ஆளுநர் மாற்றம்..!.? பாஜகவின் மாநில தலைவராகும் வானதி சீனிவாசன்..!
சமீப காலமாக தமிழக அரசியல் களத்தில் ஆளும் திமுக அரசுக்கும், தமிழக ஆளுநர் ஆர் என். ரவிக்கும் நிர்வாக ரீதியிலும், சித்தாந்த ரீதியிலும் கருத்து வேறுபாடுகள் அதிகரித்துக் கொண்டே இருந்து வரும் நிலையில், தமிழக ஆளுநரை திரும்ப பெறக்கோரி ஜனாதிபதியிடம் திமுக கூட்டணி கட்சியினர் மனு அளிக்க இருக்கிறார்கள்.
பாரதீய ஜனதா கட்சி ஆளும் மாநிலங்கள் தவிர எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆளுநர்களை வைத்து, உதாரணமாக மேற்கு வங்காளம், பஞ்சாப், கேரளா, தெலுங்கானா போன்ற மாநிலங்களில் நிர்வாக ரீதியில் மாநில அரசுக்கு நெருக்கடி கொடுத்து வருகிறார்கள். ஆனால் தமிழகத்தின் ஆளுநர் ஆர் என் ரவி நிர்வாக ரீதியில் அரசுக்கு நெருக்கடி கொடுப்பதோடு, சித்தாந்த ரீதியிலும் அரசியல் அமைப்பு சாசனத்திற்கு எதிராக பேசி வருகிறார். இதனால் ஆளுநருக்கு எதிராக தமிழக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் கையொப்பமிட்ட மனுவை ஜனாதிபதியிடம் அளிக்க இருக்கிறார்கள்.
இந்நிலையில் தமிழக ஆளுநர் விவகாரம் தேசிய அளவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என பாரதீய ஜனதா கட்சியின் தேசிய தலைமையும், இந்திய உள்துறை அமைச்சகமும் கருதுவதாக தெரிய வருகிறது. ஆகையால் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியை வேறு மாநிலத்திற்கு மாற்ற உள்துறை அமைச்சர் அமித்ஷா தயாராகி வருவதாக உள்துறை அமைச்சக வட்டாரத்தில் பேசிக்கொள்கிறார்கள்.
இதேபோல் தமிழக பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலையின் செயல்பாடுகளும் திருப்தி அளிக்கவில்லை என ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் பாரதீய ஜனதா கட்சியின் தலைமையிடம் கூறியிருப்பதால் அண்ணாமலைக்கு பதிலாக தமிழக பாரதீய ஜனதா கட்சியின் மாநில துணைத் தலைவராக இருக்கும் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ வை மாநில தலைவராக நியமிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.