தமிழகம்

இலவசப் பேருந்து திட்டமும்… 131 கோடி பயணங்களும்…

பத்தாண்டுகளுக்குப் பின் கடந்த ஆண்டு மே மாதம் தமிழகத்தில் ஆட்சியை பிடித்தது திமுக. கடந்தாண்டு ஏப்ரல் மாதத்தில் தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. அந்த தேர்தலின்போது திமுக தேர்தல் வாக்குறுதியில், மாநகர அரசுப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவசப் பயணம், குடும்பத் தலைவிக்கு மாதம் 1,000 ரூபாய், சிலிண்டருக்கு 100 ரூபாய் மானியம் உள்ளிட்ட அறிவிப்புகளை அக்கட்சி வெளியிட்டது.

அதில், பெண்களுக்கு இலவசப் பேருந்து பயணம் மற்றும் பெண்களுக்கு மாதம் 1,000 ரூபாய் திட்டங்கள் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றன. அதனையடுத்து, தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டு மே 7ஆம் தேதி பதவியேற்றார். பதவியேற்ற அன்று சட்டப்பேரவைக்குச் சென்ற மு.க.ஸ்டாலின் அப்போதே பெண்களுக்கு மாநகரப் பேருந்துகளில் இலவசப் பயணம் செய்வதற்கான கோப்பில் கையெழுத்திட்டார். அதுமட்டுமின்றி, திருநங்கைகளுக்கும் இலவசப் பேருந்து பயணம் அளிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்த நிலையில் அந்த கோரிக்கையும் நிறைவேற்றப்பட்டது. கடந்த ஓராண்டு காலத்துக்கும் மேலாக தமிழ்நாடு முழுவதும் சாதாரண மாநகரப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவசப் பயணம் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த இலவசப் பயணம் மிகவும் பயனுள்ளதாக இருப்பதாக குறைந்த ஊதியத்திற்கு வீட்டு வேலை போன்ற பணிகளுக்குச் செல்லும் பெண்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர். தேசிய அளவிலும் இந்தத் திட்டத்துக்கு வரவேற்பு கிடைத்தது. இந்தநிலையில், மாநகரப் பேருந்திகளில் கடந்த ஓராண்டில் பெண்கள் 131 கோடி முறை இலவசப் பயணம் மேற்கொண்டுள்ளனர் என்று போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது. இதன்மூலம் 2,100 கோடி ரூபாய் அரசு செலவு செய்துள்ளதாக போக்குவரத்து துறை கூறியுள்ளது.

சரி, இந்த இலவசப் பயணம் பெண்களுக்கு ஏன் தேவை? எந்த விதங்களில் இந்த திட்டம் பயனளித்துள்ளது என்பதை தெரிந்துகொள்வோம். ஆண்களை மையமாகக் கொண்ட சமூகத்தில் பெண்களுக்கு அதிகாரம் அளிக்க தூண்டியது இந்த திட்டம். தமிழகம்- மக்கள் நலன் சார்ந்த மாநிலம், மக்கள் நிலையை படிப்படியாக மேம்படுத்த புதுமையான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதன் விளைவாக, தமிழக அரசு பெண்கள் நலன் மற்றும் அதிகாரமளிக்கும் திட்டத்தை அறிவித்து ‘இலவசப் பேருந்து பயணத் திட்டம்’ என்ற பெயரில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பெண்களுக்கும் இலவசப் பயணத்தை வழங்கியது. பெண்களின் நடமாட்டத்தை அதிகரிக்க தமிழக அரசால் இத்திட்டத்தின் நோக்கம் அறிவிக்கப்பட்டது. இந்தத் திட்டம் பெண்கள் வெளியே வருவதையும் அவர்களின் சேமிப்பையும் அதிகரித்துள்ளது.

