தமிழகம்

மதுரை எய்ம்ஸ் பணிகள் தொடங்காததற்கு காரணம் என்ன?

கடந்த 2019 ஆம் ஆண்டு ஜனவரி 27 ஆம் தேதி, மதுரை மாவட்டம் தோப்பூரில் 1,264 கோடி ரூபாய் மதிப்பில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்காக, பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். அடிக்கல் நாட்டி 2 ஆண்டுகள் ஆகியும் மத்திய அரசு இதுவரை 12 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கியுள்ளது. அதன் மூலம் சுற்றுச்சுவர் மட்டுமே கட்டப்பட்டுள்ளது. அதை தவிர்த்து வேறு எந்த பணிகளும் இதுவரை நடைபெறவில்லை. கடன் தருவதில் ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை தாமதம் செய்வதாக மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

இந்தநிலையில், மதுரை தோப்பூரில் சில கிலோ மீட்டர் தூரத்திற்கு நீண்டுகிடக்கும் எய்ம்ஸ் சுற்றுச்சுவர் முடியும் இடத்திலிருந்து பல நூறு ஏக்கர் நிலங்கள் பிளாட்டுகளாக மாற்றப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அரசியல் ரீதியாக தமிழ்நாட்டால் எந்த பலனும் இல்லை என்று நினைத்து மத்திய பாஜக அரசு தமிழகத்தை புறக்கணித்து விட்டதாக மதுரை மக்கள் குறிப்பிடுகின்றனர். மத்திய அரசு தமிழகத்தை ‘மாற்றான் தாய் பிள்ளையை’ போல பாரபட்சத்துடனேயே நடத்தி வருவதாகவும், மருத்துவமனை பணிகளை துவக்குவது போல துவக்கி விட்டு இப்போது கிடப்பில் போட்டு விட்டதாகவும் குற்றம்சாட்டுகின்றனர்.

2019 நாடாளுமன்றத் தேர்தலை மையப்படுத்தி அவசர அவசரமாக எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டியதாகவும், எய்ம்ஸ் மருத்துவமனைக்கான இடத்தை மத்திய சுகாதாரத் துறைக்கு பெயர் மாற்றிக் கொடுப்பதற்காக, தமிழக அரசு இரண்டு வருடங்கள் ஆக்கியுள்ளதாகவும் குறிப்பிடுகிறார் மதுரை நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினர் சு. வெங்கடேசன்.

“மதுரையில் அமைக்கப்படவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மட்டுமே ஜப்பான் நிறுவனத்திடம் மத்திய அரசு கடன் வாங்குகிறது” என குறிப்பிட்ட வெங்கடேசன், மற்ற மாநில மருத்துவமனைகளுக்கு வாங்கவில்லை என்பதை சுட்டிக்காட்டினார். எட்டு வழி சாலை அமைப்பதில் தமிழக அரசிற்கு இருந்த ஆர்வம், எய்ம்ஸ் விவகாரத்தில் ஏன் இல்லை என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

வானுயர்ந்து நிற்கும் கட்டிடங்கள்… நூற்றுக்கணக்கான மருத்துவர்கள்… விரைந்து கொண்டிருக்கும் வாகனங்கள்… ஏழை, எளிய மக்களுக்கு தரமான மருத்துவம்… என பார்க்கவே பரபரப்பாக இருக்க வேண்டிய ஒரு இடம், செம்மண் பரந்த நிலத்தில் கருவேல மரங்கள் மண்டிய காடாக, ஆள் அரவமின்றி காய்வதை பார்க்கும் போது கனவு நனவாகுமா? என்ற கேள்வி எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.

நமது நிருபர்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button