மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பேராசிரியர் கைது! : ஜாமீனுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் போராட்டம்

கரூர் தான்றிதோன்றிமலையில் இயங்கி வருகிறது அரசு கலைக் கல்லூரி. இந்தக் கல்லூரி தன்னாட்சி அந்தஸ்து பெற்ற பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும், 60 ஆண்டுகள் பழைமை வாய்ந்த கல்லூரி ஆகும். இந்தக் கல்லூரியில் 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.
பொருளியல் துறையில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்புடன், ஆய்வு படிப்பும் உள்ளது. இக்கல்லூரியில் பாலியல் புகாருக்கு ஆளான பேராசிரியர் இளங்கோவன் பொருளியல் துறைக்குத் தலைவராகவும் இருக்கிறார். இவருக்கு வயது 52. கடந்த சில நாள்களுக்கு முன்பு இளங்கலை முதலாமாண்டு, இரண்டாமாண்டு மாணவ, மாணவிகளிடம் பாலியல் ரீதியான துன்புறுத்தல் கொடுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து பாதிக்கப்பட்ட மாணவிகள் புகார் அளித்துள்ளனர்.

ஆனால், கல்லூரி நிர்வாகம் இளங்கோவன் மீது இப்போதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால், மாணவ, மாணவிகள் கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளனர்.
இளங்கோவனை விசாரித்து துறை ரீதியாக நடவடிக்கை எடுக்குமாறு, கல்லூரி நிர்வாகத்துக்கு காவல்துறை தரப்பில் பரிந்துரை செய்யப்பட்டது. இந்தச் சூழலில், விடுமுறையில் சென்று கல்லூரி திரும்பிய இளங்கோவனின் வருகையை எதிர்த்து மாணவ, மாணவிகள் வகுப்புப் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். பொருளியல் துறை மாணவிகளுக்கு இளங்கோவன் பாலியல் துன்புறுத்தல் கொடுத்தது குறித்து புகார் அளித்தும், அவர் மீது நடவடிக்கை மேற்கொள்ள கல்லூரி முதல்வர் தாமதப்படுத்துகிறார் என மாணவர்கள் குற்றம்சாட்டினர்.
பாலியல் சர்ச்சையில் சிக்கிய இளங்கோவன் மீது 7 ஆண்டுகளுக்கு முன்பு பாதிக்கப்பட்ட மாணவிகள் சார்பில் பாலியல் புகார் அளிக்கப்பட்டது. இப்படி செல்லும் இடமெல்லாம் கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வரும் இளங்கோவனை பணி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் மாணவர்கள் வலியுறுத்தினர்.
மாணவ, மாணவிகளின் குற்றச்சாட்டு தொடர்பாக கல்லூரியின் பொறுப்பு முதல்வர் ரவிச்சந்திரனிடம் கேட்டபோது, 5 பேர் கொண்ட குழு அமைத்து இளங்கோவனிடம் விசாரணை மேற்கொண்டு மாநில கல்லூரித்துறை இயக்குனரிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகக் கூறினார். மாணவர்களின் போராட்டம் குறித்து தகவலறிந்து வந்த போலீசார், இளங்கோவனை காவல்நிலையம் அழைத்துச் சென்று 5 மணிநேர விசாரணைக்கு பிறகு பேராசிரியர் இளங்கோவனை போலீசார் கைது செய்தனர்.

இந்நிலையில், ஜாமீன் வழங்கக் கோரி இளங்கோவன் சார்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு கரூர் குடும்ப நல நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இதையறிந்த அரசு கலைக் கல்லூரி மாணவிகள், மாணவர்கள் என 50-க்கும் மேற்பட்டோர் நீதிமன்றத்தில் திரண்டனர். இளங்கோவனுக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என அவர்கள் கோஷமிட்டனர். இதனால் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து, போலீஸார் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். அதன் பின்னரும் நீதிமன்றத்துக்கு வெளியே மாணவ, மாணவிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், பேராசிரியர் இளங்கோவனின் ஜாமீன் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்ததுடன், பாதிக்கப்பட்ட மாணவிகளை அழைத்து விசாரணை நடத்தினார்.