மாவட்டம்

பல்லடத்தில் கரண்ட் அலுவலகத்திற்கே ஷாக் கொடுத்த விஜிலென்ஸ் ! பொறியில் சிக்கிய பொறியாளர் !

திருப்பூர் மாவட்டம், பல்லடம் அண்ணா நகரில் செயல்பட்டுவரும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் நகர மின் பகிர்மான அலுவலகத்தில் உதவி பொறியாளராக பணியாற்றி வருபவர் மதுரை மாவட்டத்தை சேர்ந்த சுரேஷ்பாபு (59). இவர் பணி ஓய்வு பெறுவதற்கு இன்னும் 4 மாதங்களே உள்ளது.

இந்நிலையில் அண்ணா நகர் பகுதியை சேர்ந்த பைசல் அகமது என்பவர் தனது வீட்டில் புதிதாக மாடி வீடு கட்டியுள்ளார். அந்த வீட்டிற்கு மின் இணைப்பு கோரி மின் வாரிய அலுவலகத்தை அணுகியுள்ளார். மின் இணைப்பு பெற நிர்ணயிக்கப்பட்ட கட்டணமாக கடந்த மே மாதம் ரூ.5,199/- ஐ செலுத்திய நிலையில் உதவி பொறியாளரை சந்தித்துள்ளார் பைசல் அகமது.

அப்போது அலுவலக பணியில் இருந்த சரவணன் என்பவர் பைசலிடம் மின் இணைப்பு பெற உதவி பொறியாளர் சுரேஷ்பாபு ரூபாய் 5,000 லஞ்சமாக கேட்பதாக கூறியுள்ளார். இந்நிலையில் அதிர்ச்சி அடைந்த பைசல், லஞ்சம் கொடுக்க மனமின்றி திருப்பூர் லஞ்ச ஒழிப்பு துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவலை அடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசாரின் ஆலோசனையின் பேரில் ரசாயனம் தடவிய பணம் 5000 த்தை பல்லடம் அலுவலகத்தில் பொறியாளர் சுரெஷ்பாபுவிடம் கொடுத்துள்ளார்.

அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு துறை ஆய்வாளர் சசிலேகா தலைமையிலான போலீசார் சுற்றி வளைத்து சுரேஷ்பாபுவை கையும் களவுமாக பிடித்துள்ளனர். பின்னர் சுரேஷ் பாபுவிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நான்கு மாதத்தில் ஓய்வு பெற வேண்டிய உதவி பொறியாளர் சுரேஷ் பாபு 5000 ரூபாய்க்கு ஆசைப்பட்டு கம்பி எண்ண வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button