அரசுப் பணத்தை வீணடித்து… கருவேலமரம், ஆமணக்கு செடிகளைப் பராமரிக்கும் கரைப்புதூர் ஊராட்சி !.?
திருப்பூர் மாவட்டம் பல்லடம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கரைப்புதூர் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் மீனாம்பாறை செல்லும் பாதையில் மயானத்திற்கு எதிர்புறமாக மரம் நட்டு பராமரித்து வளர்க்க திட்டமிடப்பட்டது. முறையாக நிர்வகிக்க அனுமதி எண்: 48774/ 25.02.2021 ஆக பெறப்பட்டது. இதன்படி 500 எண்ணிக்கையில் மரம் நடுவது எனவும், 600 மனித சக்தி நாட்களில் 9 பெண்கள் பராமரிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
இதன் துவக்க விழா கடந்த 21.10.2021 அன்று நடைபெற்றது. முன்னதாக 50 மரங்கள் நடப்பட்டது. தற்போது திட்ட அனுமதி துவங்கி ஏறத்தாழ சுமார் ஒன்னரை ஆண்டுகள் கடந்த நிலையில் தற்போது மரக்கன்றுகள் நடப்பட்டதாக அறிவிக்கப்பட்டிருந்த பகுதியில் சீமை கருவேல மரங்கள் மற்றும் ( ஆமணக்கு ) கொட்ட முத்துச்செடிகள் வளர்ந்து காடு போல் காட்சி அளிக்கிறது. சுமார் 1 லட்சத்து 63 ஆயிரம் மதிப்பீட்டில் கொட்டமுத்துச்செடி மற்றும் சீமை கருவேலமரம் வளரவிட்டு கரைப்புதூர் ஊராட்சி நிர்வாகம் அழகு பார்க்கிறதா என பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் சந்தேகிக்கின்றனர்.
மழை பெறுவதற்கு மரம் வளர்ப்பதை விடுத்து நிலத்தடி நீரை உரிஞ்சும் சீமைக்கருவேல மரத்தை பராமரிப்பின்றி அதிசய பூங்காவாக மாறிய இடத்தை சுத்தம் செய்து மரங்களை நட்டு பராமரிக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.