அல் அமீன் மேல்நிலைப்பள்ளியில் புத்தக வாசிப்பு இயக்கம் தொடங்கப்பட்டது. மாணவர் பருவத்திலேயே இலக்கியம், அறிவியல், வரலாறு சார்ந்த நூல்களை எளிதில் வாசித்தல், மாணவர்களைக் கொண்டு மாணவர்களுக்கான வாசிப்பு பயிற்சியை மேம்படுத்துதல், மனப்பாடத்திறன், விழிப்புணர்வு ஆற்றல், தன்னம்பிக்கை வளர்த்தல் முதலான செயல்பாடுகளை மாணவர்களிடத்தில் மேம்படுத்துதல் முதலானவை இவ்வியக்கத்தின் நோக்கமாகும்.
ஒவ்வொரு மாதமும் புத்தக ஆர்வலர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வரவழைத்து, புத்தக வாசிப்பின் முக்கியத்துவத்தைப் பற்றி மாணவர்களிடம் எடுத்துரைக்க உள்ளோம். இவ்வியக்கத்தின் முதல் நோக்கமாக, பள்ளியில் படிக்கின்ற 100 மாணவர்கள் கோ.புதூர் கிளை நூலகத்தில் நூலக உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும் தமிழக முதல்வர் ஸ்டாலினிடமிருந்து சுமார் 200 புத்தகங்கள் பள்ளிக்காக பெறப்பட்டுள்ளது.
இவ்விழாவிற்கு பள்ளித் தலைமையாசிரியர் ஷேக்நபி அவர்கள் தலைமையேற்று, புத்தக வாசிப்பின் அவசியத்தையும், தன்னம்பிக்கையை வளர்ப்பது நூலறிவு மட்டுமே, அந்நூலறிவை மாணவர்கள் புத்தக வாசிப்பின் மூலமே எளிதில் பெறமுடியும் என்று எடுத்துரைத்தார்.
உதவித்தலைமையாசிரியர்கள் ஜாகீர் உசேன், ரகமத்துல்லா ஆகியோர் புத்தக விழிப்புணர்வு சம்பந்தமாக பேசினர். தமிழாசிரியர்கள் நூருல்லாஹ், தௌபிக் மற்றும் உடற்கல்வியாசிரியர்கள் அமித், காதர், மன்சூர் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.