தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் பன்னீர் செல்வம் இருவருக்கும் இடையிலான உறவு சரியில்லை என்பது வெளிப்படையாக கடந்த சில நாட்களாக தெரிந்தாலும், கட்சி தலைமைக்கும், ஆட்சிக்கும் தற்போது எந்தப் பிரச்சனையும் எழ வாய்ப்பில்லை என்பதுதான் நிதர்சனம்.
அதிமுக தலைமை இன்று இரட்டை தலைமையின் கீழ் இயங்கி வருவதாக கட்சியினரே குற்றம்சாட்டத் துவங்கியுள்ளனர். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் பன்னீர் செல்வம் இடையே சுமுக உறவு இல்லை என்பது வெளிப்படையாக தெரிந்தாலும், தற்போது கட்சியின் மூத்த தலைவர்களே அதை வெளியே வந்து கூறும் அளவிற்கு எல்லை மீறி சென்றுவிட்டது. இதனால் கட்சி இன்றே உடைந்து விடும், ஆட்சி கவிழ்ந்து விடும் என்று கூறுவதற்கு இல்லை.
எதுவரை அதிமுகவை சுமப்பதற்கு பாஜக தலைமை தயாராக இருக்கிறதோ அதுவரை அதிமுக தலைமைக்கோ, கட்சிக்கோ பாதிப்பில்லை. ஆனால், தனது இடத்தை வலிமையாக தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்று எடப்பாடி பழனிச்சாமி விரும்புகிறார் என்பது தெளிவாகிறது. நடந்து முடிந்த சட்டமன்ற இடைத்தேர்தலும் சரி, மக்களவைத் தேர்தலும் சரி அதிமுகவுக்கு சொல்லும் வகையில் வெற்றி வாய்ப்பை வழங்கவில்லை. பாஜகதான் தங்களது தோல்விக்குக் காரணம் என்று அதிமுகவும், இல்லை, அதிமுக மீதான அதிருப்திதான் தோல்விக்கு காரணம் என்று சில தலைவர்களும் கூறி வருகின்றனர். ஆனால், இன்று வரை முதல்வரோ, துணை முதல்வரோ எந்த விஷயங்களையும் இதுவரை பகிர்ந்து கொள்ளவில்லை.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்குப் பின்னரும் கட்சியை கட்டுக் கோப்பாக எடப்பாடி வைத்திருக்கிறார், ஜெயலலிதா அமர்ந்த இடத்தில் அமர்ந்திருக்கிறார், அவர் அமர்ந்திருந்த இருக்கையில் அமர்ந்து இருக்கிறார். ஆனால், இதையெல்லாம் இடையில் முதல்வர் பதவி விகித்த பன்னீர் செல்வம் தவிர்த்து வந்தார். மக்களால் தேர்வு செய்யப்படாத ஒரு முதல்வராக பொறுப்பேற்ற பின்னர் மாநிலத்தில் எழுந்த பல்வேறு பிரச்சனைகளையும் கடந்து, தேர்தல் தோல்விக்குப் பின்னரும் எடப்பாடியால் அதே இடத்தில் நீடிக்க முடிகிறது. தேர்தலுக்குப் பின்னரும், தோல்வி குறித்து கட்சியினரிடம் முதல்வர் கேள்வி எழுப்பியபோது, நீங்கள்தானே வேட்பாளர்களை தேர்வு செய்தீர்கள் என்று நிர்வாகிகள் கூறி ஒதுங்கிக் கொண்டதாக தகவல் வெளியானது. தற்போதைக்கு கழுத்தை நெறுக்கும் நெருக்கடிகள் இருந்தாலும், பாஜக முட்டு கொடுப்பதால் பெரிய சிக்கல் இல்லாமல் நிர்வாகத்தை கொண்டு செல்கிறார்.
இதற்குக் காரணம் பாஜகவை அவர் அனுசரித்து செல்வதுதான். பாஜகவுக்கும் அதிமுக ஆட்சியில் நீடிக்க வேண்டும் என்பதுதான் விருப்பம். இவர்களை வைத்துக் கொண்டே மாநிலத்தில் பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி, தமிழக மக்களின் நன்மதிப்பை பெற முடியுமா என்று பாஜக திட்டமிட்டு வருகிறது. காலம் கனிகிறபோது, அதிமுகவை ஓரம் கட்ட பாஜகவும் தயங்காது. அதை அதிமுகவும் அறியாமல் இல்லை. எடப்பாடியின் ஆதரவாளர்களாக அடிக்கடி அமைச்சர்கள் வேலுமணி மற்றும் தங்கமணி டெல்லி சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் அமைச்சர் பியூஸ் கோயலை சந்தித்து பிரச்சனைகளை அவ்வப்போது தீர்த்து வருகின்றனர்..
சமீபத்தில் டெல்லி சென்றிருந்த இந்த இரண்டு அமைச்சர்களும் நிதி கேட்பதுடன், தங்களது கட்சிப் பிரச்சனைகளையும் பேசி வந்துள்ளனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது. எடப்பாடி மற்றும் பன்னீரின் ஆட்கள் தனித்தனியே மத்திய அமைச்சர்களை சந்தித்து பேசி வருகின்றனர். ஆதலால் இவர்களை பாஜக மேலிடம் சமாதானப்படுத்தி வருகிறது. இது 2021 வரை தொடரும் என்பதே இப்போதைய நிதர்சனம்.
