கொடைக்கானல் சுற்றுலாப்பயணிகள் வரத் தடை : கேள்விக்குறியாகும் வாழ்வாதாரம்..
கலங்கும் வணிகர்கள்…
திண்டுக்கல் மாவட்டத்திலிருக்கும் கொடைக்கானல், மலைகள் சூழ் சுற்றுலாத்தளமாக இருக்கிறது. உள்ளூர், வெளி மாவட்டம், வெளி மாநிலம் என ஆண்டுதோறும் பல லட்சம் சுற்றுலாப்பயணிகள் கொடைக்கானலுக்கு வருகை தருகின்றனர். இந்த நிலையில், கடந்த ஆண்டு தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததைத் தொடர்ந்து, சுற்றுலாத்தலங்கள் மூடப்பட்டன. கொடைக்கானலுக்கு வௌயூரிலிருந்து செல்வதற்குத் தடை விதிக்கப்பட்டது. இதனால், கொடைக்கானல் நகரில் வசிக்கும் சுற்றுலாவை மட்டுமே நம்பி இருக்கும், சாலையோரக் கடை வைத்திருப்பவர்கள், டாக்ஸி ஓட்டுநர்கள், குதிரை வைத்திருப்போர், சுற்றுலா வழிகாட்டிகள் என நூற்றுக்கணக்கானோர் வேலை இழந்தனர். அவர்களின் குடும்பத்தினர் உணவுக்கே கஷ்டப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டனர்.
இந்தநிலையில், தமிழகத்தில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துவரும் சூழலில், தமிழக அரசு, பல்வேறு கட்டுப்பாடுகளை பிறப்பித்துள்ளது. அவற்றில், சுற்றுலாத்தலங்களுக்கு உள்ளூர் மற்றும் வெளியூர் நபர்கள் செல்வதற்குத் தடைவிதிக்கப்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால், கொடைக்கானலுக்குச் செல்ல சுற்றுலாப்பயணிகளுக்கு அனுமதியில்லை. தற்போது கொடைக்கானலில் தங்கியுள்ள வெளியூர் நபர்களும் தங்கள் சொந்த ஊருக்குப் புறப்பட்டு வருகின்றனர்.
கடந்த ஆண்டு போலவே, தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என அஞ்சியிருக்கும் கொடைக்கானல் வாழ்மக்கள், தமிழக அரசின் ஊரடங்கு உத்தரவில், சுற்றுலாத்தலங்களுக்கு கட்டுப்பாடுகளுடன் விலக்கு அளிக்க வலியுறுத்தி, மூஞ்சிக்கல் என்ற இடத்தில் அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தில், சுற்றுலாவை மட்டுமே வாழ்வாதாரமாகக் கொண்டுள்ள சுமார் 500 பேர் கலந்துகொண்டார்கள்.
அவர்கள் கூறும்போது, “கடந்த ஆண்டு நாங்கள் சாப்பாட்டுக்கே ரொம்ப கஷ்டப்பட்டோம். இப்பதான் வாங்குன கடனையெல்லாம் அடைச்சுக்கிட்டு இருக்கோம். மே மாசம் சீசன் இருக்குறதுனால, மொத்தக் கடனையும் அடைச்சுறலாம்னு நினைச்சோம். திடீர்னு இப்படி ஒரு அறிவிப்பை தமிழக அரசு அறிவிச்சு எங்களைக் கலங்கவெச்சுட்டாங்க. கட்டுப்பாடுகளோட தளர்வு அறிவிச்சாலே நாங்க பிழைச்சுக்குவோம். இந்த சீஸனும் எங்களுக்குப் போயிருச்சுன்னா, எங்க வாழ்வாதாரமே போயிடும். பிச்சைதான் எடுக்கணும்” எனக் கலங்குகின்றனர்.
போராட்டம் ஒருபுறம் இருக்க கொடைக்கானல், பழநி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதியாக இருப்பதால், பழநி எம்.எல்.ஏ செந்தில்குமார், திண்டுக்கல் மாவட்ட கலெக்டரிடம், கோரிக்கை மனு ஒன்றை அளித்தார். தொடர்ந்து பத்திரிகையாளர்களிடம் பேசிய அவர், “கொடைக்கானல் நகர மக்கள் சார்பில், மக்கள் பிரதிநிதி என்ற முறையில், கலெக்டரைச் சந்தித்து கோரிக்கைவைத்தேன். கொடைக்கானலிலுள்ள கோட்டாட்சியர் தலைமையில், அனைத்துத் தரப்பினரையும் அழைத்துப் பேசி, இதற்குத் தீர்வுகாணப்படும் என என்னிடம் சொன்னார்கள்” என்றார்.
நீலகிரி மாவட்டத்தில் இந்த நடைமுறைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா செய்தியாளர்களைப் சந்தித்து பேசுகையில், “நீலகிரி மாவட்டத்திலுள்ள அனைத்துச் சுற்றுலாத் தலங்களும் மூடப்படும். சுற்றுலா நோக்கில் நீலகிரிக்கு வரும் பயணிகள் யாரையும் அனுமதிக்க முடியாது. ரெஜிஸ்ட்ரேஷன் முறை அமலில் இருக்கும். சுற்றுலாப்பயணிகள் யாரும் நீலகிரிக்கு வர வேண்டாம்“ என அரசின் உத்தரவுகளைத் தெரிவித்தார்.
இந்தச் செய்தியை அறிந்து அதிருப்தியடைந்த ஊட்டியிலுள்ள சிறு, குறு வணிகர்கள் ஒன்றாகச் சாலையில் திரண்டு அரசு தாவரவியல் பூங்காவிலிருந்து ஊர்வலமாக நடந்துவந்து சேரிங்கிராஸ் பகுதியில் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மறியலில் ஈடுபட்ட சிறு வணிகர்கள் கூறுகையில், “சுற்றுலாப்பயணிகளை நம்பியே எங்க வாழ்வாதாரம் இருக்கு. சுற்றுலாப்பயணிகள் வந்தா மட்டுமே எங்க பொழப்பு ஓடும். கோடை சீஸனான ஏப்ரல், மே மாசத்துல ஊட்டிக்கு அதிகம் டூரிஸ்ட் வருவது வழக்கம். போன வருசம் மார்ச்ல இருந்து செப்டம்பர் வரை சுற்றுலாப்பயணிகள் வர தடை விதிச்சாங்க. ஒரு வருஷமா ஒரு பொழப்பும் இல்லாம இருந்தோம்.
இந்த மார்ச் மாசம் சுற்றுலாப்பயணிகள் வருகை கொஞ்சம் கூடுச்சு. இப்போ மறுபடியும் ஊரடங்கு அறிவிச்சுட்டாங்க. கோடை சீஸனை நம்பி எல்லாரும் முதல் போட்டுட்டோம். எங்களுக்குச் சாப்பாட்டுக்கே வழி இல்லை. பாதிக்குப் பாதி டூரிஸ்ட்டையாவது அனுமதிக்கணும்“ என வேதனையுடன் தெரிவித்தார்.
இது குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் பேசினோம். “இவர்கள் தரப்பு கோரிக்கை அரசின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்படும்“ எனத் தெரிவித்தனர்.
– நமது நிருபர்