1991, 2001, 2011, 2016 ஆகிய தேர்தலில்களில் வெற்றிபெறச் செய்து முதலமைச்சராகப் பதவி வகித்தார்.

ஜெயலலிதா ஆட்சியின்போது அமல்படுத்தப்பட்ட தொட்டில் குழந்தை திட்டம், மழைநீர் சேகரிப்பு, ரேஷனில் இலவச அரிசி, அம்மா உணவகம், மகளிர் காவல் நிலையம், மாணவர்களுக்கு லேப்டாப் போன்ற திட்டங்கள் இன்றும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. பல மாநிலங்கள் இந்தத் திட்டங்களை தேர்தல் வாக்குறுதிகளாக அறிவித்து நடைமுறைப்படுத்தியுள்ளன.

தேசியக் கட்சிகளின் தலைவர்களும், பிற மாநிலக் கட்சிகளின் தலைவர்களும் ஜெயலலிதாவுடன் நட்பு பாராட்டி வந்தனர். நாடாளுமன்றத் தேர்தல்களில் அ.தி.மு.க.வை வெற்றிபெறச் செய்து, தமிழகத்தின் குரலை ஒலிக்கச் செய்தார்.

ஆறு முறை தமிழக முதலமைச்சர், 29 ஆண்டுகள் கட்சியின் பொதுச்செயலாளர், 17 ஆண்டுகள் திரையுலகில் முன்னணி நடிகை… இப்படி எத்தனையோ சிறப்புகளைப் பெற்றவர் அவர். துணிச்சலான பெண்மணி என்று அகில இந்திய அளவில் பேசப்படும் தலைவராக வளர்ந்து, அரசியலில் பெண்களால் சாதிக்க முடியும் என்பதை தமது வாழ்நாளில் நிரூபித்துக் காட்டியவர் ஜெயலலிதா.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 73ஆவது பிறந்த நாள் விழா சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமையகத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் அங்குள்ள எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன், அமைச்சர்கள் ஆகியோரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

ஜெயலலிதாவின் 73ஆவது பிறந்த நாளைக் குறிப்பிடும் வகையில் 73 கிலோ எடைகொண்ட கேக்கை முதலமைச்சரும் துணை முதலமைச்சரும் வெட்டி ஒருவருக்கொருவர் ஊட்டிவிட்டனர்.

நமது புரட்சித் தலைவி அம்மா என்னும் பெயரிலான சிறப்பு மலரை வெளியிட்டதுடன், அன்னதானம், நலத்திட்ட உதவிகள் வழங்கல், இலவச மருத்துவ முகாம் ஆகியவற்றையும் தொடங்கி வைத்தனர்.

இந்த ஆண்டு முதல் ஜெயலலிதா பிறந்த நாள் அரசு விழாவாகக் கொண்டாடப்படுகிறது. இதையொட்டிச் சென்னை காமராசர் சாலையில் தமிழ்நாடு உயர்கல்வி மன்ற வளாகத்தில் உள்ள ஜெயலலிதாவின் உருவச் சிலைக்கு முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

ஜெயலலிதாவின் பிறந்தநாள் மாநிலப் பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாளாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு, குழந்தைத் திருமணங்களைத் தடுத்து நிறுத்தல் ஆகியவற்றுக்காகத் திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி நர்மதாவுக்குப் பெண் குழந்தை முன்னேற்றத்திற்கான விருதை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார். அவருக்குப் பாராட்டுச் சான்றிதழுடன் ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலை வழங்கப்பட்டது. பெண் குழந்தைகள் பாதுகாப்பில் சிறந்து விளங்கிய 3 மாவட்டங்களுக்கும் விருதுகளை முதலமைச்சர் வழங்கினார்.

ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி 73 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தைத் தொடங்கி வைத்த முதலமைச்சர் பழனிசாமி அதன் அடையாளமாக மரக்கன்றை நட்டு அதற்குத் தண்ணீர் ஊற்றினார்.

சென்னைக் கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

தான் மறைந்த பின்னரும் நூறாண்டுக்காலம் அதிமுக ஆட்சி இருக்கும் என ஜெயலலிதா கூறியதை மெய்ப்பிக்கும் வகையில் மீண்டும் ஆட்சியமைக்கக் கழகத் தொண்டர்கள் பாடுபட வேண்டும் என சசிகலா தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதா பிறந்த நாளையொட்டிச் சென்னை தியாகராய நகரில் உள்ள இல்லத்தில் அவரது உருவப்படத்துக்கு சசிகலா மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா, வரும் சட்டமன்றத் தேர்தலில் ஜெயலலிதாவின் உண்மைத் தொண்டர்கள் அனைவரும் ஒன்றுபட்டு மீண்டும் ஆட்சி அமைக்கப் பாடுபட வேண்டும் எனத் தெரிவித்தார். பொது எதிரியான திமுகவைத் தோற்கடிக்க உறுதியேற்க வேண்டும் என்றும் சசிகலா தெரிவித்தார்.

ரபீக்அகமது

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button