காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவிலில் வடகலை தென்கலை மோதல் : கண்டித்த உயர் நீதிமன்றம்
காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவிலில் தென்கலை மற்றும் வடகலை பிரிவினரிடையே மோதல் ஏற்பட்டால் காவல்துறையிடம் புகார் அளித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கோவில் செயல் அலுவலருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காஞ்சிபுரம், வரதராஜப் பெருமாள் கோவிலில் நாலாயிர திவ்யப்பிரபந்தம் பாடுவதில் வடகலை மற்றும் தென்கலை பிரிவினருக்கு இடையில் மோதல் இருந்து வந்தது.
இந்நிலையில், திவ்ய பிரபந்தம் பாடும் முன் ஸ்ரீராமனுஜதயாபத்ரம் என்ற மந்திரத்தை உச்சரிக்க வடகலை பிரிவினருக்கு தடை கோரிய வழக்கில், தடை விதிக்க மறுத்த உயர் நீதிமன்றம், வடகலைப் பிரிவினரும் மந்திரம் உச்சரிக்கவும், திவ்யப்பிரபந்தம் பாடவும் அனுமதியளித்து, கடந்த 1915 மற்றும் 1969ம் ஆண்டுகளில் தீர்ப்பளிக்கப்பட்டது.
அதேசமயம் தென்கலைப் பிரிவினர் முதலில் பாட அனுமதியளிக்கப்பட்டது. ஆனால் இந்த தீர்ப்புகளை மீறும் வகையில், வடகலை பிரிவினரை முதலில் பாட அழைத்த கோவில் நிர்வாக அறங்காவலர் தியாகராஜனின் செயல் நீதிமன்ற அவமதிப்பு என்பதால் அவரை நீதிமன்ற அவமதிப்பு சட்டத்தின் கீழ் தண்டிக்க வேண்டும் என ரங்கநாதன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தாக்கல் செய்தார்.
இந்த வழக்கை நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் விசாரித்தார். விசாரணையின்போது, கோவில் நிர்வாக அறங்காவலர் தரப்பில் ஆஜரான அரசு பிளீடர், கோவிலில் யார் முதலில் திவ்யப்பிரபந்தம் பாடுவது என்பதில் வடகலை மற்றும் தென்கலை பிரிவினர் தொடர்ந்து மோதலில் ஈடுபட்டு வருவதால் பூஜைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இருதரப்பினருக்கும் இடையிலான பிரச்னைக்கு தீர்வு காண மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்து விட்டதாகவும் குறிப்பிட்டார்.
வழக்கை விசாரித்த நீதிபதி, கோவில்களில் மந்திரங்கள் உச்சரிப்பது என்பது அடிப்படை உரிமை எனவும், அதை நீதிமன்றம் தடுக்க முடியாது எனவும் குறிப்பிட்டார்.இரு பிரிவினருக்கு இடையிலான பிரச்னை காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பிரபந்தம் பாடப்படவில்லை என்பதைச் சுட்டிக்காட்டிய நீதிபதி, கடந்த 1915 மற்றும் 1969ம் ஆண்டுகளில் உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும் என உத்தரவிட்டார்.
கோவிலில் பிரபந்தம் பாடும் முன் தென்கலை பிரிவினர் ஸ்ரீசைல தயாபத்ரம் மந்திரத்தை முதலிலும், பின் வடகலை பிரிவினர் ராமானுஜ தயாபத்ரம் மந்திரத்தை உச்சரிக்கவும் அனுமதியளித்த நீதிபதி, 50 ஆண்டுகளுக்கு முன் பிறப்பித்த தீர்ப்பை அமல்படுத்தவில்லை என தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்றம் அவமதிப்பு வழக்கை முடித்து வைத்தார்.
பொது வழிபாட்டுத் தலமான கோவிலில், தனிநபர் பகைக்கோ, எதேச்சதிகாரத்துக்கோ இடமில்லை என தெளிவுபடுத்திய நீதிபதி, திருவிழா நேரங்களில் இருதரப்பினரும் சட்டம் ஒழுங்கு பிரச்னையில் ஈடுபட்டால் நிர்வாக அறங்காவலர், காவல் நிலையத்தில் புகார் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.
- விஜயகுமார்