நாற்காலி செய்தி எதிரொலி
கோவை மாவட்டம் சூலூர் வட்டத்திற்கு உட்பட்ட சோமனூர் காரணம்பேட்டை சாலையில் நொய்யல் ஆற்றுப்பாலம் அருகே சாலையின் ஓரங்களில் இறைச்சிக் கழிவுகளும், காய்கறி கழிவுகளும் கொட்டப்பட்டதை புகைப்படத்துடன், அதனால் ஏற்படும் பிரச்சனைகள் பற்றியும் பொதுமக்களின் கோரிக்கைகளையும் செய்தியாக கடந்த இதழில் வெளியிட்டிருந்தோம்.
நமது இதழில் வெளியான செய்தியைப் படித்ததும் கருமத்தம்பட்டி செயல்அலுவலர் துரிதமாக செயல்பட்டு சாலை ஓரங்களில் கொட்டப்பட்டிருந்த இறைச்சிக் கழிவுகளையும், காய்கறி கழிவுகளையும் உடனடியாக ஜேசிபியை வைத்து சுத்தம் செய்து, சாலை ஓரங்களில் செடிகளை நட்டு சாலை ஓர பூங்கா அமைத்துள்ளார். செடிகளை பாதுகாக்க திரைகளையும் அமைத்து இங்கு குப்பைகளை கொட்டினால் அபராதம் விதிக்கப்படும் என அறிவிப்பு பலகையையும் வைத்துள்ளார்.
செயல்அலுவலரின் துரிதமான செயலுக்கு பொதுமக்களின் பாராட்டுக்கள் குவிந்தவண்ணம் உள்ளது. நமது இதழின் சார்பாகவும் கருமத்தம்பட்டி செயல்அலுவலருக்கு பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்வோம்.
திருப்பூர் மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டியாக மாற்றும் வகையில் திருப்பூரின் மையப்பகுதியில் அமைந்திருந்த பேருந்து நிலையம் இடிக்கப்பட்டு பணிகள் நடைபெறுவதால் தற்காலிக பேருந்து நிலையங்களில் அடிப்படை வசதிகள் இல்லாமல் பொதுமக்களின் கஷ்டங்களையும், கோரிக்கைகளையும் கடந்த இதழில் செய்தி வெளியிட்டு இருந்தோம்.
கடந்த இதழில் வெளியான செய்தியை படித்ததும் மாநகராட்சி அதிகாரிகள் துரிதமாக செயல்பட்டு தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ள பகுதிகளில் தற்காலிக கழிப்பிட வசதியும், நிழற்குடை வசதியும் உடனடியாக ஏற்பாடு செய்துள்ளது.
நமது நாற்காலி செய்தி இதழில் வெளியான பொதுமக்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றிய மாநகராட்சி அதிகாரிகளுக்கு பொதுமக்களின் சார்பாகவும், நமது இதழின் சார்பாகவும் பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
– சௌந்திரராஜன்