எடப்பாடியும், பன்னீரும் தங்களது ஆதரவாளர்களை தனித்தனியே சந்தித்து பேசி வருகின்றனர். திடீர் என்று கடந்த வாரம் எழுந்த பிரச்சனை தற்போது மறைந்துள்ளது. பாஜகவின் கைக்குள் இருவரும் இருப்பதால் தற்போதைக்கு எந்தப் பிரச்சனையும் எழ வாய்ப்பில்லை. எடப்பாடி தன்னை அதிமுகவின் தனிப்பெரும் தலைவராக காட்டிக் கொள்ள விரும்புகிறார். ஆனால், அதிமுக தற்போது ஜாதி அரசியலுக்குள் சென்றுவிட்டது. தங்களுக்கு வலிமையான கொங்கு மண்டலத்தில் அதிமுக தோல்வி அடைந்தது எடப்பாடிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. மேலும், எடப்பாடியின் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அதிகளவில் இருப்பதால், அவரை ஆதரிப்பார்கள் என்ற கருத்து நிலவியது. அது நடந்து முடிந்த தேர்தலில் வெட்ட வெளிச்சமாகிவிட்டது.
மறுபக்கம் பன்னீர் செல்வம் தலைமையில் அவரது சமூகத்தைச் சேர்ந்தவர்கள் திரண்டுள்ளனர். தேனி தொகுதியில் தனது மகனை வெற்றி அடையச் செய்ததன் மூலம் பன்னீர் தனது செல்வாக்கை பாஜக தலைமையிடம் தக்க வைத்துக் கொண்டார். இந்த நிலையில், கட்சியில் எந்த மாற்றம் நிகழ்ந்தாலும், பொதுச்செயலாளர் யார் என்ற கேள்வி வரும்போது, வாய்ப்பு வரும்போது அதை விட்டுக் கொடுக்க எடப்பாடி தயாராக இல்லை. அதை அமைதியாக தட்டிவிட பன்னீரும் தயாராகவே உள்ளார்.
இந்நிலையில் சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று வரும் சசிகலாவை, நன்னடத்தை அடிப்படையில் விடுவிக்க பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறைத்துறை நிர்வாகம் மாநில அரசுக்கு பரிந்துரைத்துள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது.
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகிய நான்கு பேருக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் 4 வருடம் சிறை தண்டனை விதித்தது. இந்த வழக்கில் கடந்த 2014ம் ஆண்டு தீர்ப்பளித்தது. இதில் ஜெயலலிதாவுக்கு 100 கோடி அபராதமும் மற்றவர்களுக்கு தலா 10 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது.
இதை எதிர்த்து கர்நாடக உயர்நீதிமன்றத்தில் 4 பேரும் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் நான்கு பேரையும் விடுவித்து தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து உச்சநீதிமனறத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. விசாரணை நடைபெற்றுக் கொண்டிருந்த போதே முதல்வராக இருந்த ஜெயலலிதா 2016ம் ஆண்டு டிசம்பரில் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.
இதையடுத்து இந்த வழக்கின் தீர்ப்பினை 2017 பிப்ரவரியில் உச்சநீதின்றம் வழங்கியது. இதன்படி சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் குற்றவாளிகள் என சிறப்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்பை உறுதி செய்தது. இதையடுத்து 3 பேரும் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில் சசிகலா சிறைக்கு சென்று தற்போது இரண்டரை வருடங்களை நெருங்கிவிட்டது. கர்நாடக சிறைத்துறை அதிகாரிகள், சசிகலாவை நன்னடத்தை விதிகளின் கீழ் விடுவிப்பது குறித்து அம்மாநில அரசுக்கு பரிந்துரை கடிதம் எழுதியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்த கடிதத்தை அரசு ஏற்றுக்கொண்டால் அவர் வரும் டிசம்பர் மாதமே வெளிவர வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. சசிகலாவின் சிறை தண்டனை வரும் 2021ம் ஆண்டு முடிவுக்கு வருகிறது. நன்னடததை அடிப்படையில் அவரை ஓராண்டுக்கு முன்பே விடுவிக்கலாம். இதன்படி முடிவு எடுத்தால் அடுத்த ஆண்டு அவர் விடுதலை செய்யப்படலாம். ஆனால் இந்த ஆண்டு இறுதியிலேயே விடுதலை செய்யலாம் என சிறைத்துறை பரிந்துரைத்துள்ளதாக கூறப்படுகிறது.
மக்களவை, இடைத் தேர்தலில் அதிமுக தோல்வியை சந்தித்த நிலையில், சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா திடீரென அதிமுகவுக்கு ஒற்றைத் தலைமை வேண்டும் என்று தெரிவித்திருந்தார். இந்த கருத்துக்கு அக்கட்சியில் சிலர் ஆதரவு தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் சசிகலாவை நன்னடத்தை அடிப்படையில் விடுவிக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக வெளியான தகவலால், அவரே அதிமுகவிற்கு மீண்டும் தலைமை ஏற்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.