அதிமுக முன்னாள் எம்.பி அன்வர் ராஜா மீது குற்றப்பத்திரிகை தாக்கல்..!.? சிபிஐ கிடுக்கிப்பிடி விசாரணை !
இராமநாதபுரத்தைச் சேர்ந்த அன்வர் ராஜா கடந்த அதிமுக ஆட்சியில் பாராளுமன்ற உறுப்பினராகவும், வக்ஃபு வாரியத் தலைவராகவும் பதவி வகித்து வந்தார். அந்த காலகட்டத்தில் மதுரை வக்ஃபு கல்லூரியில் பேராசிரியர்கள், உதவிப் பேராசிரியர்கள் உள்ளிட்ட பதவிகளுக்கு ஆட்களை நியமித்ததில் பல கோடி ரூபாய் முறைகேடாக வசூலித்துக் கொண்டு பணி நியமனம் செய்ததாக அன்வர் ராஜா தலைமையிலான நிர்வாகத்தின் மீது உயர்நீதிமன்றத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
அப்போது இந்த வாழ்க்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி வேல்முருகன் இந்த வழக்கில், குற்றம் சாட்டப்பட்டுள்ள அமைச்சர் நிலோபர் கபில், பாராளுமன்ற உறுப்பினராகவும், வாரியத் தலைவராகவும் இருக்கும் அன்வர் ராஜா ஆகிய இருவரும் ஆளும் கட்சியின் உயர் பதவியில் இருப்பதால் இந்த வழக்கை மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் லஞ்ச ஒழிப்புத் துறை விசாரித்தால் உரிய நீதி கிடைக்காது, ஆகையால் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள சிபிஐ விசாரணை செய்ய வேண்டும் என உத்தரவிட்டார்.
இது சம்பந்தமாக நமது நாற்காலி செய்தி குழுவினர் சம்பந்தப்பட்ட கல்லூரியில் பல்வேறு கட்டங்களில் புலனாய்வு செய்து ஆதாரங்களைத் திரட்டி நமக்கு கிடைக்கப் பெற்ற வீடியோ, ஆடியோவில் உள்ள முக்கியமான தகவல்களை செய்திகளாக வெளியிட்டிருந்தோம். அதனை சிபிஐ அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றும், குற்றம் சுமத்தப்பட்ட நபர்கள் பதவி அதிகாரத்தைப் பயன்படுத்தி தப்பித்து வந்தனர்.
இந்நிலையில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு, வக்ஃபு கல்லூரியின் செயலாளராக இருந்த ஜமால் முஹம்மது சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வேல்முருகன் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யுமாறு, உச்ச நீதிமன்றத்தில் திமுக வழக்கறிஞர் வில்சன் மூலமாக மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு கடந்த 19 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது.
அப்போது சிபிஐ தரப்பில் ஆஜரான சீனியர் வழக்கறிஞர் ஹேமா, அன்றைய காலகட்டத்தில் உயர் பதவியில் இருப்பவர்களை விசாரணை செய்ய அப்போதைய முதல்வர், தலைமைச் செயலாளர் ஆகியோருக்கு சிபிஐ கடிதம் அனுப்பியது. அரசுத் தரப்பில் பதில் அனுப்பாமல் காலம் தாழ்த்தினர். அதன்பிறகு பலமுறை நினைவூட்டல் கடிதம் அனுப்பியும் பதில் தரவில்லை. அன்வர் ராஜா பாராளுமன்ற மேலவை உறுப்பினராக இருந்ததால் பாராளுமன்ற மேலவை தலைவருக்கும் கடிதம் அனுப்பி அனுமதி கோரப்பட்டது. பதில் வராததால் அவர்களை விசாரணை செய்யவில்லை.
இந்த வழக்கில் தலைவர், செயலாளர் உள்ளிட்ட உறுப்பினர்கள் 86 உதவிப் பேராசிரியர்கள் உள்ளிட்ட 37 பதவி நியமனத்தில், தவறு செய்ததற்கான அடிப்படை ஆதாரங்கள் உள்ளது. இந்த நிர்வாகத்தில் முக்கிய அங்கம் வகித்தவர் டாக்டர் அமானுல்லா. அவர் பலமுறை தலைவராக இருந்துள்ளார். ஆகையால் இந்த வழக்கை ரத்து செய்ய கூடாது என வாதிட்டார்.
பின்னர் வழக்கை விசாரித்த இரண்டு நீதிபதிகள் இந்த வாழ்க்கை ரத்து செய்ய இயலாது. வழக்கை விரைவாக விசாரணை செய்து குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யுங்கள். நிதி மன்றத்தில் தாக்கல் செய்வதற்கு முன் அந்த அறிக்கையை மூடி முத்திரையிட்ட கவரில் நிதிபதிகளிடம் வழங்குமாறு உத்தரவிட்டுள்ளனர்.
இந்நிலையில் கடந்த 19 ஆம் தேதி நீதிபதிகள் உத்தரவிட்டும் சிபிஐ அதிகாரிகள் இன்னும் நிலோபர் கபில், அன்வர் ராஜா, ஜமால் முஹம்மது, அமானுல்லா உள்ளிட்ட நிர்வாகிகள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய ஆயத்தமானதாக தெரியவில்லை.
இந்த வழக்கு சம்பந்தமாக கிடைக்கப்பெற்ற வீடியோ, ஆடியோ உள்ளிட்ட ஆதாரங்களை சிபிஐ அதிகாரிகளிடம் வழங்க இருப்பதாக தெரியவருகிறது.
மேலும் இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு நீதி கிடைப்பதோடு, குற்றம் சுமத்தப்பட்ட நபர்களுக்கு தண்டனை கிடைக்க வேண்டும் என்பதே பெரும்பாலானோரின் விருப்பமாக உள்ளது.