இந்தியா முழுமைக்கும் மக்களுக்கான புதுமையான இலவசத் திட்டங்களை செயல்படுத்துவதில் தமிழ்நாடு முன்மாதிரியாக உள்ளது. முன்னதாக, தமிழக அரசு, குறிப்பாக வறுமைக் கோட்டில் உள்ள மக்களுக்கு இலவசங்களை வழங்கியது. பொருளாதார மற்றும் கல்வி மேம்பாட்டை மேம்படுத்த சில மின்னணு பொருட்கள் வழங்கப்படுகின்றன. இப்போது ஒரே மாதிரியான திட்டங்கள் மற்றும் நிரல்களுக்கு அப்பால் சில திட்டங்கள் மாறிவிட்டன. கருத்தியல் ரீதியாக, அனைத்து பெண்களுக்கும் இலவசப் பயணத்தை அரசு அறிவித்தது, இது பெண்களின் நிலையை நேரடியாகவோ, மறைமுகமாகவோ மேம்படுத்தும்; இந்த சமூகத்தில் பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் ஒரு அற்புதமான தன்மையாக இருக்கும் என பலர் தங்களின் பார்வையை முன்வைத்தனர்.

ஊதியத்தை பொறுத்தவரை பெண்களின் பங்கேற்பு சமூக- பொருளாதார மற்றும் கலாச்சார பிரச்சனைகள் மற்றும் தொழிலாளர் சந்தை வாய்ப்பு கட்டமைப்பில் சமச்சீரற்ற தன்மை ஆகியவற்றால் கட்டுப்படுத்தப்படுகிறது. இதில் ஒரு முக்கியமான காரணி, அவர்களின் இயக்கம் (சமூக பங்கேற்பு அல்லது நடமாட்டம்), அதாவது கல்வி மற்றும் பணியிடங்களுக்கு நம்பகமான மற்றும் பாதுகாப்பான போக்குவரத்து முறைகளுக்கான அணுகல். கல்வி கற்கும் மாணவிகள் மற்றும் வேலை செய்யும் பெண்கள்- தமிழகம் முழுவதும்- நகராட்சி பெண் ஊழியர்கள், வீட்டு பணி செய்பவர்கள், தொழிலாளர்கள், பூ விற்பனையாளர்கள், சுகாதார நிபுணர்கள், ஆசிரியர்கள் அல்லது பெண் காவலர்களுக்கு பேருந்துகளே அவர்களின் உயிர்நாடி.

உண்மையில், இலவசப் பயணம் அதிகமான பெண்களை பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்த ஊக்குவித்தது, பொது இடங்களில் அவர்களின் இருப்பை அதிகரித்தது. இது சமூகத்தில் பாதுகாப்பை அதிகரித்ததோடு அதிகமான பெண்களை அவர்களின் வீட்டிற்கு வெளியே கொண்டு வந்து சமூக நிகழ்வுகளோடு கலக்க வைத்தது. இந்தியா முழுவதும், மாணவர்கள், பெண்கள், திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்களுக்கான பயணச் சலுகையை அவசரமாக அறிமுகப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் உள்ளது. இலவசப் பயணக் கொள்கையானது பொருளாதாரத்தில் பல விளைவுகளை ஏற்படுத்துவதோடு இந்தியாவின் கொரோனாவுக்குப் பிந்தைய மீட்சி மற்றும் வளர்ச்சியில் ஒரு மாற்றப் புள்ளியாக அமையும் என துறை சார்ந்த வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.

இத்திட்டத்திற்கு நல்ல வரவேற்பு வந்தாலும், தொடக்கத்தில் சில எதிர்வினைகளும் வந்தன. தொடங்கப்பட்ட ஓராண்டில் இத்திட்டம் பெண்களுக்கு பல நன்மைகளை வகுத்துள்ளது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. எந்த சமூகத்திலும் விளிம்பு நிலை மக்களுக்காக ஒரு திட்டம் கொண்டுவரப்படுகிறது என்றால் அது நிச்சயம் சமூக நீதிக்குள் வந்துவிடும். அதே போலதான் இந்த திட்டமும். எல்லா தரப்பு பெண்களும் இந்த சமூகத்தில் தங்களை நிலைநாட்ட இந்த திட்டம் உதவியுள்ளது. மக்களுக்கு உதவும் எந்த திட்டத்தையும் செயல்படுத்தவேண்டியது அரசின் கடமை. அதில் செலவு/நஷ்டம் வருவதும் இயல்பு; அதை சமாளிப்பதுதான் அரசின் திறன்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button