தமிழகம்

தமிழக அரசால் திரும்ப பெறப்பட்ட இலவச வீட்டு மனைப் பட்டா மாற்று இடத்தில் மீண்டும் வழங்க மருத்துவ சமூகத்தினர் கோரிக்கை

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் வசித்துவரும் மருத்துவ சமூக மக்களுக்கு 1993ஆம் ஆண்டு தமிழக அரசால் அன்றைய அதிமுக அரசு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கியது. ஆனால் இலவசமாக வழங்கிய வீட்டுமனைப் பட்டாவை மாற்று இடம் வழங்குவதாக வாக்குறுதி வழங்கி திரும்ப பெற்றுக் கொண்டது.

தமிழக அரசால் திரும்பப் பெறப்பட்ட இலவச வீட்டு மனைப் பட்டாவை மாற்று இடத்தில் மீண்டும் வழங்கக் கோரி பரமக்குடி வட்டாட்சியரிடம் மருத்துவ சமூகத்தினர் ஏராளமானோர் மனு அளித்தனர்.

இதுகுறித்து வட்டாட்சியரிடம் மனுஅளித்த மருத்துவர் சமூக பிரமுகர்கள் நமது செய்தியாளரிடம் கூறுகையில், “பரமக்குடி, எமனேஷ்வரம் பகுதிகளில் மருத்துவர் சமூக மக்கள் ஏராளமானோர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு 1993 ஆம் ஆண்டு ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது தமிழக அரசால் இலவச வீட்டுமனைப் பட்டா நூற்றி முப்பது நபர்களுக்கு தலா மூன்று சென்ட் வீதம் பரமக்குடி அருகே உள்ள காட்டுப் பரமக்குடி பகுதியில் வழங்கப்பட்டது. பின்பு அந்த இடத்தை அரசு கலைக்கல்லூரி கட்டுவதற்காக திரும்பப் பெற்றுக் கொண்டது. அப்போது திரும்பப் பெறப்படும் இடத்திற்குப் பதிலாக மீண்டும் வேறு இடத்தை வழங்குவதாக அதிகாரிகள் உறுதியளித்தனர். ஆனால் இன்று வரை தமிழக அரசு மருத்துவர் சமூக மக்களுக்கு மாற்று இடம் வழங்கவில்லை.

கடந்த பத்து வருடங்களாக தமிழகத்தின் அதிமுக அரசுதான் ஆட்சியில் இருக்கிறது. இருபத்தி ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக இப்பகுதியில் வசிக்கும் மருத்துவர் சமூக மக்கள் மாற்று இடம் வழங்கக் கோரி பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். அரசு அதிகாரிகளிடமும் பலமுறை மனுக்கள் அளித்தும் எந்தவித பலனும் கிடைக்கவில்லை. கடந்த நான்கு ஆண்டுகளாக தமிழகத்தை ஆட்சி செய்யும் எடப்பாடி தனது சொந்த மாவட்ட மக்களுக்கு மட்டும் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். ஆனால் கடந்த பல வருடங்களாக கஷ்டப்படும் மருத்துவர் சமூக மக்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும். வெற்றி நடைபோடும் தமிழகம் என்று செய்தித்தாள்களிலும், தொலைக்காட்சிகளிலும் விளம்பரம் தினசரி வருகிறது. முதல்வரும் பிரச்சாரத்தை துவக்கி தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்து வருகிறார். தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பாவது எங்கள் சமூக மக்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்.

ஏற்கெனவே தமிழக அரசால் மருத்துவர் சமூக மக்கள் நூற்றி முப்பது நபர்களுக்கு தலா மூன்று சென்ட் நிலத்தை வழங்கி திரும்பப் பெற்றுக் கொண்டது. அந்த நபர்களுக்காகவது உடனடியாக தமிழக அரசு இடத்தை ஒதுக்கி இலவச வீட்டு மனைப்பட்டாக்களை வழங்க வேண்டும் என எங்களது நீண்ட நாள் கோரிக்கைகளை அரசுக்கு வலியுறுத்தும் வகையில் பரமக்குடி வட்டாட்சியரிடம் கோரிக்கை மனுவினை வழங்கியிருக்கிறோம் என்றனர்.

இதுகுறித்து வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுக சார்பில் பரமக்குடி சட்டமன்றத் தொகுதியில் களம் காண இருக்கும் முன்னாள் மாவட்டப் பத்திரப் பதிவாளரும் திமுக நிர்வாகியுமான பாலு நமது செய்தியாளரிடம் கூறுகையில், மருத்துவர் சமூக மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்றி அந்த மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும். தற்போது உள்ள விலைவாசி ஏற்றத்தை சமாளிப்பதற்கு அந்த மக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகிறார்கள். வீட்டு வாடகையும் உயர்ந்துள்ளது. அன்றாட வாழ்க்கையை நடத்துவதற்கு போதிய வருமானமின்றி சிரமப்பட்டு வருகிறார்கள். ஆகையால் இந்த அரசு கடந்த பத்தாண்டு சாதனையாக இந்த மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான இலவச வீட்டுமனைகளை வழங்க கேட்டுக்கொள்கிறேன். இவர்கள் வழங்கத் தவறினால் திமுக ஆட்சி அமைந்ததும் மருத்துவர் சமூக மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்வதாக கூறினார்.

எது எப்படியோ மருத்துவர் சமூக மக்களின் நீண்டநாள் கோரிக்கைகள் நிறைவேறினால் சரி, ஆட்சியாளர்களும், அரசு அதிகாரிகளும் நிறைவேற்றுவார்களா? காத்திருப்போம்..

– வெ.சங்கர்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button