திருப்பூருக்கு ரெட் அலர்ட் !? வடமாநில தொழிலாளர்களை கடத்தி பணம் பறிக்கும் கும்பல்…. 8 பேர் கைது!
திருப்பூர் மாவட்டம் பின்னலாடை துறையில் சர்வதேச அளவில் ஆண்டொன்றிற்கு 26 ஆயிரம் கோடி அளவிற்கு அன்னிய செலவாணியை ஈட்டித்தரும் நகரமாகும். மேலும் இத்தொழிலை நம்பி சுமார் 10 லட்சம் பேர் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஈடுபட்டுள்ளனர். மேலும் பின்னலாடை துறையில் தொழிலாளர்களாக வட மாநிலத்தை சேர்ந்த லட்சக்கணக்கானவர்கள் திருப்பூரில் தங்கி பணியாற்றிவருகின்றனர்.
மேலும் திருப்பூரில் பணியாற்றும் தொழிலாளர்களின் உழைப்புக்கேற்ற ஊதியம் கை நிறைய கிடைப்பதால் அடுத்த கட்டமாக நிறுவனங்களில் ஒப்பந்தம் முறையில் தொழிலாளர்களை வைத்து தொழிலில் ஈடுபடுகின்றனர். இதனால் ஒப்பந்த தொழிலில் ஈடுபடும் வடமாநிலத்தவர்களிடம் அதிக அளவில் பணம் சம்பாதிக்கின்றனர். இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக வடமாநில தொழிலாளர்களையும், ஒப்பந்ததாரர்களையும் கடத்தி பணம் பறிக்கும் சம்பவம் அரங்கேறியுள்ளது.
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த அருள்புரத்தில் தங்கி சின்னக்கரையில் ஒப்பந்ததாராக வேலைபார்த்துவரும் மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த சுமன் என்பவர் 8 பேர் கொண்ட கும்பலால் பணம் கேட்டு கடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று முந்தினம் சுமனை தொடர்பு கொண்ட அஸ்ஸாம் மாநிலத்தை சேர்ந்த ரஃபிக் உல் இஸ்லாம் என்பவர் தொழில் நிமித்தமாக பேச இரு சக்கர வாகனத்தில் அருள்புரத்தை அடுத்த உப்பிலிபாளையத்தில் அமைந்துள்ள அம்மா பூங்கா அருகே உள்ள வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளான். அப்போது வீட்டில் மேலும் 7 பேர் இருந்துள்ளனர். பின்னர் வீட்டினுள் சென்ற சுமனை அங்கிருந்தவர்கள் தாக்கி ஒரு லட்சம் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். இதனையடுத்து சுமனின் செல்போனில் இருந்து அவனது நண்பர்களுக்கு போன் செய்து பணம் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் வட மாநில தொழிலாளி கடத்தப்பட்டு பணம் கேட்டு மிரட்டிய தகவல் பல்லடம் போலீசாருக்கு கிடைத்தது. இதனை அடுத்து போலீசார் விரைந்து சென்று அம்மா பூங்கா அருகே உள்ள வீட்டைச் சுற்றிவளைத்து அங்கிருந்த 8 பேரையும் கைது செய்து பல்லடம் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
விசாரணையில் வட மாநில தொழிலாளர்களை கடத்தி பணம் பறிக்கும் கும்பலைச் சேர்ந்த புதுக்கோட்டை அஜீத் குமார் மற்றும் சிவகங்கௌயை சேர்ந்த அழகு சுப்பிரமணியம்,அஸ்ஸாமை சேர்ந்த ஷமீம் உஸ்மான், உப்பிலிபாளையத்தை சேர்ந்த ராஜசேகர் மற்றும் ஹரிஹரன், சிவகங்கையை சேர்ந்த பழனிக்குமார், மனோ பாலா, மேற்கு வங்கத்தை சேர்ந்த ரஃபி உல் அஸ்லாம் என்பதும் தெரிய வந்தது. மேலும் அஜீத் குமாரும், அழகு சுப்பிரமணியமும் ஏற்கனவே கடந்த 2021 ஆம் ஆண்டு வட மாநில தொழிலாளர்களை கடத்தி பணம் பறித்த வழக்கில் குண்டர் சட்டத்தில் கீழ் கைது செய்யப்பட்டு சமீபத்தில் தான் விடுதலையாகி வந்துள்ளனர். இருவரும் தற்போது மீண்டும் ஆள்கடத்தலில் ஈடுபட்ட அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் ஒப்பந்ததாராக தொழில் செய்து அதிக அளவில் பணம் சம்பாதிக்கும் வடமாநில தொழிலாளர்களை குறி வைத்து வட மாநில தொழிலாளர்களை வைத்தே கடத்தி வந்து அடைத்து துன்புறுத்தி பணம் பறிக்கும் வேளையில் ஈடுபட்டுள்ளதும் தெரியவந்துள்ளது. மேலும் இது போன்று பலரை கடத்தி பணம் பறிக்கும் செயலில் ஈடுபட்டுள்ளனரா? என்கிற கோணத்தில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
மேலும் இந்த கடத்தல் சம்பவம் திருப்பூருக்கு விடப்பட்ட ரெட் அலர்ட்டாகவே தொழில் துறையினர் கருதுகின்றனர். மேலும் திறமையாக செயல்பட்டு கடத்தல்காரர்களை பல்லடம் காவல்துறையினர் சுற்றிவளைத்து கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.